Friday 7 February 2020

முன்னேற்பாடுகள்

என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை. சாதாரண ஜி.எஸ்.எம் ஃபோனை மட்டுமே பயன்படுத்துகிறேன். அதையும் பலநேரம் அணைத்து வைத்தால் என்ன என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஒரு பணியை ஒருங்கிணைந்து செய்ய அலைபேசி உபயோகமானது. 2020ம் ஆண்டு மேற்கொள்ளும் ‘’வாழ்க்கை ஒரு திருவிழா’’ பயணங்களில் அலைபேசியைக் கையில் கொண்டு செல்வதில்லை என இருக்கிறேன். அகமதாபாத் சென்ற போது கையில் செல்ஃபோன் இல்லை. எனவே ரயில் பயணச்சீட்டு முன்பதிவை குறுஞ்செய்தியாக கொண்டு செல்ல முடியாது. இன்று சிவராத்திரிக்கு காசி செல்வதற்கான முன்பதிவை செய்தேன். நண்பர் டிக்கெட் பிரிண்ட் அவுட் எடுத்துத் தந்தார். அகமதாபாத் சென்ற போது டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை. காத்திருக்கும் பட்டியலுக்குச் சென்று விட்டது. முன்பதிவு இல்லாத பெட்டியில் 33 மணி நேரப் பயணம். சக பயணிகள் பெரும்பாலானோர் முன்பதிவு கிடைக்காமல் சாதாரண வகுப்பில் பயணித்தவர்களே. 8 பேர் அமரக்கூடிய இடத்தில் அதிகபட்சமாக 22 பேர் இருந்தோம். குறைந்த பட்சமாக 14 பேர். 

குஜராத் மாநிலத்தில் நுழைந்ததும் ஒரு ரயில் நிலையத்தில் வெள்ளரிக்காய் விற்றார் ஒருவர். நான் என்னுடன் அமர்ந்து பயணிப்பவர்களுக்கும் சேர்த்து வாங்கினேன். அவர்களிடம் கொடுத்தேன். அனைவரும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கொண்டார்கள். அப்போது அங்கே ரயில் பாடகியான சிறுமி ஒருத்தி வந்தாள். மூன்று சிறுமிகள். இவள் பெரியவள். இவளது தங்கைகள் இருவர். பயணிகளின் கண்களைத் தயக்கமின்றி சந்திக்கிறாள். உங்களை முற்றிலும் அறிவேன் என்பது போல உறுதியாக அவள் பார்வை இருக்கிறது. நான் வெள்ளரிக்காயை வினியோகித்துக் கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். என்னருகில் வந்தாள். என் கைகளிலிருந்த வெள்ளரிக்காயை எடுத்து தின்னத் தொடங்கினாள். நிதானமாக நின்று கொண்டு. முழுமையாக ருசித்து. நான் அவளுக்காக அவள் தின்னும் வரை கையில் ஏந்திக் கொண்டிருந்தேன். தள்ளி நின்றிருந்த தங்கைகளிடம் வேண்டுமா என்றாள். அவர்கள் எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தனர். என் கையிலிருந்து இரண்டு வெள்ளரிக்காய்களை எடுத்து லாவகமாக அவர்களிடம் வீசினாள். என்னிடம் தன்யவாத் என்றாள். நானும் தன்யவாத் என்றேன். தங்கைகளுடன் இணைந்து கொண்டு பாடத் துவங்கினாள். ஒரு கணம் கலங்கி மீண்டேன்.

இந்த மாதம் 21ம் தேதி சிவராத்திரி. அப்போது காசியில் இருப்பதாகத் திட்டம். அடுத்த மாதம் ஹோலி. காசியிலிருந்து ஊருக்கு வந்து விட்டு ஒரு வாரத்தில் மீண்டும் பிருந்தாவனம் செல்ல வேண்டும். விஜயவாடாவும் வாரங்கல்லும் நாகபுரியும் சீர்காழி சிதம்பரம் போல் ஆகி விடும் என்று தோன்றுகிறது. ரயில் முன்பதிவு செய்ததே பெரும் சாதனை ஒன்றைச் செய்ததாக எண்ண வைக்கிறது.