Thursday 13 August 2020

காந்திக் காட்சிகள் - காகா காலேகர்

 காந்திய வாழ்க்கைமுறை என்பது மேலான சாத்தியங்கள் நிறைந்த வாழ்க்கை. இந்தியாவில் அற உணர்வு கலையில், நுண் கலையில், பொருளியலில், அரசியலில், அன்றாட வாழ்க்கைமுறையில் கலந்திருப்பதான பழக்கம் குறைந்தபட்சம் ஐயாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. வன்முறையையும் இச்சைகளையும் தாண்டிய வாழ்க்கையை நாடெங்கும் துறவிகளின் சாலைகள் நடைமுறையாய்க் கொண்டிருந்தன. வேத பாடசாலைகள், சமண அறநிலைகள், பௌத்த மடாலயங்கள் என பெரும் நிரை இந்தியாவில் இன்று வரை தொடர்கிறது. மகாத்மாவின் ஆசிரமங்களையும் அவருடைய செயல்பாடுகளையும் இந்த பின்னணியிலேயே புரிந்து கொள்ள வேண்டும். இந்த பின்னணியில் புரிந்து கொள்வதே சரியானதாக இருக்கும். 

மகாத்மாவுடன் உடனிருந்த ஆளுமைகள் மகாத்மாவிற்குச் சமமானவர்களே. அவர்களில் சிலரின் ஆளுமையின் உயரமும் அடர்த்தியும் வியப்பளிக்கக் கூடியது.

காகா காலேகரின் ‘’ஜீவன் லீலா’’ என்ற நூலை வாசித்திருக்கிறேன். கங்கை, யமுனை, நர்மதா, கோதாவரி, துங்கபத்திரா, காவிரி முதலிய இந்திய நதிகளைக் கண்டு எழுதிய பயண அனுபவங்கள் ‘’ஜீவன் லீலா’’ எனத் தொகுக்கப்பட்டன. 

காலேகர் ஒரு பள்ளி ஆசிரியர். சாந்தி நிகேதனில் கவி ரவீந்திரநாத் தாகூரிடம் பயின்றவர். காந்தியை சாந்தி நிகேதனில் சந்தித்த பின் தனது வாழ்வு காந்தியுடன் என முடிவு செய்கிறார். வார்தாவிலும் சபர்மதி ஆசிரமத்திலும் தனது பணிகளைச் செய்கிறார். 

காந்தி வாழ்வில் நடந்த 100 சம்பவங்களை காலேகர் தன் நினைவிலிருந்து எழுதுகிறார். 

எளிய சாமானியமான சூழ்நிலைகள். அதில் காந்தியின் - காந்தி உடனிருப்பவர்களின் ஆளுமைச்சித்திரம் உருவாகி வருகிறது. 

ஆந்திராவில் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கடுமையான பணிகள். நள்ளிரவு ஒரு மணி வரை பணி புரிகின்றனர். உடல் அசதி தாங்க முடியாமல் உறங்கி விடுகின்றனர். உறங்குவதற்கு முன் நிகழ்த்தும் பிராத்தனையை நிறைவேற்ற முடியவில்லை. காலையில் எழுந்தால் காந்தி படுக்கையில் அமர்ந்திருக்கிறார். காலேகர் எழுந்ததும் காந்தி அவரிடம் இரவு பிராத்தனை செய்தீர்களா என்று கேட்கிறார். இல்லை; பெரும் அசதி என்பதால் உறங்கி விட்டேன் என்கிறார். காந்தி தான் இரவு 2 மணிக்கு வந்தேன்; நானும் பிராத்திக்காமல் உறங்கி விட்டேன் என்கிறார். நம் மீது பெரும் கருணை கொண்டிருக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தாதவர்களாகி விட்டோமா என வருந்துகிறார். அந்த வருத்தத்தில் 3 மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. அதன் பின் உறங்கவில்லை என்கிறார். 

காலேகர் குஜராத்தில் அகமதாபாத்தில் கல்விப்பணி ஆற்றுகிறார். அவருக்கு மராத்தியும் ஹிந்தியுமே தெரியும். ஆனால் குழந்தைகளுக்கு சொல்லித் தர குஜராத்தி தெரிந்திருக்க வேண்டும் என்பதால் புதிதாக குஜராத்தி கற்றுக் கொள்கிறார். தொடர் பயிற்சியால் குஜராத்தியில் கட்டுரைகள் எழுதி ‘’நவஜீவன்’’ பத்திரிக்கையில் அவை வெளியாகின்றன. குஜராத்தி அகராதி ஒன்றைத் தயாரிக்குமாறு காந்தி அவரைப் பணிக்கிறார். முதல் குஜராத்தி அகராதி மராத்தியரான காலேகரால் வெளியிடப்படுகிறது. 

மணமான இளம் தம்பதியர் காந்தியைக் கண்டு ஆசி பெற வருகின்றனர். திருமணத்தில் வைதிகருக்கு தட்சணை தந்தீர்கள் அல்லவா அதே அளவு தட்சணையை ஒரு ஹரிஜனுக்குக் கொடுக்க வேண்டும் என்கிறார் காந்தி. காலேகர் வந்திருப்பவர்கள் தமிழ்நாட்டின் ஹரிஜன் தலைவரான எம். சி. ராஜாவின் மகனும் மருமகளும் என்கிறார். காந்தி உங்களுக்கு அந்த விதியில் இருந்து தளர்வு என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார்.

காந்திக்கு தான் ஓர் எழுத்தாளராக வேண்டும் என்ற ஆசை இளம் வயதில் இருந்திருக்கிறது என்பதை பதிவு செய்கிறார் காலேகர். 

காந்தியின் கட்டுரைகள், தலையங்கங்கள், கடிதங்கள் ஆகியவை ''The Collected Works of Mahatma Gandhi'' எனத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பக்க அளவு 40,000 பக்கங்களுக்கு மேல். உலகில் எந்த எழுத்தாளனும் இத்தனை பக்கங்கள் எழுதியது இல்லை. 

கருணை என்பது பெரும் பண்பு. கருணை கொண்டவனின் அகம் உலகையே தன் சேயாய் ஆக்குவது. இலங்கையில் ஒரு சொற்பொழிவில் காந்தி புத்தர் குறித்து பேசும் போது He said எனச் சொல்வதற்கு பதில் I said என tongue slip ஆக சொல்லி விடுவதை காலேகர் கவனிக்கிறார். ஜே. கிருஷ்ணமூர்த்திக்கும் அவ்வாறு ஆனதாக அந்த சம்பவத்தை பதிவு செய்யும் போது குறிப்பிடுகிறார். 

காந்திய நூல்களில் முக்கியமானது காகா காலேகரின் காந்தி காட்சிகள்.