Wednesday 14 August 2024

நான் கண்ட விவேகானந்தர் - சகோதரி கிருஸ்டைன்

 


அமெரிக்காவில் டெட்ராய்ட் நகரில் வசிக்கும் கிறிஸ்டைன் தேவாலயம் ஒன்றில் ஓர் இந்தியத் துறவி உரையாற்றுவதாய் அறிந்து அந்த உரையைக் கேட்கச் செல்கிறார். அன்று கேட்கும் உரை அவரது வாழ்க்கைப் போக்கில் ஒரு திருப்புமுனையாக அமைகிறது. தனது வாழ்க்கையை ஆன்மீகப் பாதையில் அமைத்துக் கொள்ள அந்த உரை காரணமாகிறது. கிறிஸ்டைன் சகோதரி கிறிஸ்டைன் ஆகிறார். டெட்ராய்ட்டில் அன்று நிகழ்ந்த உரையை நிகழ்த்தியவர் சுவாமி விவேகானந்தர். 

சகோதரி கிறிஸ்டைன் தனது குருநாதர் குறித்து தனது நினைவுகளை எழுதியுள்ள நூல் ‘’நான் கண்ட விவேகானந்தர்’’. ஒவ்வொரு சொல்லிலும் ஜீவன் ஒளிரும் நுண்ணிய மொழியும் சித்தரிப்பும் சகோதரி கிறிஸ்டைன் உடையது. கோடானுகோடி ஜீவராசிகளில் ஓரிரண்டு ஜீவன்களுக்கு மட்டுமே வாய்க்கும் உன்னதமான ஆன்மீக அனுபவங்களை சொல்லில் வெளிப்படுத்தும் தருணம் என்பது மிகவும் அபூர்வமானது. சகோதரி கிறிஸ்டைனின் நூல் நெடுக இந்த அபூர்வம் நிகழ்ந்துள்ளது. 

முதல் முறையாக சுவாமிஜியின் உரையைக் கேட்கும் அனுபவத்தை சகோதரி விவரிக்கிறார். சுவாமிஜியின் மனப் பிரவாகத்தைக் காட்டாற்று வெள்ளம் என்கிறார். அவர் முன்வைக்கும் விஷயங்கள் காஷ்மீரச் சால்வையின் நேர்த்தி கொண்டவை என்கிறார். டெட்ராய்ட் நகரில் கேட்ட சுவாமிஜியின் உரை சகோதரி மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

பின்னர் , ஆயிரம் தீவுச் சோலையில் சுவாமிஜி தனது அமெரிக்க சீடர்களுடன் ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டிருக்கும் போது அங்கு ஒரு சீடராக இணைந்து கொள்கிறார் சகோதரி. சுவாமிஜியின் வாழ்க்கை குறித்து சுவாமிஜியின் குருநாதர் குறித்து என பல விஷயங்களை சுவாமிஜியின் சொற்கள் மூலம் நேரடியாகக் கேட்டறியும் வாய்ப்பைப் பெறுகிறார். 

யார் குரு என்ற கேள்வி சுவாமிஜியிடம் கேட்கப்படுகிறது. யார் பிரம்மத்தை உணர்ந்தவரோ அவரே குரு என பதில் சொல்கிறார் சுவாமிஜி. வினாவுக்கு பதில் சொன்னவர் பிரம்மத்தை உணர்ந்த ராமகிருஷ்ண பரமஹம்சரை குருவாகப் பெற்றவர். வினாவை எழுப்பியவர்கள் பிரம்மத்தை உணர்ந்த சுவாமி விவேகானந்தரை குருவாகப் பெற்றவர்கள். இந்த அழகிய தருணம் இந்த நூலில் பதிவாகியுள்ளது. 

சுவாமிஜி தன் சீடர்களிடம் ‘’கன்ஹேரி’’ என்ற இடத்தைக் குறித்துக் கூறுகிறார். நாம் அனைவரும் அங்கே பல நாட்கள் ஆன்மீக சாதனைகள் செய்து பல நாட்கள் பல மாதங்கள் பல வருடங்கள் ஒன்றாக இருந்திருக்கிறோம் என்று சொல்கிறார். இதனை சுவாமிஜி கூறும் போது அங்கிருக்கும் பலர் இந்தியாவுக்கு வந்ததே இல்லை. பின்னர் பல ஆண்டுகள் கழித்து சகோதரி மும்பை அருகில் உள்ள கன்ஹேரி என்ற இடத்துக்கு வருகிறார். அது பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் பௌத்த சங்கமாக இருந்த இடம் என்பதைக் காண்கிறார். பிறவிகள் பலவற்றில் ஒன்றில் தானும் தன் சீடர்களும் துறவிகளாக இருந்ததை சுவாமிஜி கூறியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்கிறார் சகோதரி. 

சகோதரி கிறிஸ்டைனின் அறிவுத்திறனையும் அழகுணர்ச்சியையும் தெய்வீகத் தன்மையையும் அவரது சொற்களில் காணும் போது அவரது குருநாதரான சுவாமி விவேகானந்தர் என்னும் பெரும் ஞான சூரியனை நம் மனம் கற்பனை செய்து கொள்கிறது. அந்த ஞான சூரியன் முன் அடிபணிகிறது.

நான் கண்ட விவேகானந்தர் - சகோதரி கிறிஸ்டைன்- மொழியாக்கம் : கோவை ந. சுப்ரமணியன் பக்கம் : 242 விலை : ரூ.60 பதிப்பகம்: ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை - 4.