Sunday, 27 January 2019

என்னிடம்
எந்த முகாந்திரமும் இல்லாமல்
வந்து சேர்ந்தது
ஒரு துளி விசும்பு

மகிழ்ச்சியளிக்கும் சிறு பரிசு ஒன்றைப் போல
உபயோகிக்க ஆர்வமூட்டும் ஓர் எளிய உபகரணம் போல
பகிர்ந்து கொள்ளும் பேருவகை ஒன்றைப் போல
மலர்ச்சாறுகளால் உருவான இனிய நறுமணம் போல

அது
என்னிடம் பொருந்திக் கொண்டது

அசையும் சிறு தீபம் ஒன்றை
இரு உள்ளங்கைகள்
காத்துக் கொள்வது போல
அதனை வைத்துக் கொள்கிறேன்

அச்சுடர்
ஒரு பருவத்தில்
விதையாகிறது
ஒரு பருவத்தில்
பசும் புல்லாகிறது
ஒரு பருவத்தில்
மலராகிறது
ஒரு பருவத்தில்
செங்கதிராகிறது