Monday, 14 January 2019

நீலோத்பலம்

அவள்
எப்போதும்
நீல நிறத்தை விரும்புகிறாள்
தன் வாழிடத்தை
அணி செய்யும் தோறும்
நீலத்தின் வெவ்வேறு தன்மைகளைப்
பயன்படுத்துகிறாள்
அவள் தேர்ந்தெடுக்கும்
மற்ற வண்ணங்களும்
நீலத்தின் சாயலை உள்வாங்கிக் கொள்கின்றன
அல்லது
நீலத்திற்கு மேலும் அழகு தருகின்றன

ஒருமுறை
ஹெலிகாப்டரில்
பயணித்த போது
ஜன்னல் திறந்து
வான் நீலத்தின் ஒரு துளியை
எடுத்துக் கொண்டாள்

அந்திச் சூரியனை நோக்கி
படகில் சென்ற போது
கடல் நீலத்தின் ஒரு துளியை
எடுத்துக் கொண்டாள்

அவற்றை ஒரு விதையாக்கி
தன் தோட்டத்தில்
இட்டு
தினமும் நீர் வார்த்தாள்

பின்னொரு பருவத்தில்
அச்செடி
அவள் இமைக்கும்
பொழுதெல்லாம்
நீலமாய்
மலர்ந்தது