எனது நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் என்னிடம் தனக்குள்ள ஓர் ஐயத்தை வெளிப்படுத்தினார். அவரது ஐயம் இதுதான். இந்திய மரபு ஞானம், பக்தி, கர்மம் ஆகிய மூன்று மார்க்கங்களை விடுதலைக்கான வீடுபேறுக்கான வழியாகக் கூறுகிறது. இந்த மூன்றும் அதன் தன்மைகளில் சிறு சிறு வேறுபாடுகள் கொண்டவை. உணர்வு நிலைகளில் இந்த மூன்றும் வேறுவேறானவை. இந்த மூன்று மார்க்கங்களும் தங்கள் பாதையில் செல்பவர்களுக்கு வெவ்வேறு குறிப்புகளை அளிப்பவை. இந்த மூன்றையும் குறித்த அறிமுகங்கள் கிடைத்தவாறே இருக்கின்றன. இன்றைய வாழ்க்கையில் இந்த மூன்று மார்க்கங்களில் ஏதேனும் ஒன்றை முழுமையாக பின்பற்றிடுதல் என்பது எளிதானதாயில்லை. கேள்விகள் நிறைந்த இன்றைய மனிதனின் அகத்துக்கு மரபு கூறும் வழிகள் இன்றைய காலகட்டத்துக்கு உகந்ததா என்ற ஐயம் இன்றைய சூழலில் உருவாகிறது. என்னிடம் வினவப்பட்ட இந்த ஐயம் குறித்து சிந்தித்துப் பார்த்தேன். சிந்தித்துப் பார்த்தால் எளிதில் தெளியக் கூடிய ஐயமே இது என்பது எனக்குப் புலப்பட்டது. அந்த விதத்தில் எனக்கு அது உபயோகமாகவும் இருந்தது.
தத்துவத்தில் எந்த கேள்வியும் புதிதாக கேட்கப்படுவதில்லை. எல்லா வினாக்களும் அடிப்படையானவை. எப்போதும் கேட்கப்படுபவை. ஒவ்வொரு காலகட்டத்துக்கு தகுந்தாற் போல அதற்கான விடைகள் அளிக்கப்படுகின்றன.
இன்றைய சூழல் என்பதை முதன்மைப்படுத்தி ஐயம் எழுப்பப்பட்டதால் அதனை அடித்தளமாகக் கொண்டு விடை காணத் தொடங்கலாம் என எண்ணுகிறேன். இன்றைய சூழல் என்பதை ஒரு புரிதலுக்காக இவ்வாறு வரையறுத்துக் கொள்ளலாம். இந்த வரையறை முழுமையான வரையறை அல்ல. ஒரு துவக்கத்துக்காக அனைவரும் குறைந்தபட்சமாக ஒத்துக் கொள்ளும் அனைவரும் குறைந்தபட்சமாகவேனும் ஏற்கும் ஒரு வரையறையே.
இன்றைய சூழலில் சாமானியனின் பசி நீங்கியிருக்கிறது. சாமானியனின் வறுமை நீங்கியிருக்கிறது. எல்லா விதமான வாய்ப்புகளும் சாமானியர்களுக்குத் திறந்து விடப்பட்டிருக்கிறது. தனிமனிதன் என்னும் கருத்தாக்கம் சமூகவியலை வியாபித்திருக்கிறது. இந்த வரையறையிலிருந்து நாம் துவங்கலாம்.
இன்றைய மனிதனின் சிக்கல்கள் என்ன என்பதை அடுத்ததாக வரையறுத்துக் கொள்ளலாம். பசி நீங்கியிருப்பதால் மிகையாக உணவு உண்ணத் தொடங்கியிருக்கிறான் இன்றைய மனிதன். உடற்பருமனும் சர்க்கரை நோயும் இதய நோயும் அவனை ஆக்கிரமிக்கின்றன. பொழுதுபோக்கு சாதனங்கள் அவனை கட்டுண்டு போகச் செய்திருக்கின்றன. உடலுக்கு உடலின் சாத்தியங்களுக்கு உட்பட்ட வேலைகளைக் கூட அவனால் தரமுடியவில்லை. வறுமை நீங்கியிருப்பதால் குறைந்தபட்சமாகவேனும் செல்வம் அவனிடம் இருக்கிறது. மேலும் மேலும் செல்வம் வேண்டும் என்ற முனைப்பே அவனைத் தீவிரமாக இயங்க வைக்கிறது. செல்வத் தேடலுக்கு தனது வாழ்வின் பெரும்பகுதி பங்கை அளிக்கிறான். அனேகமாக எல்லா பகுதியையும் அளிக்கிறான். செல்வ நாட்டத்தின் மீது குறைவான பற்று கொள்ளுங்கள் என்னும் மரபின் அறிவுரை அவனுக்கு சலிப்பூட்டுகிறது. காலம் காலமாக ஏன் சாமானியனிடமே இது கூறப்படுகிறது என்னும் எரிச்சல் கொள்கிறான். உறவுச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. உறவுச் சிக்கல்கள் மிகுந்த தீவிரம் கொண்டிருக்கின்றன. இன்றைய மனிதன் வாழ்வில் அமைதி இல்லை. இன்றைய மனிதன் வாழ்வில் குறைவான மகிழ்ச்சியே இருக்கிறது. மகிழ்ச்சி என அவன் எண்ணி செய்யக் கூடிய செயல்கள் அவனுக்குத் துன்பத்தைத் தருகின்றன.
இந்நிலையில் இந்திய மரபு மானுட விடுதலைக்கான மூன்று மார்க்கங்கள் குறித்து பேசுகிறது. அவை ஞானம், பக்தி, கர்மம் என்பவை. ஞான மார்க்கம் அறிவின் துணை கொண்டு தன்னையும் தன்னைச் சுற்றியிருக்கும் உலகையும் அறிவதற்கான வழியைக் கூறுகிறது. ஞானமே அதி உன்னதமானது என்பது அம்மார்க்கத்தின் முடிபு. இன்றைய மனிதன் தன்னை முழுமையாக ஞான மார்க்கத்தில் பயணிக்க விருப்பம் கொண்டவனாயில்லை. முழுமையான ஞானம் பெற வாழ்க்கையின் கணிசமான பகுதியை அதற்கு அளிக்க வேண்டும் என்பது அவனுக்குத் தடையாக இருக்கிறது. மேலும் ஞான மார்க்கத்திலேயே ஒன்றை மறுக்கும் இன்னொன்று என பல தரப்புகள் இருப்பதால் அவன் குழப்பமடைகிறான். இது தனக்கான மார்க்கம் இல்லை என்ற முடிவுக்கு வருகிறான். பக்தி என்பது உணர்வின் தூய நிலையில் இருப்பது. அந்த தூய நிலைக்காக எல்லா உலகியல் உணர்வையும் நீக்கிக் கொள்வது. இன்றைய மனிதனின் ஒரே பிடிமானம் அவனது உலகியல் உணர்வே. அவ்வகையில் அந்த மார்க்கமும் அவனுக்கானதாக இல்லை என்றாகிறது. கர்ம மார்க்கம் அதன் அடிப்படையிலேயே செயலின் மீதான பற்றின்மையை வலியுறுத்துகிறது. இன்றைய மனிதன் பற்றுடன் செயல் செய்கிறான். எண்ணற்ற செயல் செய்கிறான். எனவே பற்றில்லாமல் செயல் செய்யக் கூறும் கர்ம மார்க்கமும் அவனுக்கானதாக அவன் உணர்வில் இல்லை. அவன் துயருற்றிருக்கிறான் என்பது உண்மை. நோய் அவனை துயருறுத்துகிறது. மரண பயம் அவனை துயருறுத்துகிறது. உறவின் பிரிவுகள் அவனை துயருறுத்துகிறது. அமைதியின்மையும் மகிழ்ச்சியின்மையும் அவனை துயரம் கொண்டவனாக ஆக்குகின்றன. இவற்றிலிருந்து விடுபட வேண்டும் என எண்ணுகிறான்.
நமது மரபு மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் புராதானமானது. நமது மரபு நாம் அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய நியதிகள் என அனைவருக்குமான நியதிகளை வகுத்துக் கொடுத்துள்ளது. அவை இன்றைய மனிதனுக்கு வந்து சேர்ந்துள்ளன. அவனால் அவற்றை முழுமையாகக் கைவிட முடியவும் இல்லை. முழுமையாக பின்பற்ற இயலவும் இல்லை. அதிகாலை துயிலெழ வேண்டும் ; காலைக் கடன்களை முடித்து நீராட வேண்டும் ; இருக்கும் இடத்தில் தீபம் ஏற்றி இருக்க வேண்டும்; இறைவனைத் துதிக்க வேண்டும். பகல் பொழுதில் உறக்கம் கொள்ளலாகாது; இதைப் போல் இன்னும் பல. இவை சூழ்நிலைகளைப் பொறுத்து மாறுதலுக்குரியவை என்றாலும் இவையும் இன்றைய மனிதனுக்கு உவப்பானவையாக இல்லை.
இன்றைய மனிதன் வாழ்வுக்கு மரபும் மரபின் மூன்று மார்க்கங்களும் எவ்விதம் உதவி செய்ய இயலும் என்பதைக் காண்போம்.
இன்றைய மனிதனால் ஞானம், பக்தி, கர்மம் ஆகிய மூன்று மார்க்கங்களில் ஏதேனும் ஒன்றனுக்கு முழுமையாக தன்னை அளித்து அதில் பயணித்திடுவது என்பது சிரமமான தேர்வாக இருக்கக்கூடும். இன்றைய மனிதன் தனது அன்றாட வாழ்வில் இந்த மூன்று மார்க்கங்களுக்கும் இடம் கொடுக்க வேண்டும்.
உலக உயிர்களில் மானுடனுக்கே முழுமை ஞானம் அருளப்பட்டிருக்கிறது. எனவே அவன் நாளும் ஞானப்பாதையில் நடந்திட வேண்டும். வாழ்க்கை குறித்த கேள்விகளை எழுப்பிக் கொள்ள வேண்டும். அதற்கான விடைகளைக் கண்டடைந்து கொண்டே இருக்க வேண்டும். பிரபஞ்சப் பெருவெளியுடன் அவனால் தனது உணர்வின் மூலம் தொடர்பில் இருக்க முடியும். எனவே ஒரு நாளில் சில நிமிடங்களேனும் பக்திக்கு இடம் தர வேண்டும். தனக்காகவும் தனக்காக மட்டுமன்றி பிறருக்காகவும் செயல் ஆற்ற வேண்டும். செயலாற்றலின் மூலம் விடுதலை அடைய எளிய வழி கர்மயோகம் கூறும் பற்றின்மையை அடைதல். நாள் முழுதும் வாழ்நாள் முழுதும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அருளிய பகவத்கீதை ஞானமார்க்கம், பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம் ஆகிய மூன்றையும் குறித்து பேசுகிறது. இந்த மூன்று மார்க்கங்களும் ஒருங்கிணையும் நுட்பத்தை எடுத்துக் கூறுகிறது. நம் மரபின் எல்லா ஆசான்களும் தங்கள் வாழ்வில் இந்த மூன்று மார்க்கங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்கள் என்பதும் காலத்துக்குத் தகுந்தாற் போல இந்த மூன்று மார்க்கங்களும் ஒருங்கிணையும் இடத்தை அடையாளப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் வாழ்வின் மூலம் அறியலாம்.
இன்றைய மனிதன் எவ்விதம் வாழ்வை அமைத்துக் கொண்டால் அவனுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும் என எண்ணிப் பார்க்கலாம். உடல் நோயற்று இருக்க உடலுக்கு பயிற்சி தேவை. தினமும் இரண்டு மணி நேரமாவது உடற்பயிற்சி அவனுக்குத் தேவை. சென்ற தலைமுறைகளின் சாமானிய மனிதன் அன்றாடம் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தான். இப்போது அவ்விதமான தன்மை இல்லை. அவனது வாழ்க்கைமுறையில் குறைந்த உடலுழைப்பே உள்ளது. எனவே அந்த குறைந்த உடலுழைப்புக்கான உணவே போதுமானது. உண்ணும் உணவின் மீது அந்த கவனம் கொள்வது நோயிலிருந்து காக்கும். மிகக் குறைந்த நேரமாவது பிரபஞ்சத்துடன் தொடர்பில் இருப்பது அவனுக்கு நலம் பயக்கும். சக மனிதர்களுக்கும் சக உயிர்களுக்கும் அன்றாட வாழ்வில் சிறு அளவினேனும் உதவும் வண்ணம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும். இந்த வாழ்க்கை முறையில் மூன்று மார்க்கங்களும் ஒத்திசைகின்றன என்பதை நம்மால் உணர முடியும்.