ஒரு மாதம் முன்னால், அஞ்சல் அலுவலகத்தில் மின்னணு பண பரிமாற்ற விண்ணப்பம் ஒன்றனுக்கு ஒப்புகைச் சீட்டை உடன் வழங்காத சம்பவத்தை அஞ்சல்துறை மேலதிகாரிகளுக்கு தெரிவித்து எழுதிய மனுவை வெளியிட்டிருந்தேன். சில நாட்களுக்கு முன்னால், அஞ்சல்துறை மேலதிகாரி எனக்கு அளித்த பதிலையும் பதிவிட்டிருந்தேன்.
நேற்று அஞ்சல் அலுவலகம் சென்ற போது மீண்டும் நிகழ்ந்த அதே சம்பவத்தையும் அது குறித்து சி.பி.கி.ரா.ம்ஸ் ல் பதிவு செய்த புகாரையும் கீழே வெளியிட்டிருக்கிறேன்.
*****
18.11.2024 அன்று ***** அஞ்சல் நிலையத்துக்கு ஆர்.டி.ஜி.எஸ் மூலம் எனது அஞ்சலக சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் அனுப்ப மதியம் 12.15 மணிக்கு வந்திருந்தேன். உரிய படிவத்தை ****** என்ற அலுவலரிடம் வழங்கினேன். அந்த அலுவலர் படிவத்தின் ஒப்புகைச் சீட்டினை மாலை 5 மணிக்கு பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். எந்த அலுவலகத்திலும் ஒரு விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டால் அதற்கான ஒப்புகைச் சீட்டை விண்ணப்பதாரரிடம் அளிக்க வேண்டும் என்பது அடிப்படை முறைமை. தான் ஒரு விண்ணப்பம் வழங்கினோம் என்பதற்கு அதுவே அத்தாட்சி. என்னிடம் ஒப்புகைச் சீட்டை உடனடியாக அளிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டேன். அதற்கு அந்த அலுவலர் ஒப்புகைச் சீட்டை வழங்க வேண்டும் என எந்த விதியும் இல்லை என்றார். இது குறித்து மேலும் ஏதேனும் பேச விரும்பினால் தனது மேலதிகாரி ***** அவர்களை சந்திக்குமாறு கூறினார். மேலதிகாரி ***** அவர்களைச் சந்தித்து நடந்ததைச் சொன்னேன். அவரும் ஒப்புகைச் சீட்டை வழங்க எந்த விதியும் இல்லை என்று கூறினார். நான் அமைதியாக அங்கிருந்து வெளியேறி விட்டேன். மாலை 3.15 அளவில் மீண்டும் அங்கு சென்று ஒப்புகைச் சீட்டை பெற்றுக் கொண்டேன். இந்த புகார் மனுவின் மூலம் அலுவலர் ***** மீதும் அதிகாரி ***** மீதும் வாடிக்கையாளர் ஒருவரிடம் பொருத்தமற்ற பதிலைக் கூறியது ; ஒப்புகைச் சீட்டை அளிக்க மூன்று மணி நேரம் தாமதம் செய்தது ஆகிய புகார்களைப் பதிவு செய்கிறேன். உரிய அதிகாரிகளை இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.