Saturday, 27 March 2021

உயிர் கொடுத்தல்

'நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே'

-குடபுலவியனார்
நூல் : புறநானூறு   துறை : முதுமொழிக்காஞ்சி

இன்று இரவு எனக்கு ஒரு எண்ணம் உண்டானது. 

எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்தேன். 

‘’இன்னைக்கு எனக்கு ஒரு ஐடியா தோணுச்சு’’

நண்பர் மையமாக ‘’சொல்லுங்க’’ என்றார். 

‘’நான் முன்கூட்டியே ஒரு டிஸ்கிளைமர் சொல்லிடறன். நீங்க ஃபினான்ஷியலா எந்த சப்போர்ட்டும் செய்ய வேண்டியதில்லை. டிஸ்கஸ் பண்ணத்தான் உங்ககிட்ட பேசறன். எந்த ஐடியாவிலும் சில இடைவெளிகள் இருக்கும். யோசிக்கிறவருக்கு அது தெரியாது. கேக்கறவர் அதை சுட்டிக் காட்டுனா அந்த ஐடியா மேம்பட வசதியா இருக்கும்’’

நண்பர் ஆசுவாசமானார். ஆர்வத்துடன் ‘’சொல்லுங்க பிரபு’’ என்றார். 

‘’இப்ப தமிழ்நாட்டுல ஒரு சின்ன டவுன் எடுத்துக்கங்க. சிதம்பரம், கடலூர், விழுப்புரம் மாதிரி. அதுல இருக்கற வணிக நிறுவனங்கள்ல 10,000 பேர் வேலை பார்ப்பாங்க இல்லையா?’’

நண்பர் ஆமோதித்தார். 

‘’அவங்க எல்லாம் பெரும்பாலும் அந்த டவுணுக்குப் பக்கத்துல இருக்கற கிராமத்துல இருந்து வந்தவங்க. காலைல வந்துட்டு ராத்திரி வீடு திரும்பறவங்க. அவங்கள்ள பெரும்பாலானவங்க மதியம் சாப்பாட்டுக்கு டிஃபன் பாக்ஸ்-ல ரொம்ப கொஞ்சமான ஃபுட் கொண்டு வர்ராங்க. அவங்க 10,000 பேருக்கும் தினமும் மதிய உணவு அன்னதானமா அவங்க இருக்கற இடத்துக்குத் தேடிப் போய் கொடுக்கணும்.’’

‘’இதெல்லாம் சாத்தியமா பிரபு ?’’

‘’ஏன் அசாத்தியம்னு நினைக்கறீங்க?’’

‘’அவங்க எல்லாம் கடைகள்ல வேலை பாத்து சம்பளம் வாங்கராங்க. அவங்க ஃபுட் அவங்க ஏற்பாடு செஞ்சுப்பாங்க.’’

‘’இந்த விஷயத்தை நீங்க அப்படி பார்க்கக் கூடாது. இப்ப நானே இருக்கன். எங்க வீட்ல அம்மா ஊருக்குப் போயிருந்தா எனக்கு ஃபுட் கஷ்டம் தான். கிச்சன்ல எல்லா உணவுப்பொருளும் இருக்கு. இருந்தாலும் அது உணவா மாறி பசியாத்தணும்னா அதுக்கு ஒருத்தரோட அக்கறை வேணும். பரிவு வேணும்’’

நண்பர் அமைதியாக இருந்தார். 

‘’ஃபுட் ஸ்டஃப் இருக்கா இல்லையாங்கறது கேள்வி இல்லை. எல்லாரும் பசியாருராங்களாங்கறது தான் முக்கியம்’’

‘’உங்க பிளான் என்ன ? முழுக்கச் சொல்லுங்க’’

‘’இந்திய மரபுல அன்னதானம் ரொம்ப பெரிய விஷயம். அன்னதானம் தன்னளவில இறை வழிபாடே தான். பிரம்மம் அன்னத்தின் வடிவம் கொள்கிறதுன்னு வேதம் சொல்லுது. சமணமும் பௌத்தமும் அன்னதானத்தை மகத்தான செயலா சொல்றாங்க. சீக்கியர்கள் குருத்வாராக்கு வர்ர எல்லாருக்கும் உணவு கிடைக்கணும்னு சொல்றாங்க.’’

‘’உண்மை தான்’’

''நம்ம பிளானோட ஒரு பக்கத்துல கடைகள்ல வேலை செய்யற பணியாளர்கள் இருக்காங்க. இன்னொரு பக்கத்துல அன்னதானத்தை புண்ணியமா வழிபாடா நினைக்கக்கூடியவங்க இருக்காங்க. இவங்க ரெண்டு பேருக்கும் நாம பாலமா இருக்கோம்.’’

‘’அளவில ரொம்ப பெரிசா இருக்கே?’’

‘’பெருசு தான். ஆனா நாம நினைக்கறத விட இன்னும் அதிக சப்போர்ட் கிடைக்கும்.’’

‘’நீங்க எல்லாத்தையும் நம்பிக்கையோட தான் சொல்றீங்க. ஆனா இன்னைய சமூகத்தோட நிலைமை வேற மாதிரி இருக்கு.’’

‘’சரி ! இந்த பிளானோட இடைவெளிகள் என்னன்னு சொல்லுங்க. அதை சரி செய்வோம்.’’

‘’முதல் விஷயம்! அன்னதானத்தை எல்லாரும் ஏத்துப்பாங்களாங்கறது ஒரு பெரிய கேள்வி.’’

‘’நாம அன்னதானத்தை கடவுளுக்கு நிவேதனம் பண்ணி கொடுப்போம். கடவுள் பிரசாதத்தை எல்லாரும் ஏத்துப்பாங்க.’’

‘’அப்படி சொல்றீங்களா?’’

‘’ நண்பரே! நாம ஒரு விஷயத்தைப் பத்தி யோசிக்கும் போது என்னென்னல்லாம் செஞ்சா அந்த விஷயம் நடக்கும்னு யோசிக்கணும். நடக்காதுன்னு அபிப்ராயம் சொல்லிட்டு சும்மா இருக்கக் கூடாது.’’

‘’பட்ஜெட் என்ன செய்வீங்க?’’

‘’பத்தாயிரம் பேருக்கு உணவு கொடுக்கறோம்னா அதுக்கு ஒரு நாளைக்கு மினிமமா அஞ்சு லட்சம் ரூபாய் தேவைப்படும். ஒரு வருஷத்துக்கு பதினெட்டு கோடி தேவைப்படும். நாம பிளானையும் துல்லியமான எக்ஸிகியூஷன் மாடலையும் உருவாக்கினோம்னா இந்த விஷயத்தை நாமதான் செய்யணும்னு அவசியம் இல்லை. வாய்ப்பும் அமைப்பு பலமும் இருக்கற யாரும் செய்ய முடியும். இதை விட பெரிய எண்ணிக்கையை கர்நாடகால இருக்கற தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவிலும் திருப்பதி தேவஸ்தானமும் பஞ்சாப் பொற்கோயிலும் சர்வசாதாரணமா செய்யறாங்க. அங்க தினமும் லட்சக்கணக்கானவங்களுக்கு அன்னதானம் நடக்குது. இஸ்கான் இந்தியாவோட பல மாநிலங்கள்ல பள்ளிக்குழந்தைகளுக்கு ‘’அட்சய பாத்ரா’’ என்ற பெயரில் உணவு கொடுக்கறாங்க.’’

‘’ஏன் கடையில வேலை பாக்கறவங்களை மட்டும் தேர்ந்தெடுக்கிறீங்க?’’

‘’ஒரு ஆரம்பத்துக்காக - கணக்கீட்டுக்காக - எண்ணிக்கைக்காக அங்க இருந்து ஆரம்பிச்சேன். அதுல காய்கறி விக்கற பெண்கள், மீன் விற்பவர்கள், தள்ளுவண்டில வியாபாரம் செய்றவங்க, பூ விக்கறவங்க, இவங்களையும் இணைச்சுக்க முடியும்.’’

‘’இது என்ன மாற்றத்தை உண்டாக்கும்னு நினைக்கறீங்க?’’

‘’அன்னத்துக்கு பேதம் இல்லை. அது கடவுளைப் போல. அதன் முன் எல்லாரும் சமம். தேவைப்படறவங்களுக்கு அதைக் கொண்டு சேர்க்கறது ஒரு சத்காரியம். நான்கு யுகத்தோட இயல்பு பத்தி சொல்லும் போது கிருத யுகத்துல யாருக்கு தானம் கொடுக்கப்படணுமோ அவங்க இடத்துக்குப் போய் அவங்க கிட்ட தானத்தை ரொம்ப பொலைட்டா ரெக்வெஸ்டா கொடுப்பாங்களாம். திரேதா யுகத்துல தானம் கொடுக்கறவங்க இடத்துக்கு போனா அவங்களை வரவேற்று உபசரிச்சு கொடுப்பாங்களாம். துவாபர யுகத்துல தானம் கொடுக்கறவங்க கிட்ட போய் தானம் கேக்கறவங்க ரெக்வெஸ்ட் பண்ணா கொடுப்பாங்களாம். கலி யுகத்துல தானம் கேக்கறவன் தானம் கொடுக்கறவன அவனோட இடத்துக்குப் போய் புகழ்ந்தா தான் கொடுப்பாங்களாம். நாம கிருத யுகத்தோட ஃபார்மெட்டை எக்ஸிகியூட் பண்ணுவோம்.’’

‘’பெருசா பிளான் பண்றீங்க’’

‘’பெரிதினும் பெரிது கேள் னு பாரதி சொல்றான்.’’

‘’வாழ்த்துக்கள் ‘’ 

‘’நாம யோசிச்சிட்டதாலேயே செஞ்சுட்டோம்னு அர்த்தம் இல்லை. எதுவும் யோசிக்காம இருக்கறதுக்கு எதையாவது யோசிக்கறது பரவாயில்லை இல்லையா?’’

‘’உண்மைதான்’’

‘’உங்க கிட்ட இந்த விஷயம் சொன்னது இதைப் பத்தி யோசிச்சு உங்க மனசுல தோணுற கேள்விகளை கேக்கத்தான். இந்த கேள்விகளை ஃபீல்டுல எதிர் கொண்டே ஆகணும். அதுக்கு முன் தயாரிப்பா உங்க கேள்விகள் இருக்கும்.’’

நண்பருடனான உரையாடல் முடிந்தது. 

கர்நாடகாவில் வசிக்கும் எஸ். பி. ஐ மேலாளர் ஆதித்ய ஸ்ரீநிவாஸுக்கு ஃபோன் செய்தேன். 

‘’அண்ணன் ! நல்ல விஷயம் அண்ணன். இதை எப்படி செய்யறதுன்னு யோசிப்போம். அவசியம் நாம செய்யணும்’’ ஆதித்யா உற்சாகமாக இருந்தான். 

‘’இது ஒரு ஐடியா. நாமேதான் செய்யணும்னு இல்லை.’’

‘’ஒரு சின்ன ஊர்ல தினமும் 500 பேருக்கு உணவு கொடுக்கற மாதிரி ஆரம்பிச்சு செஞ்சு பாப்போம். அவசியம் நாம செய்யணும்.’’

‘’உன் வார்த்தையைக் கேட்கும் போது தெய்வத்தோட கட்டளைன்னு தோணுது. முயற்சி செஞ்சு பாப்போம்.’’

‘’அண்ணன் ! நான் பேங்க்-ல தினமும் பாக்கறன். அங்க உள்ள ஸ்டாஃப் யாருக்கும் எந்த எதிக்ஸும் இல்லை. இன்னைக்கு எதிக்ஸோட செய்யப்படற வேலைகள் சமூகத்துக்குத் தேவைப்படுது. ‘’

’’நம்ம தமிழ் மரபுல மணிமேகலை அமுதசுரபி மூலமா அன்னதானம் செய்றாங்க. அன்னதானம் நம்ம ஆழ்மனசுல பதிஞ்சிருக்க விஷயம். முயற்சி செஞ்சு பாப்போம்.’’

‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளின் களம் விரிவாவது மகிழ்ச்சி தந்தது.