நூல் : டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஆசிரியர் : வசந்த் மூன் பக்கம் : 266 விலை : ரூ. 240 பதிப்பகம் : நேஷனல் புக் டிரஸ்ட் , புது தில்லி. தமிழாக்கம் : டாக்டர் .என். ஸ்ரீதரன்
இந்தியாவின் அரசியல் வரலாற்றில் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரைப் போல ஒருவரைப் பார்ப்பது அரிது. அவரது வாழ்க்கையைப் போன்ற செறிவு மிக்க இன்னொரு அரசியல் வாழ்க்கையையும் காண்பது அரிது. இந்தியா எத்தனையோ நேர்மையான அரசியல்வாதிகளைக் கண்டிருக்கிறது. எத்தனையோ உறுதி மிக்க அரசியல்வாதிகளைக் கண்டிருக்கிறது. எத்தனையோ திறன் படைத்த அரசியல்வாதிகளைக் கண்டிருக்கிறது. எத்தனையோ அரசியல் மேதைகளைக் கண்டிருக்கிறது. இந்திய அரசியலில் மேதமை, திறன் , உறுதி மற்றும் நேர்மை மிக்க அரசியல்வாதி என ஒருவரைக் காண முற்படுவோமாயின் நாம் மகாத்மா காந்தியையும் பாபா சாகேப் அம்பேத்கரையும் மட்டுமே சென்றடைவோம். அவரது வாழ்க்கை உணர்ச்சிமயமானது. அவரது ஒவ்வொரு நாளுமே போராட்டமானவை. சிறு குழந்தையாயிருந்ததிலிருந்து தன் வாழ்வின் கடைசி தினம் வரை அவர் ஓயாமல் அறத்துக்காகப் போராடிக் கொண்டிருந்தார். அட்சரம் பயிலத் தொடங்கிய நாள் முதல் தனது இறுதி மூச்சு வரை நூல்களைப் பயின்று கொண்டிருந்தார். அனுதினமும் வாழ்க்கை குறித்தும் சமூகம் குறித்தும் சிந்தித்துக் கொண்டிருந்தார். அவரது முகம் ஒரு குழந்தையின் முகம். அவரது கண்கள் ஒரு குழந்தையின் கண்கள். ஒரு அரசியல்வாதியின் ஆக உயரிய நிலையில் அவர் இருந்தார். இந்திய அரசியலில் அவருக்குப் பின் அவரளவு மேதை என அவரளவு படிப்பாளி என எந்த அரசியல்வாதியும் இல்லை. அந்த வகையில் இந்திய அரசியலில் அவர் ஒரு துருவ நட்சத்திரம். சமூகம் குறித்து சிந்திக்கும் எவருக்கும் சமூகத்துக்காகப் பணியாற்றும் எவருக்கும் அவரது வாழ்க்கை வழிகாட்டியபடியே இருக்கும்.