ஒரு ஆப்பிள் கேக்கை ஆரம்பத்திலிருந்து செய்ய வேண்டுமென்றால் முதலில் ஒரு பிரபஞ்சத்தைக் கட்ட வேண்டும் . - கார்ல் சகன்
ஆலயக்கலை வகுப்பு முடித்து விட்டு வந்த பின்னர் இன்று ஏதேனும் ஒரு தொல் ஆலயம் ஒன்றனுக்குச் செல்ல வேண்டும் என விரும்பினேன். கார்ல் சகன் தாராசுரம் ஆலயத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து ஆவணப்படம் ஒன்றில் பேசியதன் காணொளியை இன்று காலை மீண்டும் கண்டேன். முன்னர் பலமுறை அந்த காணொளியைக் கண்டிருக்கிறேன் என்றாலும் இன்று ஆலயத்துக்குச் செல்வதற்கு முன் மீண்டும் கேட்க விரும்பினேன்.
மானுடக்கலையின் உச்சம் என தாராசுரம் ஆலயத்தைக் கூறிட முடியும். ஒரு சதுர அடி பரப்பில் அரை சதுர அடி பரப்பில் எவ்விதம் இவ்வளவு நுணுக்கமாக சிற்பம் வடிக்க முடியும் என்பது மாபெரும் வியப்பே. இந்த ஆலயத்தை நிர்மாணித்த கலை உள்ளத்தை போற்றாமல் இருக்க முடியாது.
இந்த ஆலயத்தை ஓரளவேனும் புரிந்து கொள்ள சில சிற்பவியல் நூல்களேனும் வாசித்திருக்க வேண்டும். சோழ வரலாறு குறித்து சில நூல்களேனும் வாசித்திருக்க வேண்டும். சில தமிழ் இலக்கிய நூல்களேனும் வாசித்திருக்க வேண்டும்.
இந்த ஆலயத்தின் கலையின் சிறு துளி ஒன்றை ஒரு மானுடன் அறிவானாயின் அவனை உலகக் கலையின் மாணவன் என்று தயக்கமின்றி சொல்ல முடியும்.