Sunday 20 May 2018

இளவரசி நீங்கிய மாளிகை



நகர் நீங்கும் செய்தி
அறிவிக்கப்பட்டபோது
ஓய்வுக்கான
தளர்ச்சியே
வெளிப்பட்டது

பணியாளர்
ஒருக்கங்களை
மேற்கொண்டனர்

எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு
பூசலின்றி
ஒருங்கிணைந்து
வேகத்துடன்

பணிகள் எப்போதும் இப்படித்தான் நடந்தன
என
அவளை நம்பவைக்க
கடைசி முயற்சி மேற்கொள்ளப்பட்டது

மனிதக் குரல் எழாமல்
பொருட்களின் ஓசை மட்டும்
கேட்டது

யாரும் பேசத் தயாராக இல்லை
பார்வையின் மௌனத்தை
அவளுக்கு அளிக்க முயற்சி செய்தனர்

தாளிடப்பட்ட அறையிலிருந்து
அவள் எப்படி வெளிப்படப்போகிறாள்
என்பதை
என்றும் போல்
அன்றும்
காண விரும்பினர்

இளவரசி
எப்போதும் போல் அலங்கரித்துக் கொண்டாள்
ஆடி நோக்கினாள்
முழுதாய் மலர்ந்திருந்த செவிப்பூவை
மாற்றி
மொக்காய்
இருந்ததை
அணிந்து கொண்டாள்
அகம் சூடும் மாலையை
எளிமையானதாக
தேர்ந்தெடுத்தாள்
கூந்தலைப் பிரித்து
தோளின்
முன்னும்
பின்னும்
புரள விட்டாள்

தன் அறையின் 
தாள் நீங்கும் ஒலியின்
அடர்த்தியை
எப்போதையும் விட
கூடுதலாக
ஆக்கிக் கொண்டாள்

அறைக்கு வெளியே
தாழ்வாரங்களைத் தாண்டி
முற்றத்துக்கு அப்பால்
கூடியிருந்தோர் ஒலிகள்
சன்னமாக
கதவிடுக்கின் காற்றென
கேட்கத் துவங்கின

பணியாளர் அனுமதி கேட்டு உள்நுழைந்தனர்
அவளில் எந்த மாற்றத்தையும் உய்க்க இயலவில்லை
மெல்லிய குரல் சிலவற்றை விசாரித்து அறிந்தது
அதே குரல் சில குறிப்புகளையும் அளித்தது

அவள் தொழுவத்தை நோக்கிச் சென்றாள்
அது யாரும் எதிர்பாராததாக இருந்தது
அவளை தொலைவில் கண்டு கனைப்பை வெளிப்படுத்தின குதிரைகள்
பசுக்கள் மா என அழைத்தன
கன்றுகள் துள்ளல் கொண்டன

அவள் கைப்பிடியின் புல்
உண்ணப்பட்டது
பிராணிகளால்

புறப்பட்ட போது
உடன் வந்தன
அவிழ்க்கப்பட்ட சில கன்றுகள்

உப்பரிகைக்கு
படியேறி வந்த போது
அவளால் காக்கப்பட்ட சிட்டுக்குருவி
ஏதும் அறியாமல்
எப்போதும் போல் பறந்தது
இங்கும் அங்கும்