Monday 4 February 2019

வான் அகப் பறவைகள்

ஹரித்வாரிலும் ரிஷிகேஷிலும்  கங்கையைப் பார்ப்பது என்பதே நாள் முழுதுக்குமான செயல்பாடு. காலை கங்கையில் நீராடி விட்டு ஒரு படித்துறையில் அமர்ந்து கொண்டால் கங்கையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நதிச்சுழிகள் உருவாகும். நீரோட்டத்தின் போக்கு அவ்வப்போது மாறும். மலையகப் பகுதிகளுக்கு உரிய திடீர் மௌனம் கவியும். எங்கோ ஒரு சிற்றாலயத்தில் ஒலிக்கும் மணியோசை கேட்கும். திடீரென ஒரு சாமியார் கும்பல் ஜெய் ஸ்ரீ ராம் என்பார்கள். அதற்கு மறுமொழியாக இன்னொரு குழு பஜ்ரங் பலி கி ஜெய் என்பார்கள். கங்கையைப் பார்க்க பார்க்க இராமாயணம் நினைவுக்கு வரும். காளிதாசன் நினைவுக்கு வருவான். மகாத்மா நினைவுக்கு வருவார். கங்கையைப் பார்ப்பதும் பார்த்து ஊர் திரும்பியதும் கங்கை நினைவுகளை மீட்டிக் கொண்டு ஊரில் வாழ்வது என்பதும் ஒரு கொடுப்பினை. நினைக்கும் போது இப்போதே கிளம்பிச் சென்றால் என்ன என்று தோன்றாமல் ஒரு நாளும் இருந்ததில்லை. நான் கங்கையின் முழுத்தடத்தையும் கண்டவனல்ல. காவிரியின் தடத்தை ஓரளவு கண்டிருக்கிறேன். எனக்கு கங்கை என்றால் இப்போது ஹரித்வாரும் ரிஷிகேஷும் தான்.

அதுல் அறிவுரைப்படி ரிஷிகேஷில் சுற்றி விட்டு ஹரித்வார் திரும்பிக் கொண்டிருந்தேன். அது ஒரு ஷேர் ஆட்டோ. ஹரித்வாருக்கு நான்கு கிலோ மீட்டருக்கு முன்னால் இறக்கி விட்டு விட்டு ஒரு சிறு மலைக் கிராமத்துக்கு வாகனம் சென்று விட்டது. 

அந்த கணம் என் கண் முன் ஒரு மலை. அந்த மலையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு கருமேகங்கள் தம்மைத் திரட்டிக் கொண்டிருந்தன. இமயமலைப் பகுதிகளில் சட்டென மேகம் உருவாவதும் மேகம் உருவானதும் ஒரு சிறு மழை பொழிவதும் இயல்பான காட்சிகள். அப்போது அங்கே ஒரு சிறு மழை பெய்தது. நான் நின்றிருந்த சாலைக்கும் என் முன்னால் சற்று தொலைவில் இருந்த மலைக்கும் இடையே அளவில் மிகப் பெரிய மரம் ஒன்று இருந்தது. நான் அந்த மலையையும் மரத்தையும் பார்த்துக் கொண்டு மழையில் நனைந்து கொண்டு நின்றேன். அம்மழை என்னைப் பரிசுத்தமாக்கிக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டேன். மழை விட்டதும் அம்மரத்திலிருந்து ஒரு பறவை வெளிப்பட்டு வான் நோக்கி எழுந்தது. அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பறவைகள் வான் மேலெழுந்தன. அத்தனை பறவைகள் அம்மரத்தில் இருந்திருக்கக் கூடும் என எவராலும் எண்ண முடியாது என்னும் அளவு அவை மழையின் போது ஓசையற்று இருந்தன. அவை எழுந்ததின் விளைவாக அம்மரத்தின் இலைகளிலிருந்து மழைநீர் ஓயாமல் சொட்டிக் கொண்டிருந்தது. முதலில் பறந்த பறவை ஒரு சுற்று சுற்றி வட்டமிட்டது. 

அந்த கணத்தில் என் மனதில் ஓர் எண்ணம் உருவானது. அடுத்த பிறவி என ஒன்று இருந்தால் அதில் இமயமலையின் ஒரு பறவையாகப் பறந்து இமயத்தின் சாரலில் சிறகடிக்க வேண்டும் என.