Monday, 21 January 2019

ஓர் அற்புத மாயம்

சமீபத்தில்
ஒரு மாயக்காரனைத்
தற்செயலாய்
சந்தித்தேன்
அவன்
நுட்பமான
நூதனமான
மலர் மணங்களோடு
எப்போதும்
முறுவலித்திருந்தான்
என் கலைந்து கிடந்த மேஜையில்
ஓரிரு மாற்றம் செய்தான்
ஒழுங்குபடுத்தவே முடியாது
என
நான் எண்ணியிருந்த மேஜை
சங்கீதம் எழுப்பியது
மேஜையிடம்
நீ சங்கீதம் அறிவாயா
என்றேன்
நீ இப்போதுதான் அறிந்தாய்
என
வெட்கப்பட்டது

எனது மோட்டார்சைக்கிளைக் காட்டினேன்
பார்த்ததும்
அது உன்னை நேசிக்கிறது
என்றான்
அதனைப் பிரியமாகத் தொட்டான்
அவனிடம்
உன்னைச் சந்தித்தது மகிழ்ச்சி சகோதரா
என்றது

எனது நெடுநாள் இக்கட்டுகளை
அவனிடம்
சொன்னேன்

எளிதாகப் பிரித்து வைத்தான்

நீ அற்புதமானவன்
என்றேன்

நீ இப்போது அற்புதங்களை உணர்கிறாய்
என்றான்