எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் மிக நல்ல இனிய மனிதர். அவர் மனைவி பள்ளி மாணவியாக இருந்த போது தனது தாயை இழந்தவர். உடன்பிறந்தவர்கள் அத்தனை பேருமே தங்கைகள். ஒரு பெரிய குடும்பத்தின் பொறுப்பு மிக இளம் வ்யதில் அவருக்கு வந்தது. அவர் அன்னை இறந்த போது அவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அதன் பின் கல்லூரியில் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளில் அவருக்கு திருமணம் நிகழ்ந்தது. அதனால் அவரது கல்லூரிப் படிப்பு தடைப்பட்டது. திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வந்ததும் கணவரின் வணிகத்துக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வந்தார். பின்னர் தொலைதூரக் கல்வியில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் பி.எட் பட்டம் பெற்றார். இந்த இரண்டு பட்டமும் பெற்ற பின் அவருக்கு மாநில அரசின் பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியை பணி கிடைத்தது. இப்போது ஆசிரியையாகப் பணி ஆற்றுகிறார். எந்த பணியையும் மிக நேர்த்தியாக செய்யும் இயல்பு கொண்டவர். பல்வேறு விதமான உணவுப் பதார்த்தங்களைத் தயாரிப்பதில் நிபுணர். அவருடைய உபசரிப்பு பண்பு அரிய ஒன்று.