Thursday 11 April 2019

கருவறைத் தெய்வம்

நான் எல்லா மதத்தினரின் வழிபாட்டிடங்களுக்கும் செல்வதுண்டு. மனிதன் ஏதோ ஒரு விதத்தில் தான் என்பதைத் தாண்டி உணர முயற்சித்த இடங்களாகவே வழிபாட்டிடங்களைக் கருதுவேன். அங்கே செல்லும் போது அங்கங்கே என்ன நெறிகளோ அதனை பின்பற்றுவேன். 

கோயில்களுக்குச் செல்லும் போது ஒரு விஷயம் உணர்ந்தேன். தஞ்சைப் பிராந்தியத்தின் கோயில்கள் ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானவை. ஆயிரம் ஆண்டுகளாக இவ்விதமான வழிபாட்டு முறைகள் நிகழ வேண்டும் என ஒரு முறை உருவாக்கப்பட்டு அது தினமும் தொடர்ந்து இப்போது உள்ள காலத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. அங்கே நுழையும் ஒருவனுக்கு அதன் தொன்மையும் வரலாறும் அங்கே நிகழும் வழிபாட்டு முறைகளால் ஆழ்மனத்தில் பதிய வேண்டும். 

கோயில்களின் கருவறை என்பது இருள் சூழ்ந்தது. பிரபஞ்ச வெளியின் கருமையைக் குறிக்கும் வண்ணம் இருளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் தீபங்கள் மட்டுமே ஏற்றப்பட வேண்டும். அந்த தீபங்கள் சூரிய சந்திர நட்சத்திரங்களை குறிப்பவை. நமது புராணங்களின் படி, அண்டம் என்பது கருமையாலானது. அதிலிருந்து மற்ற நிறங்கள் தோன்றின. கருவறை நிறைந்திருக்கும் விஷ்ணுவும் லிங்க ரூபத்தில் இருக்கும் சிவனும் கருமையான கல்லாலேயே சிற்ப விதிகளின் படி செதுக்கப்பட்டுள்ளனர். இருட்கருமையாய் நிறைந்திருக்கும் இறையை தீப ஒளியின் மூலம் சில கணங்கள் காண்பதே ஆலய வழிபாட்டின் வழிமுறை. 

இன்று டியூப் லைட்டுகளின் வெளிச்சம் கருவறை முழுதும் நிறைந்து கிடக்கிறது. ஆயிரம் ஆண்டுகளாக பண்பாடைக் காத்தவர்களை விட இன்றைய சமூகம் எவ்விதத்தில் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணிக் கொள்கிறது? சற்று முயன்றால் இவ்விஷயங்களைச் சரி செய்ய முடியாதா?