Wednesday 12 August 2020

நிலமும் நீரும்

 இன்று கிராமத்துக்குச் சென்றிருந்தேன். பொது இடத்தில் நட வேண்டிய மரக்கன்றுகளை நிழலான பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தேன். அவற்றுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நீர் விட வேண்டும். உள்ளூரில் சில இளைஞர்கள் அப்பணியை மேற்கொள்கின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நானும் அவ்வப்போது செல்கிறேன். இன்னும் ஓரிரு நாளில் மரக்கன்றுகளை பொது இடத்தில் நட்டு விடலாம். 

பணி முடிந்து கிராமத்தை விட்டு புறப்பட்டு வந்து கொண்டிருந்த போது, தனது வயலிலிருந்து ஒரு விவசாயி குரல் கொடுத்தார். தனது மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் வயல் வரப்பில் தேக்கங்கன்றுகளை நட்டுள்ளார். அவை புதிய துளிர் விட்டிருக்கின்றன. அவற்றை ஆர்வத்துடன் காண்பித்தார். என் கண்கள் வானத்தைப் பார்த்தன. நான் இப்போதெல்லாம் தினமும் அடிக்கடி வானத்தைப் பார்க்கிறேன். மேகங்களே மண் மேல் கருணையாய்ப் பொழிக என மௌனமாக பிராத்திக்கிறேன். 

தஞ்சை காவிரி வடிநிலம் நீரால் மிதப்பது. ஆற்றின் கால்வாயின் நீர் பயிரின் வேருக்குச் செல்ல வேண்டும். சில அடிகள் தூரத்தில் நீர் இருக்கும். வயலுக்கு வந்து சேராமல் கூட போகலாம். 

மகாத்மா காந்தி வாழ்வில் ஒரு சம்பவம். அலகாபாத்தில் ஆனந்த பவனத்தில் நேருவுடன் இருக்கிறார் மகாத்மா. காலைப் பொழுது. தோட்டத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். காந்தி ஒரு சிறு பாத்திரத்தில் சிறு அளவு நீர் எடுத்து பல் துலக்குகிறார். ‘’பாபு ஜி! கங்கை வெள்ளமாய்ப் பாய்கிறது. ஏன் இவ்வளவு குறைவான நீரை இவ்வளவு கவனத்துடன் எடுக்கிறீர்கள்’’ என்கிறார் நேரு. ‘’ஜவஹர்! கங்கையின் நீர் நமக்கானது மட்டும் அல்ல. அது கோடானு கோடி மக்களுக்கும் சொந்தமானது. அந்த உணர்வு நீரைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்’’ என்கிறார் மகாத்மா. 

இந்தியாவின் அனைத்துப் பேரரசுகளும் மக்களுக்காக நீர்நிலைகளையும் பாசன வசதிகளையும் உருவாக்கியவை. இந்தியாவின் பாரம்பர்ய விவசாய ஞானம் என்பது மழைப்பொழிவைப் பற்றிய அறிவே. 

நாம் நமது கல்வித் திட்டத்தில் நமது மரபை அறிமுகப்படுத்த வேண்டும். இங்கே செயலாக்கப்படும் அனைத்தும் நமது மரபின் வேர்களிலிருந்து கிளம்பி வர வேண்டும். குறைந்தபட்ச உடல் உழைப்பு, நீர் மேலாண்மை ஆகியவை பாடமாகப் பயிலப்பட வேண்டும்.