Saturday 27 June 2020

வாய்ப்பு

நண்பர்கள் பலர், பல ஊர்களிலிருந்து ‘’காவிரி போற்றுதும்’’ பணியில் சிறு அளவிலாவது தங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர். தங்கள் உதவியை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்கின்றனர். அணியின் செயல்முறை மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி!

நாம் துவங்கியுள்ள பணியில் நிதி மிகப் பெரிய தேவையாக உருவெடுக்கவில்லை. கிராமத்தின் வீடுகளில் கள ஆய்வு பத்து நாட்கள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒவ்வொரு விவசாயியும் தனது வீட்டில் தனது தோட்டத்தில் வளர்க்கக் கூடிய மரம் குறித்தும் அதன் வாய்ப்புகள் குறித்தும் பரிசீலிப்பதற்கான ஒரு வாய்ப்பு உருவானது. இதில் நான் கவனித்த விஷயம் ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன். எல்லா விவசாயியுமே தனது நிலத்தில் செயல்புரிவதை ஆத்மார்த்தமாகவே எண்ணுகின்றனர். அவர்கள் முழுமையாய் அறிந்ததும் அதையே. எனினும் விவசாயத்தில் காலநிலை ஒரு முக்கியக் கூறு. அவர்கள் உழைப்பு எவ்விதம் இருப்பினும் பயிர் விளைச்சல் என்பது பல்வேறு சூழ்நிலைகளைச் சார்ந்தது. அவர்களிடம் நாம் சில வாய்ப்புகளை முன்வைக்கிறோம். அவர்களே தேர்ந்தெடுக்கின்றனர். 

உதாரணத்துக்கு, கள ஆய்வின் போது, விவசாயிகளின் வயல்களில் உள்ள வரப்புகளில் உயரமாய் வளரும் மரக்கன்றுகள் வளர்க்குமாறு கேட்டுக் கொண்டோம். அவர்களுக்கு பயிர் விளைச்சலை வரப்பில் வளரும் மரம் பாதிக்குமோ என்ற தயக்கம் இருந்தது. அதனை நீக்க, அடர்ந்து வளராத நிழல் கட்டாத உயரமாக வளரக்கூடிய  மரங்கள் பல உள்ளன; அவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினோம். அவர்கள் அதனை ஏற்றனர். கோடிக்கணக்கான மக்களுக்கான உணவை அவர்கள் உற்பத்தி செய்கின்றனர். அதிலும் அவர்களுக்கு பாதிப்பு நேர்ந்து விடக் கூடாது; அதே நேரம் அவர்களுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்க வேண்டும். நாட்டின் பசுமைப் பரப்பும் அதிகமாக வேண்டும்.

இராமாயணத்தில் ஒரு காட்சி வருகிறது. மாபெரும் கடலை எப்படி கடப்பது என மலைத்து நிற்கிறான் அனுமன். அப்போது ஜாம்பவான் அனுமனிடம், ‘’நீ ருத்ர அவதாரம். மாவீரன். சில சூழ்நிலைகளால் அந்த உண்மையை நீ அறியாமல் இருக்கிறாய். உனக்கு அதனை நினைவுபடுத்துகிறேன்’’ என்கிறார். அது நினைவுபடுத்தப்பட்டதும் அனுமன் பெரும் கடலை சர்வ சாதாரணமாகக் கடந்து செல்கிறான்.

நம் பணியில் இணைந்து கொள்ள விரும்புபவர்களுக்கு நான் பரிந்துரைப்பது: 

உங்களுக்குப் பக்கத்து கிராமத்தில் இருக்கும் விவசாயி ஒருவரை அவருடைய வீட்டிற்குச் சென்று சந்தியுங்கள். மரம் வளர்ப்பதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தைத் தெரிவியுங்கள். அவர் விரும்பும் மரக்கன்றுகள் எவை என்று கேட்டுக் கொள்ளுங்கள். அவற்றை ஏற்பாடு செய்து ஓரிரு நாளில் அவருக்கு வழங்குங்கள். ஒரு மரக்கன்றை மரமாக்குதல் என்பது பெருஞ்செயல். அதனை அவர் செய்யத் துவங்குவார்.