Sunday 20 May 2018

மீண்டும் ஒரு உதயம்

காலையில்
பால் கறக்கச் செல்லும் பால்காரர்
வாகனம் அவசரத்துடன் விரைகிறது
இன்றும் தாமதம்
இன்னும் நாலு வீடு பாக்கி

பாக்கெட் பால் போடுபவர்
காற்று ஒலிப்பான்
ஆர்வமின்றி
சப்திக்கிறது
மதிலின் மேல் பாக்கெட்
வைத்துவிட்டு

வேலைக்குச் செல்லும் பெண்ணின்
சமையலறை
வாணலியில்
கரண்டி புழங்கும் சத்தமும்
குக்கர் விசிலும்
பொருந்தாமல் ஒலிக்கிறது
ஒரே நேரத்தில்

இன்னும்
முழுதாகத் தூக்கம் கலையா பிள்ளைகள்
தெருமுக்கில்
காத்திருக்கின்றன
பள்ளிப் பேருந்துக்கு 

அவசரம்
சிகர உச்சம் கொள்ளும்
காலையில்
வாகனங்கள் விரைகின்றன
அங்கும் இங்கும்

பெரும்பாலானோர்
கவனத்தில் இல்லாமல்
இன்று வெள்ளி முளைத்து
நூறு ஆயிரம் நட்சத்திரம் உதிர்ந்து
சிவந்த வானில்
மெல்ல
மிக மெல்ல
உதித்தது
உதயசூரியன்