Sunday, 20 August 2023

பணியிடம்

 ஊரில் ஒரு கட்டுமானப் பணியை மேற்கொண்டிருக்கிறேன். கட்டுமானப் பணி நடைபெறும் இடம் என்பது பல பணியாளர்கள் தங்கள் தீவிரமான உடல் உழைப்பை அளித்துக் கொண்டிருக்கும் இடம். அவ்வாறு பலர் தீவிரமாகப் பணியாற்றும் போது அந்த இடத்தின் தன்மை என்பது இயல்பான நிலையிலிருந்து உயர் நிலை நோக்கி சென்றிருக்கும். ஒரு கால்பந்து மைதானம் போல. ஒரு வாலிபால் மைதானம் போல. எனவே கட்டுமானப் பணியிடத்தில் இருக்கும் போது அந்த இடத்தில் இருப்பவர்கள் மனமும் உடலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இரும்புப் பட்டறை உற்பத்திப் பட்டறை இரு சக்கர வாகனப் பட்டறை ஆகிய இடங்களிலும் இந்த தன்மையை கண்கூடாக உணர முடியும். கட்டுமானப் பணியிடத்துக்கு முழுமையாக நம்மை ஒப்புக் கொடுத்தோம் என்றால் பணி முன்னேறிச் செல்லும் வேகம் நம் மனதிலும் ஏற்படுவதை உணர்ந்து கொள்ள முடியும். 

கட்டிடங்கள் ஒரு வடிவத்துக்குள் அமைபவை. மனம் வடிவமின்மையை தன் இயல்புகளில் ஒன்றாகக் கொண்டது. எனினும் மாபெரும் வடிவமின்மையில் வடிவங்களை அமைத்து விட முடியும். ஸ்தூலம், சூட்சுமம் என்று இரு நிலைகள் உண்டு. மனம் சூட்சுமமானது. கட்டுமானம் ஸ்தூலமானது. இவை இரண்டுக்கும் இடையே ஏற்படும் ஒத்திசைவே கட்டிடப் பணி. ’’உள்ளத்திலே உள்ளதுதான் உலகம்’’ என்னும் கண்ணதாசன் வரியோடு இதனை சேர்த்து யோசிக்கலாம். 

காலையில் எழுந்ததும் ஒரு வாளியை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறேன். முதல் நாள் நடந்த செங்கல் கட்டுமானப் பணி அனைத்தின் மீதும் நீர் ஊற்ற வேண்டும். வெயில் வருவதற்கு முன்னால் அவ்வாறு நீரை ஊற்றினால் அது நீண்ட நேரம் காயாமல் இருக்கும். ஒரு ஹேண்ட் பம்ப் இருக்கிறது. அதை இயக்கி வாளியில் நீர் நிரப்பி முழுதும் நீர் ஊற்றுவேன். பணியாளர்கள் பணிக்கு வர காலை 9 மணி ஆகும். அவர்கள் வந்ததும் மீண்டும் ஒரு முறை நீர் ஊற்றச் சொல்வேன். பின்னர் பணி துவங்கும். இன்ன பணி என வரையறுத்துச் சொல்ல முடியாது. ஆனால் ஏதேனும் பணி இருந்து கொண்டே இருக்கும். சிறியதிலிருந்து பெரியது வரை. கட்டுமானப் பொருட்களை ஆர்டர் செய்வது, நேரத்துக்கு அவை வந்து சேர்வதை உறுதி செய்வது, அவ்வப்போது தேவைப்படுபவற்றை வாங்கித் தருவது என ஏதேனும் பணிகள். பணியிடத்தில் இருப்பதே வேலை என்றாகி விடும். பணியிடத்தில் நாம் இருந்தாலே பணியோட்டம் சீராக இருக்கிறது என்பதை உறுதி செய்து விட முடியும். 

கட்டுமானப் பணியின் சிறப்பு என்பது ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் அது நிறைவடையும் என்பதே. நிறைவு பெற்றதும் அடுத்த பணி. மீண்டும் ஒரு புதுத் துவக்கம். 

பணியிடத்துக்கு அருகில் சிறிய தொன்மையான சிவாலயம் ஒன்று உள்ளது. காலையில் அங்கு செல்வேன். எந்நாட்டவர்க்கும் இறைவன் முன் அடி பணிவேன். எல்லாமாகவும் இருப்பவன் அவனே.