Monday 6 May 2019

லஷ்மிகரம்


அந்த இளம்பெண்
பணி விடுமுறையாயிருந்த
ஞாயிற்றுக்கிழமை ஒன்றில்
தாமதமாக ஆற்றிய
எல்லா அன்றாடப் பணிகளுக்கும்
அப்பால்
முன்மதியத்தில்
தன் அன்னையிடம்
மருதாணி பூசிக் கொள்ள
மென்மையான
தன் உள்ளங்கைகளை
இணைத்து வைத்துக் கொண்டாள்

இணைந்திருந்த அந்த கைகள்
பொழியும் அருவியைப் போலிருந்தன
நதியின் பாதைகள் குறிக்கப்பட்ட
தேச வரைபடம் போலிருந்தன
அந்த பெண்ணின் அன்னை
மருதாணி இடும் முன்
அவள் உள்ளங்கைகளில்
முத்தமிட விரும்பினாள்
அவள் பிறந்த போது
இட்ட
முதல் முத்தத்தைப் போல
சொல்லாக்க இயலாத உணர்வுடன்
ஈரம் கொண்ட மருதாணிப் பத்தை
வைக்கத் துவங்கினாள்
மருதாணி மகுடம் தரித்தன
பத்து விரல்கள்
பச்சைக் கோலம்
பரவியிருந்தன மற்ற பகுதிகள்

தன் மூச்சால்
ஏறி இறங்கும்
தோள்களைக் கவனித்தவாறு
சிறிது நேரம் அசைவின்றி
அமர்ந்திருந்தாள்
மணிக்கட்டுக்கு வந்த வளையல்களை
அன்னையிடம்
மேலேற்றி விடச் சொன்னாள்
பக்கத்து வீட்டு குழந்தையிடம்
தன் மூக்குக் கண்ணாடியை
சரிசெய்யச் சொன்னாள்
அக்குழந்தை கண்ணாடியை
கையில் எடுத்துக் கொண்டு ஓடியது
துரத்திப் பிடித்து
மூக்குக் கண்ணாடியை மீட்டாள்
கைகளைக் கழுவலாமா என
அவ்வப்போது அன்னையிடம் கேட்டாள்
இன்னும் மூன்று மணி நேரத்துக்கு
அசைக்கவே கூடாது
என அன்னை சொன்னதை
சிணுங்கலுடன் கேட்டுக் கொண்டாள்
அன்றைய மதிய உணவை
தட்டில் பிசைந்து
ஊட்டி விட்டாள்
அவள் அன்னை
கைகள் அசையாமல்
சிறிது நேரம் உறங்கி
விழித்து
நீரால் கைகளைக் கழுவி
அந்தி வானமெனச்
சிவந்திருந்த உள்ளங்கைகளை
அன்னையிடம் ஆர்வமாகக் காட்டினாள்

அவள் உள்ளங்கைகளைத்
தன் கண்ணில் ஒற்றிக் கொண்ட
அன்னை
நீ லஷ்மி
நீ லஷ்மி
என்று சொன்னாள்

சிரித்துக் கொண்டே
அந்த இளம்பெண்
தன் பெயர் லஷ்மி அல்ல என்று சொல்லி
தன் பெயரைச் சொன்னாள்
அந்த பெயரும்
லஷ்மிகரமாகவே
இருந்தது