Monday 28 September 2020

கடல் காண் படலம்


பொங்கிப் பரந்த பெருஞ் சேனை, புறத்தும் அகத்தும், புடை சுற்ற-
சங்கின் பொலிந்த தகையாளைப் பிரிந்த பின்பு, தமக்கு இனம் ஆம்
கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வுற்று இதழ் குவிக்கும்
கங்குல் பொழுதும், துயிலாத கண்ணன்-கடலைக் கண்ணுற்றான். (6188)

’கண்ணன் கடலைக் கண்ணுற்றான்’ . கம்ப சித்திரங்கள் எளிமையையும் ஆழத்தையும் ஒருங்கே கொண்டவை. 

கடல் போன்ற படை சூழ்ந்து நிற்க, சங்கு வளையல்களால் அழகு பெறும் சீதையைப் பிரிந்திருக்கும் - நாளின் ஒரு பொழுதில் தாமரை இதழ் குவிக்கும் ஆனால் சீதையைப் பிரிந்த பின் கணமும் கண் துயிலாத- தாமரைக் கண்ணன் கடலைக் கண்டான்

வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த
பழிக்கும், காமன் பூங்கணைக்கும் பற்றாநின்றான் பொன் தோளைச்
சுழிக்கும் கொல்லன் ஒல் உலையில் துள்ளும் பொறியின் சுடும் அன்னே!
கொழிக்கும் கடலின் நெடும் திரைவாய்த் தனெ்றல் தூற்றும் குறுந்து திவலை. (6190)

தென்றல் அலையின் குறுந்திவலைகளை இராமன் மேல் தெளிக்கிறது. அத்துளிகள் சீதையைப் பிரிந்திருக்கும் இராமனை தீப்பொறிகள் எனச் சுடுகிறது.

பள்ளி அரவில் பேர் உலகம் பசுங்கல் ஆகப் பனிக் கற்றை
துள்ளி நறு மென் புனல்தெளிப்பத் தூ நீர்க் குழவி முறை சுழற்றி,
வெள்ளி வண்ண நுரைக் கலவை வெதும்பும் அண்ணல் திருமேனிக்கு
அள்ளி அப்பத் திரைக் கரத்தால் அரைப்பது ஏய்க்கும் அணி ஆழி. (6195)

கடல் இராமன் துயர் நீக்க தன் அலைக்கைகளால் நுரையை சந்தனமெனத் திரட்டுகிறது.

கொங்கைக் குயிலைத் துயர் நீக்கி, இமையோர்க்கு உற்ற குறை முற்ற,
வெம் கைசிலையன் தூணியினன் விடாத முனிவின் மேல் செல்லும்
கங்கைத் திருநாடு உடையானைக் கண்டு நெஞ்சம் களி கூர
அம் கைத் திரைகள் எடுத்து ஓடி, ஆர்த்தது ஒத்தது அணி ஆழி. (6196)

கங்கை நதியின் தலைவனைக் காண கடல் ஆர்ப்பரித்து விரைந்தது.

இன்னது ஆய கருங்கடலை எய்தி அதனுக்கு எழுமடங்கு
தன்னது ஆய நெடுமானம் துயரம் காதல் இவை தழைப்ப
என்னது ஆகும் மேல்விளைவு? என்று இருந்தான் இராமன்; இகல் இலங்கைப்
பின்னது ஆய காரியமும் நிகழ்ந்த பொருளும் பேசுவாம். (6197)

பெருங்கடல் முன் நிற்கிறான் இராமன். அவனது துயரம் அதனை விட எழுமடங்கு பெரிதாக இருக்கின்றன. அடுத்த செயல் என்ன என எண்ணி கடலை நோக்கியிருந்தான் இராமன்.