Friday, 12 December 2025

பட்டினப்பாலை

பண்டைய இலக்கியங்கள் பல அளவில் சின்னஞ்சிறியவை என்பதை நாம் கவனித்திருக்க மாட்டோம். இன்று நாம் அச்சுப்புத்தக வடிவில் காணும் சங்க இலக்கிய நூல்கள் பல உரையுடன் வெளிவருபவை. பதவுரை, தெளிவுரை, விளக்கவுரை ஆகியவையே நூலின் 90 சதவீத இடத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவை. தொல்நூலின் பிரதி 10 சதவீத இடத்துக்குள் அடங்கி விடும். சிலப்பதிகாரம் மூலப்பிரதி மட்டும் ஒரு நூலாக வெளியிடப்பட்டிருந்தது. அதனை நான் வாசித்திருக்கிறேன். சிலப்பதிகாரம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரதியாயினும் தமிழார்வம் கொண்டவர்கள் எளிதில் வாசிக்கக் கூடிய நூலே.  திருக்குறள் 133 பக்கங்களுக்குள் அடங்கும் நூல் என்பதை நாம் அறிவோம். அகநானூறு, புறநானூறு தங்கள் பெயரிலேயே சுட்டுவது போல 400 பாடல்களைக் கொண்ட நூல்கள். சீவக சிந்தாமணி சற்றே பெரிய நூல். 

தமிழின் ஆகப் பெரிய படைப்பான கம்பராமாயணம் 10,000 பாடல்களுக்கு மேல் கொண்டது என்பதால் அளவில் பெரியது கம்பராமாயணம். பன்னிரு திருமுறைகளும் ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தமும் அளவில் பெரியவை. கம்பராமாயணம் எழுதப்பட்டு தோராயமாக 200 ஆண்டுகளுக்குப் பின் தமிழகம் இஸ்லாமிய படையெடுப்புக்கு ஆளானது. அது தமிழகத்தின் இருண்ட காலம். விஜயநகர சாம்ராஜ்யம் தனது ஆட்சியை மதுரையில் நிலைநாட்டிய பின்னரே தமிழ் புத்துயிர் பெறுகிறது. அந்த காலகட்டத்தில் குமரகுருபரரும் அருணகிரிநாதரும் தங்கள் படைப்புகளை படைத்தனர். அவர்களது இலக்கியப் படைப்புகள் அளவில் கணிசமானவை. 

இன்று பட்டினப்பாலை என்னும் சங்க கால நூலை வாசித்தேன். 

சோழர் தலைநகரான காவிரிப்பூம்பட்டினம் குறித்த நூல். பிறந்த நாள் முதல் வாழும் நிலம் காவிரியின் சோழ நிலம் என்பதால் அந்நூலின் பல காட்சிகளை மனம் இயல்பாக உள்வாங்கிக் கொண்டது. நெல்லும் மஞ்சளும் இஞ்சியும் புகாரையொட்டி விளைவதாக பட்டினப்பாலை காட்டுகிறது. இன்றும் சோழ நிலத்தின் காட்சியாகும் அது. பூம்புகார் நகரின் ஒரு பகுதி விவசாயம் செழித்திருக்கும் பட்டினப்பாக்கம் என்றும் இன்னொரு பகுதி பரதவர் மிகுந்த மருவூர்ப்பாக்கம் என்கிறது பட்டினப்பாலை. இன்றும் புகார் அவ்விதமே உள்ளது ; மாநகரமாக அல்ல கிராமமாக. பட்டினப்பாலை காட்டும் கடல் இப்போதும் ஆர்ப்பரித்து ஒலித்துக் கொண்டு நம் புராதானத் தொன்மையை பறைசாற்றுகிறது. பல்விதமான பண்டங்கள் வந்து இறங்கிய துறைமுகத்தை பட்டினப்பாலை காட்டுகிறது. இப்போது புகாரில் ஒரு கலங்கரை விளக்கம் சில ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. 

பட்டினப்பாலை வாசித்த போது எனக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. இனி வரும் காலங்களில் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைப் போல மாநகரங்கள் உருவாகுமா என்று யோசித்தேன். 

சிறிய அளவிலேனும் ஒரு மாநகரம் உருவாக்கப்பட வேண்டும் எனில் குறைந்தது 15,000 ஏக்கர் நிலமாவது தேவைப்படும். அதில் 15,00,000 மக்களாவது குடியமர்த்தப்பட வேண்டும். அத்தனை மக்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் குடிநீர் ஏற்பாடுகள் செய்தல் வேண்டும். ஜனநாயக நாட்டில் ஒரு ஜனநாயக அரசு ஒரு மாநகருக்கு இத்தனை செலவு செய்ய சாத்தியம் இல்லை. நம் தமிழ்நாட்டில் கடந்த 75 ஆண்டுகளில் எந்த மாநகரும் உருவாக்கப்படவில்லை. திருவரம்பூர், நெய்வேலி ஆகிய இரண்டு நகரங்கள் உருவாயின. அவற்றை உருவாக்கியது மத்திய அரசு. ஒரு மாநகரம் உருவாவது ஒரு ஜனநாயக அரசில் சாத்தியம் இல்லை என்று தோன்றுகிறது.