Wednesday 30 September 2020

இராவணன் மந்திரப் படலம்

 சுட்டது குரங்கு; எரி சூறை ஆடிடக்

கெட்டது கொடிநகர்; கிளையும் நண்பரும்

பட்டனர்; பரிபவம் பரந்தது எங்கணும்;

இட்டது இவ் அரியணை இருந்தது என் உடல். (6209)

ஒரு குரங்கு என் நகருக்குத் தீ இட்டது. தீ என் நகரைச் சூறையாடியது. எனக்கு உயிரானவர்களும் எனக்கு இனியவர்களும் இறந்தனர். எங்கும் பரவியிருக்கிறது அவமான உணர்ச்சி. இடப்பட்ட இந்த அரியணையில் வெறுமனே கிடக்கிறது எனது உடல்.

அரக்கர் அரசு பெருந்திறன் கொண்டது. ஆனால் அதற்கு ஒரு குரங்கு அழிவு செய்தது. அழிவு செய்தது தெய்வங்களோ தேவர்களோ யக்‌ஷர்களோ அல்ல. ஒரு குரங்கு. அக்குரங்குடன் சேர்ந்து நகரைச் சூறையாடியது அக்னி தேவன். அரக்கருக்கு அஞ்சும் தேவர்களில் ஒருவன். நெருக்கமானவர்கள் மரணித்தனர். எங்கும் அவமானத்தின் சுவடுகள். உயிர் போன்ற நகர் அழிந்ததால் வெறுமனே உடல் மட்டும் கிடக்கிறது.

சலிப்பு, சோர்வு, அவமானம் ஆகியவற்றை இராவணன் வெளிப்படுத்துகிறான்.

 

வெள்ளி அம் கிரியினை விடையின் பாகனோடு

அள்ளி விண் தொட எடுத்து ஆர்த்த ஆற்றலாய்!

சுள்ளியில் இருந்து உறை குரங்கின் தோள்வலிக்கு

எள்ளுதி போலும் நின் புயத்தை எம்மொடும். (6222)

 

‘’இராவணா! கைலாயத்தை காளை வாகனனான சிவபெருமானுடன் விண் வரை தூக்கிய ஆற்றல் படைத்தவன் நீ. சுள்ளிகள் மத்தியில் வசிக்கும் குரங்கையா நீ இப்போது பெரிதாக நினைக்கிறாய்.’’

மலை பெரிது. அதனினும் பெரிது இமயத்தின் கைலாயம். அதில் வாழும் காளை வாகனனான சிவனை மலையுடன் பெயர்த்து உயர்த்தியவன் இராவணன்.

மிருகங்களில் திறன் படைத்தது காளை. காளையுடன் ஒப்பிடும் போது குரங்கு ஒன்றுமில்லை எனக் காட்ட சிவன் காளை வாகனன் எனக் குறிப்பிடப்படுகிறது.

 

எரி உற மடுப்பதும் எதிர்ந்துேளார் பட

பொரு தொழில் யாவையும் புரிந்து போவதும்

வருவதும் குரங்கு; நம் வாழ்க்கை ஊர் கடந்து

அரிதுகொல் இராக்கதர்க்கு ஆழி நீந்துதல்? (6232)

ஒரு வானரம் ‘’போவதும் வருவதும்’’ போல நம் நகரை எரியிட்டது. எதிர்த்தவர்களைக் கொன்றது எனில் நம்மால் கடல் கடந்து சென்று அதன் படையை அழிக்க முடியாதா?

 

ஓவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய்;

கோ இயல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன்

தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ?

பாவியர் உறும்பழி இதின் பழியும் உண்டோ! (6246)

 

‘’ஓவியம் போன்ற நகரின் அழகை அழிய விட்டாய். அரசப்பண்பை மீறி ஒரு பெண்ணை – இன்னொருவன் மனைவியை – சிறைபிடித்தாய். பெரும் பாவத்தையும் பழியையும் உண்டாக்கும் இச்செயல்களை நீ செய்கிறாய்..

 

என்று ஒருவன் இல் உறை தவத்தியை இரங்காய்

வன் தொழிலினாய் முறை துறந்து சிறை வைத்தாய்

அன்று ஒழிவது ஆயின அரக்கர் புகழ்; ஐயா!

புன்தொழிலின் நாம் இசை பொறுத்தல் புலமைத்தோ! (6248)

மேன்மையான வாழ்க்கை வாழும் பத்தினிப் பெண் மீது ஆசை கொண்டாய். எந்த முறையிலும் அடங்காது அவளைச் சிறை வைத்தாய். அன்றே அழிந்தது நம் குலத்தின் புகழ்.

 

ஆசு இல் பர தாரம் அவை அம் சிறை அடைப்பேம்

மாசு இல் புகழ் காதல் உறுவேம்; வளமை கூரப்

பேசுவது வீரம் இடை பேணுவது காமம்;

கூசுவது மானிடரை; நன்று நம கொற்றம். (6249)


நீ வீரத்தைப் பேச்சில் வைத்துள்ளாய். உன் மனமெங்கும் காமம் உள்ளது. மனிதர்களைக் கண்டு அச்சப்படும் நிலைக்கு வந்துள்ளாய். இதுவே நம் அரசின் அவலம்.

 

 

ஊறு படை ஊறுவதன் முன்னம் ஒரு நாளே

ஏறு கடல் ஏறி நரர் வானரரை எல்லாம்

வேறு பெயராதவகை வேரோடும் அடங்க

நூறுவதுவே கருமம்என்பது நுவன்றான். (6253)


அவர்கள் இப்போது ஒரு வெற்றியைப் பெற்றுள்ளார்கள். அவ்வெற்றிப் பெருமிதம் அவர்களின் முழுப் படைக்கும் தொற்றி அவர்கள் பெருநம்பிக்கையுடன் இங்கு வருமுன் நாம் கடல் கடந்து சென்று அவர்கள் எதிர்பாராத விதமாகத் தாக்கி அவர்களை முற்றழிக்க வேண்டும்.

 

நன்று உரை செய்தாய்! குமர! நான் அது நினைந்தேன்;

ஒன்றும் இனி ஆய்தல் பழுது; ஒன்னலரை எல்லாம்

கொன்று பெயர்வோம்; நம கொடிப் படையை எல்லாம்

இன்று எழுக என்கஎன இராவணன் இசைத்தான். (6254)

கும்பகருணன் சொல்வதில் உள்ள படைநகர்வின் சூழ்கையை உணர்ந்த போர்வீரனான இராவணன் அவ்வாறே செய்வோம் என்றான்.

 

எந்தை நீ யாவும் நீ எம் முன் நீ தவம்

வந்தனைத் தயெ்வம் நீ மற்றும் முற்றும் நீ

இந்திரப் பெரும்பதம் இழக்கின்றாய் என

நொந்தனென் ஆதலின் நுவல்வது ஆயினேன். (6270)

 

வீடணனுடைய மகத்தான ஆளுமையைக் காட்டும் பாடல் இது. தனது சகோதரன் தவறிழைக்கிறான். தவறு நிகழ்ந்து விட்டது. அதனை திருத்திக் கொள்ளும் வாய்ப்பு இராவணனுக்குக் கிடைக்க வேண்டும் என நினைக்கிறான். அவனுக்கு எது அறம் என்பதை எடுத்துக் கூறுகிறான். இராவணன் மீது பேரன்பு கொண்டவன் இராவணன் என்பதை எடுத்துக் காட்டும் பாடல் இது.


நீ

என் தந்தை

நீயே

எனக்கு யாவும்

என் தமையன்

நீ

என்னால் வணங்கப்படும் தெய்வம்

நீ

என் முழு வாழ்க்கையும்

நீ

உன் வீழ்ச்சி என் கண்ணில் தெரிவதால்

எச்சரிக்கிறேன்

 

கோநகர் முழுவதும் நினது கொற்றமும்

சானகி எனும் பெயர் உலகின் தம்மனை

யானவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர்

வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ? (6272)

 

உனது தலைநகரும் உனது அரசாங்கமும் அன்னை ஜானகி கற்பின் திண்மையால் எரிந்தது. அது ஒரு குரங்கால் நிகழ்ந்ததாக எண்ணாதே.

 

தீ இடைக் குளித்த அத் தயெ்வக் கற்பினாள்

வாய் இடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ?

நோய் உனக்கு யான்என நுவன்றுளாள் அவள்

ஆயவள் சீதை பண்டு அமுதில் தோன்றினாள். (6278)

 

பெண் சாபம் உன்னை நோயெனப் பீடித்துள்ளது என்பதை உணர்ந்து கொள்.

 

இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச

வசையும் கீழ்மையும் மீக்கொளக் கிளையொடும் மடியாது

அசைவில் கற்பின் அவ் அணங்கை விட்டு அருளுதி இதன்மேல்

விசையம் இல் எனச் சொல்லினன் அறிஞரின் மிக்கான். (6296)

 

இராவணா! புகழும் மேன்மையும் நற்பண்பும் நம்மிடமே இருக்கட்டும். இழிவும் பழியும் நிறைந்த கீழ்மை நமக்கு வேண்டாம். சீதையை நாம் விடுவித்து விடுவோம்.