Wednesday, 7 January 2026

மக்கள் - சட்டம்- அதிகார வர்க்கம்


நூல் : குற்றமும் கருணையும் - இளம் ஐ.பி.எஸ் அதிகாரியின் தூத்துக்குடி அனுபவங்கள். ஆசிரியர் : வி. சுதர்ஷன் தமிழில் : மு.குமரேசன் பக்கம் : 223 விலை : ரூ.275 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்,629001. 

இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் நமது நாடு பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் பெறுவதற்கு முன்னும் பின்னும் தேசப் பிரிவினையின் கோரங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வன்முறையும் வறுமையும் நிரம்பிய ஒரு காலகட்டத்தில் நாம் முன்நகரத் தொடங்கினோம்.  கோடானுகோடி மக்கள் வாழும் நாட்டில் ஒரு நிர்வாக முறையை ஏற்படுத்தி மக்களை முன்னேற்றம் நோக்கி கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு இந்திய ஜனநாயகத்துக்கு இருந்தது ; பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் நிர்வாக முறையே இந்திய ஜனநாயகத்திடம் இருந்தது. அன்னிய ஆட்சிமுறைக்கு இருந்த அத்தனை அன்னியத் தன்மைகளையும் கொண்டிருந்தது அந்த நிர்வாக முறை. இந்தியாவின் நிர்வாக முறையை கவனிப்பவர்கள் ஒரு விஷயத்தை எளிதில் கண்டுகொள்ளலாம் ; அதாவது இங்கே அதிகாரவர்க்கமே முழு அதிகாரம் கொண்டது ; அரசியல்வாதிகள் அதிகாரவர்க்கம் அளவு அதிகாரம் கொண்டவர்கள் அல்ல. அரசியல்வாதிகள் அதிகாரவர்க்கத்தை விட பலபடிகள் குறைவான அதிகாரம் கொண்ட இரண்டாம் இடத்தில் இருப்பவர்கள். அதிகாரத்தில் முதலிடத்தில் இருக்கும் அதிகாரவர்க்கமும் அதிகாரத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அரசியல்வாதிகளும் மேற்கொள்ளும் ’’புரிதலுடன்’’ கூடிய ’’கூட்டுச்செயல்களே’’ இந்திய நிர்வாக இயங்குமுறை ஆகும். 

அனூப் ஜெய்ஸ்வால் மாணவப் பருவத்திலிருந்தே எந்த விஷயத்தையும் நுணுக்கமாக அணுகும் நுணுக்கமாகப் புரிந்து கொள்ளும் தன்மையுடன் இருக்கிறார். பள்ளி நாட்களிலிருந்தே அவருக்கு பல்வேறு வகைகளில் அதிகார வர்க்க வழமைகள் குறித்த அனுபவங்கள் ஏற்படுகின்றன. அவர் அதனைப் புரிந்து கொள்ள முயல்கிறார். உண்மையில் அதிகார வர்க்கம் இயங்கும் விதத்தைப் புரிந்து கொள்ள முயல்வதும் தொகுத்துக் கொள்ள முயல்வதும் வரையறைப்படுத்துவதுமே அதிகார வர்க்கத்தால் மீறல் என்றே கொள்ளப்படும். சிறிய அதிகாரத்திலிருந்து பெரிய அதிகாரம் வரை கொண்ட பலரால் அனூப் ஜெய்ஸ்வால் மீறல்களை மிக எளிதாக மிக இயல்பாக நிகழ்த்தும் ஓர் அசௌகர்ய நபராக காணப்படுகிறார். அசௌகர்யங்களின் நபரின் ’’அக ஆற்றல்’’ உணரப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் மிக மிக சொற்பமானவை என்றாலும் அரிதினும் அரிதாக அவர் தனக்கான இடத்தை அடைவதற்கான வாய்ப்பும் இந்திய நிர்வாக முறையில் அனூப் ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்திருக்கிறது என்பதும் இந்திய நிர்வாக முறையின் நூதனங்களில் ஒன்றாகவே கருத வேண்டியிருக்கிறது. 

தேசிய பாதுகாப்பு அகாதெமியில் சேரும் அனூப் அங்கிருந்து ராஜினாமா செய்து வெளியேறுகிறார். அவ்வாறு வெளியேறுகையில் அகாதெமியுடன் ஒரு சட்டப் போராட்டம் ஏற்படுகிறது. அதன் பின் ஐ.பி.எஸ் க்கு தேர்வாகிறார். பயிற்சி அகாதெமியில் அவருக்கு பணி கிடைக்கும் முன்பே பணி நீக்க உத்தரவு கிடைக்கிறது. உச்சநீதிமன்றத்தை அணுகி பணி நீக்க உத்தரவை ரத்து செய்து பணி நியமன ஆணை பெறுகிறார். 

உத்திரப் பிரதேசத்தின் கோரக்பூரைச் சேர்ந்த அனூப் ஜெய்ஸ்வால் தூத்துக்குடி மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளராக பணியில் சேர்கிறார். தனது பணியை தனது பொறுப்பை நிறைவேற்றத் தொடங்குகிறார். அவரது பணி அனுபவங்களின் சுவாரசியமான முக்கியமான அனுபவங்கள் பத்திரிக்கையாளர் வி.சுதர்ஷன் -னால் ‘’குற்றமும் கருணையும்’’ என்ற நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 

1980களில் இருந்த சமூக நிலையையும் நிர்வாக இயங்குமுறையையும் இந்நூலின் சம்பவங்கள் மூலம் அறிய நேரிடும் போது இன்றைக்கு இருக்கும் சமூகமும் நிர்வாக முறையும் 40 ஆண்டுகளில் பல மைல் தூரம் முன்னேறி வந்திருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. 

அனூப் ஜெய்ஸ்வால் தூத்துக்குடியில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கிறார். கந்துவட்டியை ஒழிக்கிறார். அரசியல்வாதிகளின் பின்புலம் கொண்ட ரவுடிகளை கைது செய்கிறார். பொதுமக்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகும் விதமாக ஏற்பாடு செய்கிறார். அங்கே சில நல்ல மாற்றங்கள் நடக்கின்றன. அனூப் இடமாற்றமும் நடக்கிறது. பொதுமக்கள் ஆதரவு அவருக்கு பெருமளவில் கிடைக்கிறது. 

இந்த நூலில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு சம்பவமுமே தனித்துவமானது. பிரக்ஞை கொண்ட மனிதராக அரசியல் சட்டத்தை மதிப்பவராக காவல்துறை அதிகாரியாக அவர் ஒவ்வொரு விஷயத்தையும் அணுகும் போது தனிமனிதப் பிரக்ஞை, சட்டம் மற்றும் அதிகாரம் ஆகியவை ஒத்திசைகின்றன ; அப்போது உண்மையிலேயே பெரும் மாற்றம் நடக்கிறது. ‘’குற்றமும் கருணையும்’’ நூல் அத்தகைய மாற்றங்களின் கதை.