அடிப்படையில் கட்டுமானப் பணி தன்னளவில் ஒழுங்கினை அதன் இயல்பாகக் கொண்டது. இந்த பணி இவ்வாறுதான் செய்யப்பட வேண்டும் என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்டது. கலவைக்கு மணல் இட கலவைப்பெட்டியில் அளந்து போட வேண்டும். சிமெண்ட்டையும் அளந்து போட்ட மணலையும் இரண்டும் ஒன்றாகும் விதத்தில் நன்றாகக் கலக்க வேண்டும். ஒரு நாளைக்கு கட்டுவேலை இரண்டரை அடி உயரத்துக்கு மட்டுமே செய்ய வேண்டும். அதற்கு மேல் உயரம் போகக் கூடாது. கட்டுவேலையும் பூச்சுவேலையும் செய்த பின் ஒரு வார காலம் முழுமையாக கியூரிங் செய்ய வேண்டும். இவை மாறாத விதிகள். இவை என் மனதிலும் செயலிலும் முழுமையாகப் பதிந்து விட்டன.
பணி நடைபெறும் போது, காலை 7 மணிக்கு வீட்டில் டிஃபன் சாப்பிட்டு விட்டு பணியிடத்துக்குப் புறப்படுவேன். அனேகமாக முக்கால் ஜல்லி லோடு வந்திருக்கும். சமயத்தில் காலை 5 மணிக்கே வந்து விடும். டிரைவர் ஃபோன் செய்வார். கிளம்பிச் செல்ல வேண்டும். ஜல்லியை அளந்து இறக்கிக் கொள்ள வேண்டும். இறக்கும் நேரம் முழுவதும் அங்கே இருக்க வேண்டும். பின் ஜல்லிக்கான பேமெண்ட்டைக் கொடுத்து அனுப்ப வேண்டும். ஜல்லி வராத நாளிலும் காலையிலேயே பணியிடம் சென்று விட வேண்டும். முதல் நாள் நடந்த வேலைகளுக்கு கியூரிங் செய்ய வேண்டும். ஒரு பணியாளர் இருப்பார். இருப்பினும் கியூரிங் முறையாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். செங்கல், மணல், சிமெண்ட், வேலைத்திறன் ஆகியவை கட்டுவேலையிலும், பூச்சுவேலையிலும் , கான்கிரீட்டிலும் 20 சதவீதம் மட்டுமே. கட்டு வேலை நடந்த பின் ஒரு வாரம் கியூரிங் முறையாக நடந்தால்தான் மீதி 80 சதவீதமும் பெற முடியும். சரியாக கியூரிங் செய்யப்படாத வேலை 20 சதவீதம் மட்டுமே வலு உடையது.
காலை 9 மணிக்குப் பணியாளர்கள் வருவார்கள். அன்று செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிய குறிப்புகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும். ஏதேனும் கட்டுமானப் பொருட்கள் தேவைப்பட்டால் வாங்கித் தர வேண்டும். மதியம் 2 மணிக்கு உணவு இடைவேளை. அந்த நேரத்தில் வீட்டுக்கு சாப்பிட வருவேன். மீண்டும் 3 மணிக்கு வேலை துவங்கும். அப்போது அங்கு இருப்பேன். மாலை 6.30 மணி வரை பணி நடைபெறும். அன்றைய ஊதியத்தை பணியாளர்களுக்கு வழங்கி விட்டு வீட்டுக்கு வருவேன். அன்றைய கணக்கை எழுதுவேன். குளித்து விட்டு இரவு உணவு அருந்துவேன்.
ஊரில் 1000 சதுர அடி கொண்ட வீடு ஒன்றை பல ஆண்டுகளுக்கு முன் கட்டினேன். 10 ஆண்டுகள் இருக்கும். அந்த வீட்டின் உரிமையாளர் 5 ஆண்டுகளுக்கு முன் அந்த வீட்டை விற்று விட்டு அந்த பணத்தையும் மேலதிகமாகத் தன் கையில் இருந்த பணத்தையும் சேர்த்து சென்னையில் ஒரு வீடு வாங்கி விட்டார். அதன் பின்னர் அந்த வீட்டுக்கு உரிமையாளர் இன்னொருவர் ஆகி விட்டார். அவர் வீட்டை வாடகைக்கு விட்டார்.
சமீபத்தில் எனக்கு ஒருவர் அறிமுகமானார். எனது நண்பருக்கு நண்பர் அவர். அவரை அவருடைய வீட்டில் சந்திக்க விரும்பி ஃபோன் செய்தேன். அவர் வீட்டை அடையாளம் சொன்னார். கட்டுமானத்துக்காக பணி புரிந்த இடம் என்பதால் என்னால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் அதே வீடாக இருக்கும் என நான் எண்ணியிருக்கவில்லை. பக்கத்து வீடு அல்லது இரண்டு வீடு தள்ளியிருக்கும் வீடு என்று தான் நினைத்தேன். சென்று பார்த்தால் அதே வீடு.
அந்த கட்டுமானம் நான் செய்தது என்று அவரிடம் சொல்லவில்லை.
பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.
‘’சார் ! இந்த வீடு ரொம்ப வசதியானது சார்’’ நண்பர் சொன்னார்.
‘’அப்படியா’’ என்றேன்.
’’நல்ல வெளிச்சம். நல்ல காத்தோட்டம். நிறைய ஜன்னல். மழை பெய்தா ஓப்பன் டெரஸ்ல ஒரு துளி தண்ணி கூட தேங்காது சார். முழுக்க வடிஞ்சிடும். வீடு உள்ள பாக்கறீங்களா?’’
‘’பரவாயில்லை இருக்கட்டும்’’
’’ஆக்சுவலா சார், பழைய ஓனர் வீட்டை விக்கப் போறன்னு சொன்னதும் வீட்டைக் காலி பண்ணிட்டு பக்கத்து தெருவுல இன்னொரு வீட்டுக்குப் போய்ட்டோம். வீட்டை வாங்கின புது ஓனர் ‘’டூ லெட்’’ போர்டு வச்சாரு. திரும்ப நாங்களே வாடகைக்கு வந்துட்டோம். இந்த வீட்டை விட்டு போக மனசில்லை சார். அவ்வளவு வசதியான வீடு’’