இந்தியத் தொல்லியல் துறையில் பணியாற்றிய திரு. கே. கே. முகமது அவர்கள் தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதியுள்ளார். தனது தாய்மொழியான மலையாளத்தில் எழுதப்பட்ட ‘’ஞான் என்னும் பாரதீயன்’’ என்னும் நூல் தமிழில் ‘’நான் எனும் பாரதீயன்’’ என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டு சமீபத்தில் வெளியாகி உள்ளது.
கேரளாவின் மலபார் பகுதியில் கொடுவள்ளி கிராமத்தில் பீரான் குட்டி - மரியோம்மா தம்பதியினரின் மகனாகப் பிறக்கிறார் திரு. கே. கே. முகமது. ஐந்து சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் திரு. முகமதுவின் உடன்பிறந்தவர்கள். மரியோம்மா ஹஜ் யாத்திரை மேற்கொள்கிறார். அதன் பின் ஹஜ்ஜூம்மா எனப்படுகிறார். அவருக்கு தனது மகன் ஒரு இமாம் ஆக வேண்டும் என்பது விருப்பம். தந்தை பீரான் குட்டிக்கு தனது மகனை ஒரு பொறியாளனாகக் காண வேண்டும் என்ற ஆவல். மதக்கல்வி பெற மதரசாவுக்கு அனுப்பப்படுகிறார் முகமது. எனினும் அவரது உள்ளம் பள்ளிக்கல்வியை நாடுகிறது. பலருடன் இணைந்து கற்கும் முறை தனது தனிமையைப் போக்கி தனக்கு பெருமகிழ்ச்சி தரும் என்ற எண்ணம் முகமதுவுக்கு இளமையிலேயே உருவாகி விடுகிறது. பள்ளியில் இணைந்து கல்வி கற்க முகமதுவுக்கு ஒரு வாய்ப்பு உண்டாகிறது.
தனது வீட்டிலிருந்து சற்று தொலைவிலிருந்த பள்ளிக்கு தானும் சக மாணவர்களும் நடந்து செல்லும் சித்திரத்தை தீட்டிக் காட்டுகிறார் திரு. முகமது. அவ்வாறு நடந்து செல்கையிலேயே தன்னைச் சுற்றி இருக்கும் நிலம், இயற்கை, பறவைகள், பிராணிகள் , சக மனிதர்கள் ஆகியோர் குறித்த அறிமுகமும் பரிச்சயமும் ஈடுபாடும் தனக்கு உருவானதைப் பதிவு செய்கிறார். இன்றைய தலைமுறை மாணவர்களும் தங்கள் வாழிடத்துடன் தங்கள் சமூகத்துடன் இவ்வாறான உயிரோட்டமான தொடர்பில் இருப்பது அவர்கள் கல்வியின் முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும் என்பதை தனது விருப்பமாக நூலில் பதிவு செய்கிறார்.
தனது ஆரம்பக் கல்வி ஆசிரியர்களே தனது வாழ்வுக்கு ஒளி அளித்த ஆசான்கள் எனக் கூறும் திரு. முகமது அவர்கள் தனக்கு அளித்ததை இப்போதும் நினைத்துப் பார்ப்பதாக கூறுகிறார். ஒரு சமூகம் நன்னிலை பெற ஆரம்பக் கல்வி ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்ற அவதானத்தை நூலில் முன்வைக்கிறார் திரு. முகமது. தனது வாழ்க்கையின் மையக் காலகட்டம் ஒன்றில் தில்லியில் பிச்சை எடுக்கும் சிறுவர்களுக்காக ஆரம்பக் கல்வி அமைக்கும் மையம் ஒன்றை தொல்லியல் துறை நினைவுச்சின்னங்களின் அருகில் தனது மனைவி மற்றும் நண்பர்களின் உதவியுடன் துவங்கி நடத்துகிறார் திரு. முகமது. 2010ம் ஆண்டு தில்லி வந்த அப்போதைய அமெரிக்க அதிபரான திரு. பராக் ஒபாமாவுக்கு தில்லியில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை விளக்கும் வழிகாட்டியாக திரு. முகமது இருக்கிறார். அப்போது திரு. பராக் தன்னை திரு. முகமது கல்விப்பணி ஆற்றும் இடத்துக்கு அழைத்துச் செல்லுமாறு கூற அவ்வாறே நிகழ்கிறது. அங்கிருக்கும் மாணவர்களுடன் உரையாற்றும் ஒபாமா ‘’கல்வியே எல்லா இடர்களிலிருந்தும் மனிதர்களை விடுவிக்கும்’’ என்று பேசுகிறார். 2014ம் ஆண்டு மீண்டும் இந்தியா வருகை புரியும் திரு. பராக் ஒபாமா முன்னர் தான் சந்தித்த சிறுவர்களில் விஷால் என்ற சிறுவனைக் குறித்து விசாரித்து அறிகிறார். அந்த சிறுவன் அப்போது எட்டாம் வகுப்பு பயின்று கொண்டிருந்தான். அவனுடன் ஒரு உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அவனுடன் உரையாடினார் திரு. பராக் ஒபாமா என்ற தகவலை இந்த நூலில் பதிவு செய்கிறார் திரு. முகமது.
கொடுவள்ளி கிராமத்து நூலகத்தில் இருந்த நாளிதழ்களும் புத்தகங்களுமே தன்னைத் தனக்கு அடையாளம் காட்டியதாகச் சொல்கிறார் திரு. முகமது. மாத்ருபூமி வெளியிட்ட மொழிபெயர்ப்பு நூலான ஜவஹர்லால் நேருவின் ‘’ டிஸ்கவரி ஆஃப் இந்தியா’’ நூல் தனக்கு வரலாற்றின் மீதும் தொல்லியல் மீதும் சிறு வயதிலேயே ஆர்வமளித்தது எனக் கூறுகிறார் திரு. முகமது. ராகுல் சாங்கிருத்யாயனின் நூல்களும் தனக்கு மிகவும் பிடித்தமான்வை என்பதையும் சொல்கிறார்.
அலிகர் பல்கலைக் கழகத்தில் வரலாறு படிக்கச் செல்கிறார். இடதுசாரிகளின் அறிமுகம் கிடைக்கிறது. இந்தியக் கல்வித்துறையில் எவ்வாறு இடதுசாரிகள் தங்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல் சுயலாபத்துக்காக பெரும் சீரழிவுகளை உருவாக்கியிருக்கிறார்கள் - உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தனது பற்பல அனுபவங்களின் அடிப்படையில் விளக்கிச் சொல்கிறார் திரு. முகமது. அவர் அலிகரில் கல்லூரி மாணவனாக வரலாறு படிக்க ஆரம்பித்ததிலிருந்து தனது பணி ஓய்வு பெறும் வரை எவ்வாறெல்லாம் தனக்கு இன்னல்களையும் இடர்களையும் தொடர்ச்சியாக இடதுசாரிகள் அளித்தார்கள் என்பதை வாசகர் முன் வைக்கிறார். மேலும், இடதுசாரி தரப்பு எவ்விதம் கொடுவிளைவுகளை இந்திய கல்வித் துறைகளில் உருவாக்குகிறது என்பது குறித்து விரிவாக பதிவு செய்திருக்கிறார் திரு. முகமது அவர்கள்.
தொல்லியல் துறை அதிகாரியாக நாடெங்கும் பணி புரியும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. இந்தியாவின் பண்பாட்டுப் பாரம்பர்யம் குறித்து பெருமதிப்பு கொண்டவரான திரு. முகமது அவர்களுக்கு அந்த துறையில் தனது பங்களிப்பாக பல விஷயங்களை அளிக்க ஊழ் அவருக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. நூலில் ஒரு இடத்தில் தனது அனுபவம் ஒன்றைப் பதிவு செய்கிறார் முகமது. அதாவது, முகமது சட்டீஸ்கரில் பணி புரிகிறார். அப்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள மலை மீதிருக்கும் பாழடைந்த சிவாலயம் ஒன்றினுக்குச் செல்கிறார். அந்த கோயிலின் அர்ச்சகர் ஒருவர் முகமதுவிடம் தொல்லியல் துறை மூலமாக இந்த கோயிலைச் சீரமைத்துத் தருமாறு கோரிக்கை வைக்கிறார். தான் சட்டீஸ்கர் மாநிலத்துக்கு மட்டுமே பொறுப்பாளர் என்றும் இந்த கோயில் போபால் அலுவலகத்துக்குக் கட்டுப்பட்டது என்பதால் தன்னால் ஏதும் செய்ய இயலாது என அர்ச்சகரிடம் வருத்தத்துடன் தெரிவித்து விட்டு வந்து சேர்கிறார் முகமது. அன்று இரவு உறக்கத்தில் திரு. முகமது அவர்களுக்கு ஒரு கனவு. கனவில் சிவபெருமான் தோன்றி அந்த ஆலயத்தைச் சீரமைக்குமாறு சொல்கிறார். முகமது பதில் சொல்வதற்குள் கனவு கலைந்து விடுகிறது. நூதனமான கனவுகளில் ஒன்று என்று எண்ணிக் கொள்கிறார் திரு. முகமது. மறுநாள் காலை அலுவலகம் செல்கிறார். அலுவலகம் சென்ற ஒரு மணி நேரத்தில் அவருக்கு தில்லியிலிருந்து ஒரு தொலைநகல் ( ஃபேக்ஸ்) வருகிறது. சட்டீஸ்கர் பொறுப்புடன் மத்தியப் பிரதேச பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டிருப்பதாக. உடன் அந்த சிவாலயம் செல்கிறார் முகமது. இந்த விஷயத்தை கோயில் அர்ச்சகரிடம் கூறுகிறார். அர்ச்சகர் முகமது இங்கே வருவதற்கு முதல் நாள் இரவில் சிவன் தன் கனவிலும் வந்ததாகவும் நாளை ஒரு அதிகாரி வருவார் அவரிடம் கோயிலை புனரமைக்கச் சொல் எனக் கூறியதாகவும் அதன் படியே அவர் முகமதுவிடம் கேட்டுக் கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார். அந்த கோயிலைப் புனரமைக்கிறார் முகமது.
தொல்லியல் துறையில் பணி புரிந்த போது அரசியல்வாதிகளுடன் ஏற்பட்ட பல்வேறு மோதல்கள் குறித்தும் பதிவு செய்கிறார் முகமது.
ராமஜென்ம பூமி இயக்கம் தீவிரம் கொண்டிருந்த காலகட்டத்தில் பாபர் கும்மட்டம் ஹிந்துக்களிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற தனது எண்ணத்தை ஒரு தொல்லியல் அறிஞர் என்ற கோணத்தில் முன்வைக்கிறார் முகமது. அதன் மூலம் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்புக்கு ஆளாகிறார். இருப்பினும் தனது எண்ணத்தில் சிறிதும் மாற்றமின்றி இருக்கிறார் முகமது. இடதுசாரிகள் பாபர் கும்மட்டம் இருந்த இடம் பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் சொந்தமானது என்ற கருத்தை பரப்பிக் கொண்டிருந்த நிலையில் 1976-77ம் ஆண்டிலேயே அயோத்தி அகழ்வாராய்ச்சியில் கலந்து கொண்டவர் என்ற முறையில் கும்மட்டத்தின் தூண்களில் ஹிந்து தெய்வ உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதை ஆதாரமாகக் காட்டி அந்த இடம் கோவிலே என நிறுவுகிறார் முகமது.
1990ம் ஆண்டு தினமணியில் திரு. ஐராவதம் மகாதேவன் ராமஜென்ம பூமி இடத்தில் இருந்தது ஆலயமா என்பதை அறிய மறு அகழாய்வு செய்யலாம் என்ற கருத்தை எழுதுகிறார். அதற்கு ஆதரவு தெரிவித்து ஒரு விரிவான கடிதத்தை திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு அனுப்பி வைக்கிறார் திரு. முகமது. அந்த கடிதம் கண்ட திரு. மகாதேவன் திரு. முகமது அவர்களை அவருடைய அலுவலகத்தில் நேரில் சந்திக்கிறார். அந்த கடிதத்தை தினமணியில் வெளியிட விரும்புவதைத் தெரிவிக்கிறார். முகமது ஓர் அரசு அதிகாரி. ராமஜென்மபூமி விவகாரம் உச்சத்தில் இருக்கும் நேரம். இந்த நிலையில் அவரது பெயரில் கட்டுரை வெளியானால் திரு. முகமது அவர்களுக்கு சிக்கல் உருவாகக் கூடும் என்பதால் அந்த விரிவான கடிதம் ‘’ Letters to Editor'' பகுதியில் பிரசுரமாகிறது. அந்த கடிதத்தின் மொழிபெயர்ப்பு பெரும்பாலான இந்திய மொழிகளில் பிரசுரமாகிறது. ஒரு தொல்லியில் அறிஞரின் கூற்று என்ற வகையில் இந்த விஷயத்தில் அந்த கடிதம் முக்கிய ஆவணமாகிறது.
பாபர் கும்மட்டம் இடிக்கப்பட்ட பின் நிகழ்ந்த அகழாய்வு அங்கு முன்னர் இருந்தது ஆலயம் என்பதை நிரூபித்தது. அந்த அகழாய்விலும் திரு. முகமது அவர்கள் இடம் பெற்றிருந்தார். ‘’ மரங்களும் நடுங்கும் குளிரில் சட்டையின்றி காலில் செருப்பு இன்றி தனது கடவுளான ஸ்ரீராமனை தரிசிக்க பல நூறு மைல் நடந்து வரும் ‘’ மனிதனின் உணர்வு மதிக்கப்பட வேண்டும் என்ற தனது உணர்வை நூலில் பதிவு செய்கிறார் திரு. முகமது.
இன்றைய காலகட்டத்தில் தொல்லியல் துறை பண்பாட்டையும் நாட்டின் தொன்மையையும் தனது குடிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டியதின் அவசியத்தையும் அதே நேரம் தொல்லியில் துறை லாபமீட்டும் வகையிலும் செயல்பட வேண்டியதின் தேவையையும் திரு. முகமது முன்வைக்கிறார்.
உண்மை குறித்த தேடல் உள்ளவன் அடையும் மனநிறைவு என ஒன்று உண்டு. அதனை தனது அனுபவங்கள் மூலம் பணிகள் மூலம் அறிந்தவர் திரு. முகமது அவர்கள். பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் பெற்றவரான திரு . முகமது அவர்களுக்கு மத்திய அரசு 2019ம் ஆண்டு ‘’பத்மஸ்ரீ’’ விருது அளித்தது.
நூல் : நான் எனும் பாரதீயன். ஆசிரியர் : திரு. கே. கே. முகமது விலை : ரூ. 180/-
பதிப்பகம் : சங்கத்தமிழ் பதிப்பகம்,கோவை-12
( sangatamilpathippagam(at)gmail(dot)com)