Thursday 7 November 2019

சாதியும் சமூகமும்



இந்தியாவில் தமிழ்ச்சமூகத்தில் ஜாதியைப் பற்றி புரிந்து கொள்ள நாம் அதனை வரலாற்று உணர்வுடன் அணுக வேண்டும். ஏழாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான  வரலாறு கொண்ட இந்திய சமூகங்களைப்  பற்றி வெவ்வேறு காலகட்டங்களைக் கற்பனை மூலம் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும். நாம் இப்போது பொதுவாக ஜாதி குறித்த எண்ணங்களை  கருத்துக்களை ஜனநாயகக் காலகட்டத்திலிருந்து புரிந்து கொள்கிறோம். ஜனநாயகக் காலகட்டம் என்பதும் ஒரு பொதுவான வகைபாடே. சமூகம் பல்வேறு கூறுகளால் நாளும் மாறி வரும் தன்மை கொண்டது. அம்மாற்றம் அரசியல், சமூக, பொருளியல் நிகழ்வுகளால் நடக்கும்.

இன்று சமூகங்கள் கொள்ளும் ஜாதி உணர்வுக்கும் ஜனநாயக அரசியலுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. நாம் ஒரு வரலாற்று நிகழ்விலிருந்து தொடங்குவோம். மகாத்மா காந்தி இந்திய அரசியலுக்கு வருகிறார்.

அப்போது நடப்பது பிரிட்டிஷ் ஆட்சி. இந்திய சமூகம் நிலப்பிரபுத்துவ சமூகமாய் இருக்கிறது. பெரும் அதிகாரம் கொண்டதில்லை எனினும் இந்திய அரசியல் அதிகார மையங்களில் கல்வியறிவு பெற்றிருந்த சாதிகளும் வணிக  சாதிகளும் செல்வந்தர்களும் மட்டுமே இருந்தனர். வாக்குரிமை படித்தவர்களுக்கும் வரி செலுத்துபவர்களுக்கும் மட்டுமே இருந்தது. அன்றைய எழுத்தறிவே வெறும் பதினைந்து சதவீதம் தான்.
அன்றைய வாழ்க்கை என்பது பெரும்பாலும் ஒரு கிராமத்துக்குள்ளேயே முடிந்து விடும். விவசாயம்  மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலுடன் முடிந்து விடும். தன் கிராமத்தை விட்டு வெளியே செல்லாமல் வாழ்ந்து முடிந்தவர்களே நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது சதவீதம் இருப்பார்கள். கிராமத்தைத் தாண்டி திருமணங்கள் நடக்காது. ஏனென்றால் அவர்களுக்கு கிராமத்தைத் தாண்டி எவ்விதமான தொடர்புகளும் இருக்காது.

காந்தி காங்கிரஸை வழிநடத்தும் போது காங்கிரஸுக்குள் சாமானியர்களைக் கொண்டு வருகிறார். காங்கிரஸ் ஆண்டு உறுப்பினர் சந்தா நாலணா (இருபத்து ஐந்து பைசா) என்கிறார். இருபத்து ஐந்து பைசா செலுத்தி உறுப்பினர் ஆகும் ஒருவர் இந்தியாவின் மிகப் பெரிய கட்சியின் உறுப்பினர். அவரைப் போன்ற கோடானு கோடி மனிதர்களால் நடத்தப்படுகிறது காந்தியின் காங்கிரஸ். மக்களால், மக்களுக்காக, மக்களுடைய கட்சி. அது ஒரு குறியீட்டுச் செயல்பாடு. பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் ஏற்படுத்தியிருக்கும் மனிதர்களால் ஆன வலைப்பின்னலை விட எண்ணிக்கையில் அதிகமான வலைப்பின்னலைக் கொண்ட கட்சி. பிரிட்டிஷாருக்கு அச்செயல் எவ்விதம் பொருளளித்திருக்கும் என்பதை கற்பனை செய்ய முடிகிறது. எள்ளி நகையாடியிருப்பர். சொந்தமாக சொத்து இல்லாதவனையும் தன் பெயரைக் கூட எழுதத் தெரியாதவனையும் வைத்துக் கொண்டு கேஸ் இல்லாத இந்த வக்கீலால் என்ன செய்ய முடியும் என்று நினைத்து நினைத்துச் சிரித்திருப்பார்கள். ஆனால் அந்த நாலணா ஒரு குறியீடு. சாமானியன் ஒரு சாம்ராஜ்யத்தை எதிர்க்க தனது முதல் செயலைத் தொடங்கி விட்டான் என்பதற்கான குறியீடு அது. அல்லற்பட்டு ஆற்றாது அழுதவன் கண்ணீர் ராஜமாளிகைகளைப் பெயர்த்தெறியப் போகிறது என்பதன் முதல் மணி.

பிரிட்டிஷாருக்கு மட்டுமல்ல காங்கிரஸில் இருந்த தலைவர்களுக்குமே அது ஒரு உறுதியான விஷயத்தை உணர்த்தியது. இங்கு நடப்பவை அனைத்துமே இந்தியாவின் எளிய மனிதர்களுக்காகவே. நீங்கள் பதவி பெறலாம்; சலுகைகளிலேயே முழு வாழ்க்கையும் வாழலாம்; ஆனால் உங்கள் அரசியல் வாழ்விலிருந்து எளிய மனிதனை நீக்கி விட முடியாது. எளிய மனிதனை ஓர் பொருட்டாக எண்ணாமல் எளிய மனிதன்  தேவைகளை நிறைவேற்றாமல் அவனது கோரிக்கைகளுக்கு செவி மடுக்காமல் இந்திய ஜனநாயகம் இயங்க முடியாது.

காந்தியின் அரசியல் சமூகப் பிரங்ஞையை உருவாக்குவதையும் அதற்கான கல்வி அளிப்பதையும் தன் இயங்குமுறையாய்க் கொண்டது. அதிகாரம் குவிந்திருக்கும் பெருமையங்களின் செயல்பாட்டை விட பரவலாக்கப்பட்ட அதிகாரம் ஜனநாயக அரசியலில் பெரும் அளவில் உதவும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். அரசியல், பொருளாதாரம், சட்டம் மற்றும் கல்வி ஆகியவை குறித்து அவருக்கு பரந்த விரிவான அறிவு இருந்தது. ஒரு முன்னுதாரணமான குடிமைச் சமூகத்தை உருவாக்கிட முடியும் என்ற நம்பிக்கையே அவரை அரசியல் செயல்பாட்டாளராக இயங்கச் செய்தது.

சாதிகள் அரசியல் அதிகாரத்துக்குக்காக திரள்தல் என்பது காந்தி அவர்களை அரசியலுக்குள் கொண்டு வந்த பின்னரே நிகழத் துவங்கியது. இந்திய வரலாற்றில் யாரெல்லாம் காந்தியைத் தீவிரமாக எதிர்த்தார்களோ அவர்களே அவர் உருவாக்கிக் கொடுத்த சாமானியர்களுக்கான அரசியலின் பலனை அனுபவித்தார்கள். சிறந்த உதாரணம் : திராவிட இயக்கம். திராவிட இயக்கம் சாமானியர்களின் அதிகார விருப்புடன் உரையாடியது. வெறுப்பைத் தூண்டி விட்டது இந்திய ஒருமைப்பாடே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தடையானது என்ற பொய் பரப்புரையால் தொடர்ந்து மக்களாட்சியின் அதிகாரத்தில் இருந்து வந்தது. அவர்கள் அளித்த அரசியல் கல்வியால் தமிழ்ச் சமூகத்தில் விளைந்த ஆக்கபூர்வமான மாற்றம் என்ன என்பதை யோசித்துப் பார்க்கலாம். இலங்கையில் தமிழர்கள் பெரும்பாலானோராக வாழ்ந்த பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தமிழ்நாட்டின் திராவிட அமைப்புகளால் தொடர்ந்து ஆதரிக்கப் பெற்ற எல்.டி.டி.ஈ அமைப்பால் அங்கு அப்படி என்ன சமூக மாற்றம் நிகழ்ந்து விட்டது என்பதையும் இதனுடன் சேர்த்து யோசிக்க முடியும்.

சமூகம் பல கூறுகளைக் கொண்டது. அதில் அரசியல் அதிகாரம் ஒன்று. அவ்வளவே. மாற்றம் நிகழ வேண்டும் என்று நினைப்பவர்கள் கல்வி, பொருளாதாரம், விழுமியங்கள் ஆகியவற்றிலேயே மாற்றத்தை ஏற்படுத்துவர். மானுடம் இன்னும் மேலான வாழ்வை மண்ணில் உருவாக்கிக் கொள்ள சிந்திக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமே உள்ளது.