பால்யத்தில்
கை நழுவிப் போன
ரப்பர் பந்து
தற்செயலாய்
வந்து சேர்ந்தது
இன்று
வானுக்கும்
பூமிக்கும்
இடையே
பறந்து கொண்டிருக்கையில்
Wednesday, 29 August 2018
மல்லிகை மணம் இருக்கும்
பிராந்தியத்தில்
பிரவேசித்தேன்
என் வாகனத்துடன்
முன்னால் சென்ற
இளம்பெண்ணின் சிரசில்
பூத்திருந்தன
மல்லிகைப் பூக்கள்
வானில்
எம்பிக் குதித்த
ஒரு மலர்
இருந்தது
மிதந்து கொண்டும்
சென்று கொண்டும்
அன்னமாகவும்
வராகமாகவும்
பின் தொடர்ந்தேன்
அடி முடி இல்லா
அனந்தத்தில்
Monday, 27 August 2018
எங்கோ ஆழத்தில்
தொலை ஆழத்தில்
பறந்து கொண்டிருக்கின்றன
இரு சிறகுகள்
இரு பறவைகள்
இரு நகரங்கள்
புரண்டு படுப்பவனின்
முகத்தில்
ஒரு சிறு புன்னகை
சாம்பல்
உயிராக உருமாறிக் கொண்டிருந்தது
நிலமெங்கும்
Thursday, 23 August 2018
மீண்டும் ஒருமுறை
இன்று
பொழுது விடிந்திருக்கிறது
புலரியின் முதற்புள் ஒலி கேட்டிருக்கிறது
செங்கதிர்
அலைகளிலிருந்து எழுந்து
மேகங்களில் மறைந்து சஞ்சரிக்கிறது
தவ்விய தவளை
உருவாக்கிய அதிர்வுகள்
குளத்து நீரில் மேலும் கீழும்
எழுந்து விழுகிறது
கொத்தப்பட்ட மீன்கள்
நீந்திக்கொண்டிருக்கின்றன
வானத்தில்
Wednesday, 22 August 2018
ஒரு துயரத்தின் முன்
ஒரு துக்கத்தின் முன்
ஒரு கைவிடுதலின் முன்
ஒரு துரோகத்தின் முன்
ஒரு அவமானத்தின் முன்
தீரா வாதை ஒன்றின் முன்
ஓசைகள் ஏதுமற்ற ஓர் உலகம் இருக்கிறது
பின்னர்
ஓயாது அரற்றும்
ஓர் அலறலும்
சில கண்ணீர்த்துளிகளும்
மௌனம்
நிரம்பியிருக்கிறது
தெளிந்த உலகத்தில்
Friday, 17 August 2018
அகண்ட நதியில்
நிறைந்து
செல்கிறது
சேற்று நிறத்தில்
நீர்
வானில் ஓயாமல்
பறக்கும்
கழுகு
நதியின்
மீன் கவ்வ
இறங்குகிறது
மீண்டும்
மீண்டும்
அகப்படாமல்
தப்பிய
தப்பிய
மீன்
வேகமாய் செல்கிறது கடலுக்கு
தன் விரைவிலும்
நதி விரைவிலும்
மெல்ல
முன்னேறிச் செல்கின்றன
சிற்றடிகள்
திசையெங்கும் சூழ்ந்த வனங்களில்
தம் மக்களின்
பசித்தீ அணைக்கும்
ஒரு பிடி உணவுக்காக
வெள்ளி முளைக்கும் பொழுதுகளில்
ஏரெடுத்து
புகலடைந்த ஊரில்
குடி காக்க
போரின்
தூரத்துச் சத்தங்களை
அவதானித்து
அறிவின் தீராத வியப்பில்
உணர்வின் அலைப் பெருக்கில்
என்றோ
ஒரு கணம்
பதிந்தன
வானத்து மேகங்களில்