Sunday, 13 January 2019

அவளுக்கு
ஹெலிகாப்டர்
பரிசளித்தேன்

ஆர்வத்துடன் தனியே வான் பறந்தாள்
நீ எப்போது பைலட் லைசன்ஸ் பெறுவாய் என்றாள்
நீ பெற்றது எப்போது என்றேன்
பரிசாகப் பெற்ற கணத்திற்கு முதற்கணத்தில் என்றாள்

பின்னர் ஒரு ஜே.சி.பி பரிசளித்தேன்
என்னை இயக்கச் சொல்லி அருகமர்ந்தாள்
கிரேனை பறவை அலகாக்கி
பாறைகளையும் புதர்முட்களையும்
கொத்தி உடைத்தாள்

ஆள் கண்டு குரலெழுப்பும்
பறவை
ஒன்றை
அளித்தேன்
அன்னியர் கண்டு எழுப்பும் குரலை
நான் வரும்போது எழுப்ப அதற்கு பயிற்சி தந்தாள்

ஒரு மலையைப் பரிசளித்தேன்
அடிவாரம் நின்று
உச்சித் தேன் கேட்டாள்

மாலை அந்தியின் முதல் விண்மீனை அவளுக்களித்தேன்
அதிகாலையின் விடிவெள்ளியாய் என்னை இருக்கச் சொன்னாள்

மூங்கில் வெளிப்படுத்திய இசையை மட்டும் அளித்தேன்
அவள் புல்லாங்குழலை எனக்குப் பரிசளித்தாள்