Friday 28 July 2023

முதல் விண்மீன்

 01.01.2023 அன்று துவங்கிய 1111 மணி நேர வாசிப்பு சவாலில் இன்று 365வது மணி நேர வாசிப்பை நிறைவு செய்து முதல் விண்மீன் குறியீடைப் பெற்றேன். 555 மணி நேரம் வாசிக்கும் போது இரண்டாம் விண்மீன், 777 மணி நேரம் நிறைவடையும் போது மூன்றாம் விண்மீன், 1000 மணி நேரத்தில் நான்கும் 1111 மணியில் ஐந்து விண்மீனும். இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கின்றன. ஐந்து விண்மீனும் பெற நான் வழக்கமாக வாசிக்கும் நேரத்தை இன்னும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஐந்து விண்மீன் பெற வாய்ப்பு உள்ளது என்றே கருதுகிறேன். 

இந்த வாசிப்பு சவாலின் விதிமுறைகளில் ஒன்று தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது வாசிக்க வேண்டும் என்பது. அதன் படி இந்த 7 மாதங்களில் தினமும் ஒரு மணி நேரம் வாசித்திருக்கிறேன். நானாவித அலுவல்கள் மற்றும் இடையறாத லௌகிகப் பணிகளுக்கிடையிலும் வாசிப்புக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஒதுக்கியது வலுவான நல்ல அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது. 

இந்த 7 மாதத்தில் ஒரு நாள் 555 நிமிடங்கள் ( 9 மணி 15 நிமிடம்) வாசித்திருக்கிறேன். மேலும் சில நாட்கள் ஐந்து மணி நேரத்துக்கும் அதிகமாக. பெரும்பான்மையான நாட்கள் ஒரு மணி நேரம் மட்டுமே வாசிப்பு நிகழ்ந்திருக்கிறது. 

2014ம் ஆண்டு வெண்முரசு எழுதத் துவங்கப்பட்டதிலிருந்து நிறைவடைந்தது வரை தினமும் ஜெயமோகன் தளத்தில் வெண்முரசை வாசித்து வந்தேன். அனேகமாக அன்றன்று வாசித்து விடுவேன். வெண்முரசு எழுதப்பட்ட காலத்தில் காலை எழுந்தவுடன் வெண்முரசு வாசிப்பதென்பது வழக்கமாகிப் போனது. காலை வாசிக்கப்படும் அத்தியாயம் அடுத்த நாள் காலை வரை நினைவுகளில் சுழன்று கொண்டிருக்கும். உலகில் எந்த ஒரு நூலும் தினம் ஒரு அத்தியாயம் என வாசகனுக்கு வாசிக்கக் கிடைத்ததில்லை. அவ்வகையில் வெண்முரசு ஒரு அருநிகழ்வு. வெண்முரசை தினமும் வாசித்த வாசகர்கள் அனைவருமே வெண்முரசு ஆசிரியனுடன் தினமும் பாரதப் பரப்பில் பயணித்தனர். முதல் அத்தியாயத்திலிருந்து நிறைவு அத்தியாயம் வரை தொடர்ந்து வாசித்தது என்பது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வு என்றே மனம் கருதியது. 

2023ம் ஆண்டு 1111 மணி நேர வாசிப்பு சவாலுக்காக மீண்டும் ஒருமுறை வெண்முரசு வாசிப்பது என்று முடிவு செய்தேன். 2014ல் வெண்முரசை தினந்தோறும் வாசிப்பது என முடிவு செய்ததை விடவும் சிறப்பான முடிவு 2023ல் மீண்டும் வாசிக்க முடிவெடுத்தது. முதலில் ‘’நீலம்’’ வாசித்தேன். பின்னர் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் வாசித்து விட்டு மீண்டும் நீலம். அதன் பின் பிரயாகை என அடுத்தடுத்த நூல்கள். இப்போது ‘’எழுதழல்’’ வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிப்பு சவாலில் வாசித்த புத்தகங்களின் பெயர்களைக் குறிக்க ஒரு நிரை உள்ளது. அதில் இதுவரை நான் வாசித்த நூல்கள் என ஐந்து புத்தகங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. வெண்முரசை முழுமையாக வாசித்து விட்டு வாசித்த ஆறாவது நூலாக ‘’வெண்முரசு’’ என்று மட்டும் குறிப்பிட வேண்டும் என்று ஒரு ஆவல். 

வெண்முரசை தினந்தோறும் வாசித்த வாசகர்களில் ஒருவனாக இருந்தாலும் வெண்முரசில் மூழ்கி அத்தனை நூல்களையும் தொடர்ச்சியாக வாசிப்பதே ஆகச் சிறந்த வாசிப்பு என்பது எனது எண்ணம். வெண்முரசு வாழ்க்கையில் பத்து தடவையாவது முழுமையாக வாசிக்கப்பட வேண்டிய படைப்பு என்று இக்கணம் தோன்றுகிறது. 

வெண்முரசு வாசிப்புக்காக மட்டும் கூட  ஒரு வாசிப்பு சவால் நிகழ்த்தப்பட வேண்டும்.