Friday 27 July 2018

சில

காற்றில்
மெல்ல ஆடிக் கொண்டிருக்கும்
பூத்திருக்கும்
ஒரு புதிய மலர்
பார்க்க

சிறு ஊஞ்சலில்
கூச்சலிட்டு
அலைவுறும்
சிறு குழந்தைகளை
அனிச்சை மகிழ்ச்சியுடன்
கடந்து செல்ல

ஓயாமல் துள்ளும்
குட்டி நாய்களின்
மழலைக் குரைப்பைக்
கேட்க

தரையில் நிழலாய்
நடக்கும்
பறவைகளின்
பறத்தலை
வானில் நோக்க

சில கணங்கள்தான்
தேவைப்படுகிறது
எல்லாவற்றுக்கும் போல


Monday 23 July 2018




தேவதைக் கணங்கள்
இமைக்கின்றன
வண்ணத்துப் பூச்சிகளாய்

குழந்தைமையின் உற்சாகம்
கேட்கிறது
பறவைச் சிறகடிப்புகளாய்

மன்னிப்பின்
மௌனம்
மென்மை கொள்கிறது
அதிகாலைப் பொழுதாய்

பிரியங்கள்
தனித்திருக்கின்றன
புல்நுனி நீராய்

ஒரு சூரிய
உதயமாய்
காதல்

Saturday 21 July 2018

பெருக்கெடுக்கும்
நதி
காண்கிறான்
ஒரு பாலன்

தீரா ஆர்வமிக்க
அவன் கண்களில்
சாகசப் பெருவெளியாய்
அர்த்தமாகி
விரைகிறது
நதி

பெருக்கெடுக்கும்
நதி
காண்கிறாள்
ஒரு யுவதி

அன்பின்
எல்லையின்மை
போன்றது
வாழ்க்கை
என்றெண்ணி
இமைக்காமல்
அவள் விழிகள்

முதிர்ந்த
வயோதிகன்
நதி
காணும் போது
ஏதேதோ
பல நினைவுகள்
அருகிலும்
விலகியும்
ஓடிக் கொண்டிருந்தது

ஒக்கலில்
அமர்ந்திருந்த
குழவிக்கு
சாமி
எனக் காட்டுகிறாள்
நதியை
ஓர் அன்னை

Wednesday 18 July 2018

மீண்டும்

ஓர் இலட்சியவாதி
ஓர் அமைப்பிலிருந்து
வெளியேறுகிறான்
மீண்டும்
பல இலட்சியவாதிகள்
பல அமைப்புகளிலிருந்து
வெளியேறியதைப் போல
அல்லது
வெளியேற்றப்பட்டதைப் போல

உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டான்
அவனது பயணப்பை மிகச் சிறிதாயிருந்தது

எங்கே செல்வது
என்று யோசித்த போது
ஒன்றும் தெளிவாகப் புரியவில்லை
ஆனால்
இங்கிருந்து அகன்று விட வேண்டும்
என்று உறுதியாய் தோன்றியது

அனுபவம்
அளித்திருந்த
அளவற்ற நம்பிக்கையை
எடுத்துக் கொண்டு
தன் சீரான அடிகளை
எடுத்து வைத்தான்
முடிவற்ற சாலையில்

Tuesday 17 July 2018

கொடை

கணப்பொழுதில்
ஒளிரும்
உன் முகத்தின்
ஒரு துளியை
மொக்குகளிடம்
தந்தேன்
நிலமெங்கும்
மலர்ந்தன மலர்கள்

உன் புன்னகையின்
சிறு ஒளியை
பெற்றுக் கொண்டன
ஆழ்கடலின் முத்துக்கள்

இறுதி
உயிர் திரட்டி
வானம் பார்த்திருந்த
பாலைப் பயிருக்கு
உன் கருணை
ஒரு துளி மழையாய்
பெய்தது

Monday 16 July 2018

யுகங்கள்

அகமெங்கும்
நிலவின் ஒளி நிறைந்த
முதற்கணத்தில்
அப்போது மலர்ந்திருந்த
மலரை
உன்னிடம்
கொண்டு வந்து தந்தேன்
சில காலம் சென்று
கடல்முத்து
சேர்த்து
ஒரு முத்துமாலையைத்
தந்தேன்
பொன் அணி கொடுக்க
மேலும்
சில காலம் ஆயிற்று
நீ
மிக மகிழ்ந்த
கண்ணாடி வளையல்கள் தர
நீள்நாட்கள்
ஆயிற்று
மலை முகடுகளுக்கு மேல்
நிலவு ஒளிரும்
வெண் பரப்பில்
உனது இருப்பு
மென்மையாய் புன்னகைத்தது

காட்டின் உயிர்கள்
களி கொண்டு அருந்தின
அமுதத்தின் கணங்களை

வயல்வெளிகள்
உயிர்த்துக் கொண்டிருந்தன
பகுக்க முடியாத பொழுதொன்றில்

அலைக் கரங்கள்
எம்பி எம்பி
விளையாடுகின்றன
முடிவிலா ஆடலை

சலனமற்ற பாலை
காத்துக் கொண்டிருக்கிறது
உன் நிச்சய வருகைக்காக

Friday 13 July 2018

மர்ஃபியின் உலகில்

மர்ஃபியின் உலகில்
அவ்வப்போது கத்தும் குயில் இருக்கிறது
தானியத்துக்காக
தாழ்வாரத்தில் கூடும்
குருவிகள்
இருக்கின்றன
சுற்றுச்சுவர் அமர்ந்து கரையும் காகம் இருக்கிறது
அவன் கடைக்குச் சென்றால்
பின்னால் வரும்
டோலி இருக்கிறது
அவன் அடுத்த தெருவிலிருந்து
தூக்கி வந்த பைரவி
இருக்கிறது
அரை விருப்பத்தில் செல்லும் பள்ளி இருக்கிறது

Thursday 12 July 2018

பிரதோஷ காலம்

இந்த மாலை அந்தியில்
மென் அலை எழும் நதிக்கரையில்
சிறு புட்கள் மரக்கிளைக்குத் திரும்பி
ஓயாமல்
எழுப்பும் ஒலியில்
அன்றாட நிறைவின் ஆசுவாசத்தில்
சிலர் வீடு திரும்புகையில்
கேட்கும்
தூரத்து ஆலயத்தின் மணியோசை
மெல்ல நிறைகிறது
ஒரு குற்றம்இல் உணர்வாக  

Wednesday 11 July 2018

மண்ணில்
தனித்து 
அமர்ந்திருக்கிறது
விண் நோக்கும்
ஆயிரம் ஆண்டு கோபுரம்
மாலை அந்தியில்
கோபுர அடுக்குகளில்
அடைகின்றன
டப் டப்
என
சிறகடிக்கும்
புறாக்கள்
நிர்மாணத்திலிருந்து
தவம் புரியும்
கோபுரம்
மீதமர்ந்த
முதல்
புறாவின் சிறகடிப்பு
கேட்டுக் கொண்டேயிருக்கிறது
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு புறாவிலும்