Friday 22 February 2019

அப்பாவின் தோட்டம்

அப்பா
ஒரு தோட்டத்தை உண்டாக்கினார்
வீட்டு மாடியில்
தனியாக உழைத்து

மூட்டைகளில் எரு சேகரித்தார்
காய்கறிக் கழிவுகளை எருவாக்கினார்
தேங்காய் மட்டைகளை எடுத்து வைத்து
நார்ப்படுக்கை தயார் செய்தார்

முதலில்
அவரை வெண்டை தக்காளி
பயிர் செய்தார்
அவை நன்றாக வளர்ந்தன
சின்னதாய் குறைவாய்க் காய்த்தன
வருத்தத்தை அப்பா வழக்கம் போல்
வெளிக்காட்டிக் கொள்ளவில்லை

அடுத்த பருவத்தில்
தனக்கான பயிர்களைக்
கண்டடைந்தார்
பசலைக் கீரை பொன்னாங்கண்ணி
மஞ்சள் இஞ்சி
ஒரு பழைய வாளியில்
அகத்தி வைத்தார்
அது ஆறடி மரமாய் வளர்ந்தது
இன்னொரு வாளியில் வைத்த
செம்பருத்தி
தினமும் பூக்கிறது

அங்கே பணி புரிந்ததில்
காகங்களையும் குருவிகளையும் அணில்களையும்
பரிச்சயம் செய்து கொண்டார்
அவற்றுடன் தினமும் ஏதேனும் உணவைப் பகிர்ந்து கொள்கிறார்
அவை காலையில் குரலெழுப்பி அவரை அழைக்கின்றன

பொங்கல் பானையில்
அப்பா பயிரிட்ட
மஞ்சள் இஞ்சியை
இரண்டு வருடமாக
சுற்றி வைக்கிறோம்

வெளியூர் சென்று வந்தால்
இல்லாத நாட்களில்
தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கிறதா
என முதல் வேலையாகப் பார்க்கிறார்

பத்து நாளைக்கு ஒரு முறை
தன் தோட்டத்திலிருந்து
கீரைகளை
அம்மாவிடம் சமையலுக்குத் தருகிறார்

அப்பா
தோட்டத்தை அமைத்திருக்கிறார்
குடும்பத்தை அமைத்தது போலவே