சமீபத்தில் நான் அடிக்கடி சந்திக்கும் நண்பரின் வீட்டில் உரையாடிக் கொண்டிருந்த போது திருக்கோவிலூர் ஞானானந்த தபோவனம் குறித்து நிறைய விஷயங்களை எங்கள் உரையாடலில் பல நாட்களாக கூறிக் கொண்டிருந்தார். அங்கே சென்று வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டேயிருந்தது. கடந்த இரண்டு வாரமாக உடல்நலக் குறைவால் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தேன். இரு சக்கர வாகனத்தில் நீண்ட தூரம் பயணித்தால் உடலும் மனமும் புத்துணர்வு பெறும் என எண்ணினேன்.
இன்று காலை 5.30 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி பைக்கில் திருக்கோவிலூர் செல்லலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். என்னுடைய பைக் பயணத்துடன் ஒன்றிப் பிணைந்து விட்ட விஷயம் என்பது காலை 6 மணிக்கு பயணத்தைத் துவக்க வேண்டும் என்பது. அதே போல் மாலை 6 மணிக்கு தங்குமிடத்துக்கு வந்து சேர்ந்து விட வேண்டும் என்பது. இந்த இரண்டு விதிகளும் எப்போதும் என்னை ஆள்கின்றன. நேற்று இரவு காலை 4.30க்கு அலாரம் வைத்து விட்டு படுத்தேன். அலாரம் அடித்தது. அணைத்து விட்டு உறங்கி விட்டேன். எழுந்த போது மணி 6. அதன் பின் கிளம்பினேன். 6.45க்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன். அதில் ஒரு நன்மை இருக்கிறது. 5.30க்கு கிளம்பினால் அனைவரும் உறங்கிக் கொண்டிருப்பார்கள். கதவைத் திறப்பது வெளி வாயில் கதவைத் திறப்பது பைக்கை ஸ்டார்ட் செய்வது ஆகிய ஒலிகள் அனைவருக்கும் கேட்கும். எல்லாரும் எழுந்து நடமாட்டம் இருக்கும் போது கிளம்பினால் தனிக் கவனம் இருக்காது. இந்த விஷயம் நேற்று இரவிலிருந்து மனதில் இருந்திருக்கிறது. அதனால் தான் அலாரத்தை நிறுத்தி விட்டு தூங்கி விட்டேன். இந்த காலை 6 மணி - மாலை 6 மணி விதி இந்தியப் பயணத்துக்குத்தான் என்றாலும் எந்த பயணம் செய்தாலும் அதைப் பின்பற்ற வேண்டும் என என் மனம் தவிக்கிறது. நான் கிளம்பும் போது வானம் மேகமூட்டமாக இருந்தது. எனவே காலை 7 மணி காலை 6 மணி போலவே இருந்தது.
ஊரிலிருந்து திருக்கோவிலூர் 150 கி.மீ. பைக்கில் செல்ல 4 மணி நேரம் ஆகலாம். நேற்று இரவே அலைபேசியை ‘’சுவிட்ச் ஆஃப்’’ செய்து வைத்து விட்டேன். பைக் பயணத்தில் அது ஒரு முக்கிய விஷயம் என்று நான் எண்ணுவேன். பைக் பயணம் செல்லும் போது அலைபேசி இல்லாமல் இருப்பது உகந்தது என்பது எனது எண்ணம்.
இப்போது வைத்தீஸ்வரன் கோவில் ஊருக்கு புறவழிச் சாலை வந்து விட்டது. அந்த புறவழிச் சாலை சீர்காழி புறவழிச் சாலையுடன் சென்று இணையும். ஆனைக்காரன் சத்திரம் என்னும் கொள்ளிடத்தில் இருக்கும் பாலம் இருக்கவே இப்போது இன்னொரு பாலம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. அது சிதம்பரம் புறவழிச் சாலையுடன் இணைய கிட்டத்தட்ட கீரப்பாளையம் வரை கொண்டு சேர்த்து விடுகிறது. வைத்தீஸ்வரன் கோவில் புறவழிச் சாலையில் தொடங்கி பிடி பிடி என்று கீரப்பாளையம் வந்து சேர்ந்தேன். புவனகிரி ஸ்ரீராகவேந்திர சுவாமி ஆலயத்துக்கு செல்ல விரும்பினேன். இருப்பினும் புவனகிரியைக் கடந்து சென்று விட்டேன். சேத்தியாதோப்பு வடலூர் வழியாக பண்ணுருட்டி. அங்கிருந்து மடப்பட்டு வழியாக திருக்கோவிலூர் 45 கி.மீ. எனக்கு அந்த பாதை புதிய பாதை. அதில் பயணித்த நினைவில்லை. புதிய பிரதேசங்களைப் பார்த்தவாறு திருக்கோவிலூர் வந்து சேர்ந்தேன். தோராயமாக 10.45 நான் வந்து சேர்ந்த போது இருக்கலாம்.
தபோவன அதிஷ்டானத்தில் இரண்டு மணி நேரம் இருந்தேன். அதிஷ்டானத்தில் அன்ன தானம் செய்தார்கள். அதனை உண்டேன். உணவில் பாயசம் இருந்தது. கேரளத்தில் செய்யப்படும் ‘’சக்க பிரதமன்’’ ( பலாப்பழ பாயசம்) போன்ற பாயசம் இன்றைய உணவில் இருந்தது.
தபோவன அலுவலகத்தில் ஞானானந்தர் குறித்த இரண்டு நூல்களை வாங்கினேன். குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது முழுமையாக தங்கியிருக்கும் விதமாக தபோவனத்துக்கு மீண்டும் வர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஸ்வாமியை நமஸ்கரித்து புறப்பட்டேன்.
திருக்கோவிலூர் மணம்பூண்டியில் ரகுராய தீர்த்தரின் அதிஷ்டானம் உள்ளது. அங்கு சென்று வணங்கினேன்.
பண்ணுருட்டி பாதை சாலை அமைத்துக் கொண்டு இருப்பதால் வேறு பாதையில் செல்லலாமா என எண்ணினேன். திருக்கோவிலூர் உளுந்தூர்பேட்டை சாலை நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். அதில் சென்றேன். எலவானசூர் என்ற ஊரில் பைக் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஒரு டாடா ஏஸ் டிரைவர் தன்னிடம் இருந்த ‘’டூல்ஸ்’’ மூலம் பைக் டயரை கழட்டிக் கொடுத்தார். அந்த டிரைவரின் நண்பர் எனக்கு லிஃப்ட் கொடுத்து மெக்கானிக் கடையில் டிராப் செய்தார். டயரை பஞ்சர் ஒட்டியதும் மெக்கானிக் தனது நண்பர் ஒருவரிடம் ‘’டூல்ஸ்’’ கொடுத்து டயரை பொருத்திக் கொடுக்க சொன்னார். அவரும் அவ்வாறே செய்தார். அவர் எனக்கு ஒரு புதிய வழியைக் கூறினார். அதாவது எலவானசூரிலிருந்து உளுந்தூர்பேட்டை உள்ளே செல்லாமல் விருத்தாசலம் செல்ல வழியுள்ளது ; அதில் சென்றால் பயண தூரம் 10 கி.மீ குறையும் என்றார். அவர் சொன்ன படியே சென்றேன்.
பின்னர் விருத்தாசலத்திலிருந்து வடலூர் செல்லாமல் கம்மாபுரம் வழியாக சேத்தியாதோப்பு சென்றடைந்தேன். அங்கிருந்து சிதம்பரம். வழியில் புவனகிரியில் ஸ்ரீராகவேந்திர சுவாமி ஆலயம் சென்று வணங்கினேன். பின்னர் புறவழிச்சாலைகளின் வழியே மயிலாடுதுறை. வீடடைந்த போது நேரம் மாலை 6.45.