நூல் : நெகிழிக் கோள் ஆசிரியர் : இரா. மகேந்திரன் பக்கம் : 110 விலை : ரூ. 145, பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில், 629001.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் பிளாஸ்டிக். ஐரோப்பாவின் சமூகச் சூழலும் அரசியல் சூழலும் அதன் தேவையை உருவாக்கின. ஐரோப்பிய நாடுகள் துவக்கிய நிகழ்த்திய இரு உலகப் போர்கள் பிளாஸ்டிக்கின் உற்பத்தியை மிகப் பெரிய அளவில் நிகழ்த்தின. இவற்றால் நிலைபெற்ற பிளாஸ்டிக் பின்னர் உலக நாடுகளெங்கும் பரவியது. இன்று மனித சமுதாயத்தின் ஒவ்வொரு வீட்டிலும் இடம் பெற்றிருக்கும் பொருளாகி விட்டது. உலகின் ஒவ்வொரு மனிதனும் அனுதினமும் ஏதேனும் ஒரு விதத்தில் பயன்படுத்தும் பொருளாகவும் ஆகி விட்டது. இப்போதுள்ள நிலையில், பிளாஸ்டிக் மெல்லக் கொல்லும் நஞ்சு. எந்த அளவுக்கு மனிதர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வார்களோ அந்த அளவு அவர்கள் வாழ்வு நலம் கொண்டதாக இருக்கும்.
பிளாஸ்டிக் கழிவுகளை சிதைக்கும் நுண்ணுயிரிகளை உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. பிளாஸ்டிக் உற்பத்தி ஒரு உத்தரத்தைப் போலவும் பிளாஸ்டிக்கை சிதைக்கும் தொழில்நுட்ப ஆய்வுகள் ஒரு துரும்பைப் போலவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது ஒரு கொடும் யதார்த்தம்.
ஐரோப்பா ‘’தொழில்நுட்ப’’த்தை வழிபடும் விதந்தோதும் மனநிலையை தனது காலனி ஆதிக்கம் மூலம் உலகெங்கும் உருவாக்கியது. அதே மனநிலையை அடிப்படையாய்க் கொண்ட மார்க்ஸிஸ்டுகள் தங்கள் செயல்பாடுகள் மூலம் அதனை மேலும் உறுதிப்படுத்தியது. முதலாளித்துவம் மார்க்ஸியம் ஆகிய இரண்டு சிந்தனைகளுமே இயற்கையை சுரண்ட வேண்டிய பண்டமாகக் காண்கின்றன. பிளாஸ்டிக் உற்பத்தியைப் போல் இயற்கையை சுரண்டும் இன்னொன்று வேறில்லை. நுகர்வு கலாசாரம் குறித்து நாம் ஆழமான கேள்விகளை எழுப்பிக் கொள்ள வேண்டிய காலம் இது.
இரா. மகேந்திரன் அவர்கள் எழுதிய ‘’நெகிழிக் கோள்’’ என்ற நூல் சமீபத்தில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கிறது. பிளாஸ்டிக்க்கின் தோற்றம், அதன் வெவ்வேறு வகை மாதிரிகள், அவற்றின் வேதிப் பண்புகள், அவை உருவாக்கும் சுற்றுச் சூழல் மாசுபாடுகள், உலகம் அதனால் அடைந்திருக்கும் ஆற்றொணா சீர்கேடுகள், பிளாஸ்டிக் அபாயத்திலிருந்து தப்பும் வழிமுறைகள் என ஒவ்வொரு விஷயம் குறித்தும் விரிவான தரவுகளுடன் எழுதப்பட்டிருக்கும் நூல்.
நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கையில் எந்த வாசகரும் ஒரு பேரதிர்ச்சியை உணர்வார் என்பதில் ஐயம் இல்லை.