Thursday, 13 September 2018

ஆனைமுகம்

அப்போது
திருமஞ்சன வீதியில்
குடியிருந்தோம்
யானைகள் குளிக்கப் போகும்
பெரும்பாலான நாட்களில்
யானை பார்க்க மிகவும் பிடிக்கும்
இப்போது போலவே
அம்மா கை விரல்கள் பற்றி பார்ப்பேன்
பின்னர்
யானை பின்னால் நடந்து சென்றேன்
கால்களை கரையில் வைத்து
உடலை நீரில் அமிழ்த்தி
தலையை உயர்த்திப் படுத்திருக்கும்
கருயானை
செதில் செதிலாய் அதன் தோல்
தூண்கள் போல் கால்கள்
துதிக்கையில் நீர் அள்ளி
கரை மேல் வீசும்
பேரொலியுடன்
மழைத் தூறல் போல்
மேலே படும்
பாகன்
சிறு கல்லால்
தேய்த்து தேய்த்துக் குளிப்பாட்டுவார்
யானைப் பாகனாக விரும்பினேன்
அப்போது
இப்போதும்
யானையைப் பார்க்கிறேன்
அப்போதிருந்த
மகிழ்ச்சியுடன்