Friday 4 August 2023

அழகிய மரம்

நேற்று காலை என் நண்பர் ஒருவர் எனது மாருதி ஆம்னி வாகனத்தை சில மணி நேரம் பயன்படுத்திக் கொள்ளலாமா எனக் கேட்டார். மகிழ்ச்சியுடன் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அவர் வீட்டுக்குச் சென்று வண்டியை கொடுத்து விட்டு வந்தேன்.  நண்பருக்கு பூம்புகார் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது. அங்கே சென்று மதிய உணவருந்தி விட்டு என்னிடம் பேசினார். மாலை 4 மணி சுமாருக்கு ஊர் திரும்பி விடுவேன் என்று சொன்னார். நான் அவருக்காகவும் வண்டிக்காகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு கார் தேவைப்படவில்லை எனினும் எனது ஆம்னியை புதிதாகக் கையாளும் நண்பருக்கு வாகன இயக்கத்தில் எதிர்பாராத இடர் ஏதும் ஏற்பட்டு விடக் கூடாதே என்ற கரிசனம். 

மாலை 4 மணிக்கு நண்பரிடமிருந்து அலைபேசி அழைப்பு. எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பியதாகவும் பின் வண்டி மெயின் ரோட்டில் நின்று விட்டதாகவும் சாலையோரம் இருக்கும் வீடு ஒன்றின் எதிரில் அவர்கள் அனுமதியுடன் வண்டியை நிறுத்தியிருப்பதாகவும் சொன்னார். நான் வண்டியை லாக் செய்து சாவியைக் கொண்டு வந்து விடுமாறு சொன்னேன். ஐந்து முப்பது அளவில் அவர் வீட்டுக்குச் சென்று சாவியைப் பெற்றுக் கொண்டேன். எனது நண்பர் ஒருவர் கார் நிற்கும் கிராமத்துக்குப் பக்கத்தில் உள்ள மெக்கானிக் ஒருவரைத் தனக்குத் தெரியும் என்று கூறி அவருடைய அலைபேசி எண்ணை அளித்தார். மெக்கானிக்கைத் தொடர்பு கொண்டு அவர் இருக்கும் இடத்துக்குச் சென்று அவரை என் பைக்கில் அழைத்துக் கொண்டு கார் இருக்கும் இடத்துக்குச் சென்றேன்.

காரில் ஒரு சிறிய ஸ்டார்ட்டிங் டிரபிள். என்ன சிக்கல் என அறிய ஒரு மணி நேரம் ஆகி விட்டது. சிக்கல் இதுதான் எனக் கண்டறிந்ததும் 10 நிமிடத்தில் சரி செய்யப்பட்டது. மெக்கானிக்கை காரை ஓட்டிக் கொண்டு வரச் சொல்லிவிட்டு நான் காரைப் பின் தொடர்ந்தேன். 20 நிமிடத்தில் தருமபுரம் வழியாக ஊர் வந்து சேர்ந்தோம். காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு அவரை மீண்டும் அவருடைய ஊரில் கொண்டு விட அவரை ஏற்றிக் கொண்டு என்னுடைய பைக்கில் புறப்பட்டேன். 

தருமபுரம் தாண்டிய போது அங்கே ஒரு தேவார பாடசாலை இருந்தது. மெக்கானிக் என்னிடம் ‘’தேவாரம்’’ என்றால் என்ன என்று கேட்டார். 

’’அதாவது தம்பி ‘’ என்று ஆரம்பித்தேன். 

‘’மனுஷங்களான நமக்கு நம்மோட மனசு காட்சிகளாகவும் மொழியாவும் சப்தங்களாவும் இருக்கு. இப்ப ’’அம்மா’’ங்கற வார்த்தையை சொல்லும் போது நம்ம மனசு நெகிழுது. ஒரு குழந்தையைப் பாக்கும் போது நம்ம மனசு மிருதுவா ஆகுது. வாலைக் குழைக்கும் நாயையைப் பாத்தா , கரிச்சான் குருவியை கருடனைப் பாத்தா நம்ம மனசு சாஃப்ட் ஆகுது இல்லையா ! அதுக்கு என்ன காரணம் ? மனுஷ மனசு நெகிழும் தன்மை கொண்டது. நெகிழ்வான மனம் தன்னை இசையாவும் கவிதையாவும் வெளிப்படுத்திக்கும். மொழி தெரிஞ்ச எல்லாருக்குள்ளயம் கவிதை இருக்கும். பெரும்பாலானவங்களுக்கு நுண்மையா சின்னதா சிலருக்கு அதிகமா. நெகிழ்வான சென்சிடிவான மனம் ஒரு ஆறு ஓடுறதைப் போல கவிதையா பிரவாகம் எடுக்கும். திருஞானசம்பந்தர் பாடின பாடல்கள் கவிதைகள் தான் தேவாரம். அவருக்கு சின்னக் குழந்தையா இருக்கறப்பவே பாடல் பாடும் தன்மை இருந்தது. அந்த குழந்தையோட மொழி தான் 1500 வருஷம் தாண்டி நம்மகிட்ட வந்திருக்கு. அரிய ஒரு விஷயத்தை தன்னோட அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கணும்ங்கற உணர்வு நம்ம முன்னோர்களுக்கு இருந்துச்சு . அப்படி நம்ம கிட்ட வந்து சேர்ந்ததுதான் நம்மோட மரபு. யூ டியூப் ல ‘’தேவாரம்’’னு தேடினால் ஓதுவார்கள் பலர் பாடிய தேவாரம் கேட்கக் கிடைக்கும். அவசியம் கேள்’’என்று சொன்னேன்.

அந்த மெக்கானிக் தம்பி டிப்ளமா இன் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்திருந்தான். இளைஞன். ஆர்வமாக மேலும் பல கேள்விகள் கேட்டான். உண்மையில் அவனுக்கு மொழி சார்ந்த நுண்ணுணர்வு இருக்கிறது. நான் கூறியவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டான். அவனுக்கு வாசிப்பதற்கு சில புத்தகங்கள் கொண்டு வந்து கொடுப்பதாகக் கூறினேன். தனது பாட்டனார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்ஸின் ‘’இந்திய தேசிய ராணுவத்தில்’’ இருந்ததைக் கூறினான். எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 

அவனுக்கு திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகங்களை நூலாக வழங்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.