Friday 8 November 2019

நல் இணக்கம்

சென்னையில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கு வயது 80. ஒரு உற்பத்தி நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர். வாரிசுகள் அமெரிக்காவில் இருக்கின்றனர். இவரும் அவ்வப்போது மனைவியுடன் அமெரிக்கா சென்று வருவார். சமீபத்தில் கூட சென்று வந்தார். அவரது பூர்வீகம் மயிலாடுதுறைக்குப்  பக்கத்தில் ஒரு சிற்றூர். அவரது மூத்த சகோதரர் அங்கே வசித்தார். சென்ற ஆண்டு அவர்  உடல்நலமின்றி மருத்துவமனையில் ஒரு வாரம் இருந்தார். அப்போது பகல் பொழுதுகளில் நான் அங்கு செல்வேன். உடனிருப்பேன். தேவையானதை  ஏற்பாடு செய்து தருவேன். அவருக்கு 94 வயது. உணவு மிகக் குறைவாகவே எடுத்துக் கொள்வார். உறங்குவார். அவ்வப்போது விழித்திருப்பார். நான் அவருடைய கட்டிலுக்குப் பக்கத்தில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு அவர் மகனுடன் அமர்ந்திருப்பேன். பெரும்பாலான நேரம் அறையில் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருப்போம். அந்த முடியாத நிலையிலும் தன் வயலில் என்ன வேலை நடைபெறுகிறது என்பதை திக்கித் திணறி கேட்பார். ‘’இன்று நடவுக்கு ஆள் வந்ததா?’’, ’’பாய்ச்சல் எப்படி உள்ளது?’’ இவ்வாறான கேள்விகள் அவரிடமிருந்து வரும். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி சில நாட்கள் வீட்டில் இருந்தார். பின்னர் காலமானார். மருத்துவமனையில் நான் உடனிருந்ததால் அந்த ஊர்க்காரர்கள் பலர் எனக்கு அறிமுகமாகி பரிச்சயமானார்கள். சென்னை நண்பரின் பள்ளித் தோழர் ஒருவர் அங்கே இருக்கிறார். இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். சென்னை நண்பர் அவரைச் சென்று சந்திக்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். நான் இன்று காலை சென்றேன்.

ஹாலில் இருந்த பூஜை ஷெல்ஃபில் விளக்கு சுடர் விட்டுக் கொண்டிருந்தது. மலர் அர்ப்பணிக்கப்பட்டிருந்த சுவாமி படங்கள் முன் நின்று பாடிக் கொண்டிருந்தார். நான் சோஃபாவில் அமர்ந்து கொண்டேன்.

வித்தாகி முளையாகி விளைவ தாகி விளைவிக்கும் பொருளாகி மேலு மாகிக்
கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகிக் குறைவாகி நிறைவாகிக் குறைவி லாத
சத்தாகிச் சித்தாகி இன்ப மாகிச் சதாநிலையாய் எவ்வுயிர்க்குஞ் சாட்சி யாகி
முத்தாகி மாணிக்க மாகித் தெய்வ முழுவயிரத் தனிமணியாய் முளைத்த தேவே.

கணீர் குரலில் பாடினார். திருவருட்பாவாக இருக்குமோ என்று யோசித்தேன்.

தண்ணமுத மதிகுளிர்ந்த கிரணம் வீசத் தடம்பொழிற்பூ மணம்வீசத் தென்றல் வீச
எண்ணமுதப் பளிக்குநிலா முற்றத் தேஇன் இசைவீசத் தண்பனிநீர் எடுத்து வீசப்
பெண்ணமுதம் அனையவர்விண் ணமுதம் ஊட்டப் பெறுகின்ற சுகமனைத்தும்      பிற்பட் டோடக்
கண்ணமுதத் துடம்புயிர்மற் றனைத்தும் இன்பங் கலந்துகொளத் தருங்கருணைக் கடவுள் தேவே.

தண்ணமுதம் என்ற சொற்சேர்க்கை பரவசமூட்டியது. தண் – தட்பம் –தணிதல்.

தண்ணமுத மதி – நிலவு என்பதே மிகவும் குளிர்ச்சியானது. அமுத மதி என்பது அமிர்தமாய் உயிரளிக்கும் நிலவு. தண்ணமுத மதி – அமுதமாய் உயிரளிக்கும் குளிர்ந்த மதி. ஒரே வார்த்தையில் தமிழ் நெடுந்தூரம் சென்று விடுகிறது.

இனிதினும் இனிதான இதைப் போன்ற பலதையும் பின்னுக்குத் தள்ளக்கூடியது இறைமையின் கருணை.

பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம் புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும் கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந் தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச்
செங்குமுத மலரவரு மதியே எல்லாம் செய்யவல்ல கடவுளே தேவ தேவே.
அடுத்த பாடலைப் பாடினார்.

’’பொங்குபல சமயமென்னும்’’ என்பதைக் கேட்பதுமே அவர் பாடுவது திருவருட்பா என்பதை உறுதி செய்து கொண்டேன்.

ராமகிருஷ்ணர் கூறும் கதை: நதிகள் வெவ்வேறு இடத்தில் தோன்றி வெவ்வேறு இடங்களில் பாய்ந்தாலும் சேருமிடம் நதிகளுக்கு கடலே. சமயங்கள் பலவாயினும் அவை இறைமையையே இறுதி நோக்கமாய்க் கொண்டுள்ளன.

திடீரென,
ஆறிரு தடந்தோள் வாழ்க  ஆறுமுகம் வாழ்கவெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்கசெவ்வேள்
ஏறிய மஞ்சை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்.
என்று முழக்கமிட்டார்.

இந்த பாடல் திருப்புகழாயிற்றே என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில்,

அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.
என தெய்வங்களுக்கு ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தத்திலிருந்து வாழ்த்து கூறினார்.

உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.

மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.
என்று பாடிய போது இது அபிராமி அந்தாதியாயிற்றே என்ற எண்ணம் எழுந்தது.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்-பரா சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி -ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

கணபதி ராயன்-அவனிரு
காலைப் பிடித் திடுவோம்;
குண முயர்ந் திடவே-விடுதலை
கூடி மகிழ்ந்திடவே 
                                              
சொல்லுக் கடங்காவே-பரா சக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி
வாழியென்றேதுதிப்போம்.                                 

வெற்றி வடிவேலன்-அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ!-பகையே!
துள்ளி வருகுது வேல்.                                       

தாமரைப் பூவினிலே-சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே-கண்ணி லொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம்.                                 

பாம்புத் தலைமேலே-நடஞ் செயும்
பாதத்தினைப் புகழ்வோம்;
மாம்பழ வாயினிலே-குழலிசை
வண்மை புகழ்ந்திடுவோம்.                                

செல்வத் திருமகளைத்-திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்;
செல்வமெல்லாம் தருவாள்-நமதொளி
திக்க னைத்தும் பரவும். 

என்று பாரதியார் பாடலைப் பாடி பாமாலையை நிறைவு செய்தார். பின்னர் தெய்வ உருவங்களுக்கு சுடராட்டு. மணியோசை ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு கையில் சுடர். இன்னொரு கையில் மணி. யாவுமான பரம்பொருளுக்கு ஓர் எளிய பக்தனால் செய்யப்படும் ஒரு வேளை பூசனை.

தங்களுக்குள் முரண்படும் சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், கௌமாரம் மற்றும் சௌரம் என்ற ஆறு மார்க்கங்கள். ஆனால் இந்த முதியவரின் பூசனையில் இவை அனைத்துமே இணைந்துள்ளன. ஆதி சங்கரர் ஷண்மத ஸ்தாபிதம் செய்தவர். ஆதி சங்கரர் உணர்ந்ததை இந்த எளிய முதியவரும் தன்னளவில் அறிந்திருக்கிறார் அல்லது ஆதி சங்கரர் உணர்ந்தது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த முதியவரைப் போன்ற கோடானு கோடி மக்கள் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று எண்ணிக் கொண்டேன்.