Tuesday, 31 March 2026

சிறு கூடாரம்

 
சில நாட்களுக்கு முன், தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரு பயணி ரயில்வே பிளாட்ஃபாரத்தில் மேலே இருக்கும் விதமான சிறு கூடாரம் ஒன்றை அமைத்து அதனுள் உறங்கிக் கொண்டிருந்தார். நான் பார்த்த போது நேரம் இரவு 10 மணி. அவரது ரயில் நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ இருந்திருக்கக் கூடும். மலையேறுபவர்கள் இதனைப் பயன்படுத்துவார்கள். மிகக் குறைவான எடை கொண்டது. மொத்த கூடாரத்தையும் சிறு பைக்குள் அடக்கி வைக்க முடியும். கையால் தூக்கிச் செல்லும் அளவு மிகக் குறைவான எடை கொண்டது. எனக்கு அக்காட்சி பெரும் ஆர்வம் அளித்தது. 

சொந்த வீட்டுக்கு மாற்று

இந்தியா இன்றும் விவசாய நாடு. தங்கள் விளைநிலத்துக்கு அருகில் வீடமைத்துக் கொள்வது இந்திய விவசாயிகளின் வழக்கம். விவசாயிகளின் உபரி வருமானமே பன்னெடுங்காலமாக இந்திய நகரங்களின் தோற்றத்துக்கும் நிலைபெறலுக்கும் காரணமாக அமைந்தது. இந்தியாவில் எப்போதுமே நிலம் ஒரு முதலீடு. பெரும் விலை மிக்கது. ஒருவர் தன் வாழ்நாளின் பெரும் பகுதி சம்பாதித்த ஒரு கோடி ரூபாய் கூட ஒரு 40 அடி அகலமும் 60 அடி நீளமும் கொண்ட 2400 சதுர அடி மனையாக மாறி விடும். இந்தியர்கள் தங்கத்திலும் நிலத்திலும் மட்டுமே அதிகம் முதலீடு செய்கின்றனர். இது அனாதி கால நடைமுறை. அதனால் தான் நகரங்களிலும் பெருநகரங்களிலும் மனையும் வீடுகளும் பெரும் விலை விற்கின்றன ; வீட்டு வாடகையும் கூடுதலாக இருக்கிறது. 

ஏன் நம் பிராந்தியத்தில் காலிமனைகள் வாடகைக்கு விடப்படுவதில்லை ? ஒருவருக்கு 2400 சதுர அடி மனையில் கட்டப்பட்டிருக்கும் வீடு மாதம் ரூ.6000 வாடகைக்கு தரப்படுகிறது என்றால் ஏன் ஒரு மனை ரூ.2000 வாடகைக்கு தரப்படக் கூடாது ? மனையின் விலை ஐம்பது லட்ச ரூபாய் என்றால் வீடு கட்ட ஐம்பது லட்ச ரூபாய் செலவாகிறது. மனையை வாடகைக்கு விட்டால் வீடு கட்ட செலவிடப்படும் தொகை சேமிப்பாக அந்த நபருக்கு மிஞ்சும் அல்லவா? 

ஒருவர் ஒரு மனையை வாடகைக்கு எடுத்து தன் சொந்த செலவில் மூங்கிலால் வீடு கட்டிக் கொண்டு 3 வருடமோ 5 வருடமோ குடியிருந்து விட்டு பின்னர் அந்தக் கூரை வீட்டை பிரித்து விட்டு ஏன் அடுத்த ஊருக்குச் செல்லக் கூடாது? கண்டெயினர் வீடுகள் இருக்கின்றன. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மோட்டார் வாகனத்தில் நகர்த்திச் செல்லும் கண்டெயினர் வீடுகள் இருக்கின்றன. இவை ஏன் நம் தேர்வாக இருப்பதில்லை? இவற்றை ஏன் நாம் பரிசீலிப்பதில்லை ?  

உத்தரவு

பெயருடன் ஊரை இணைத்துக் கொண்டிருப்பவன் அடியேன். ஊரிலிருந்து புறப்படுவதும் ஊருக்குத் திரும்பி வருதலுமே என் வழமையாக இருந்திருக்கிறது. சிறுவனாக மகிழ்ந்திருந்ததும் இங்கு தான் ; இளைஞனாக வாழ்வை எதிர்கொண்டதும் இங்கு தான். அகத்தின் ஏதோ ஒரு சிறு புள்ளி புதிய நிலம் நோக்கிச் செல் எனக் கூறிக் கொண்டிருக்கிறது. அக்குரலின் உறுதி மாற்றமடையாமல் இருப்பது எனக்கு வியப்பைத் தருகிறது. எந்தப் புதிய நிலம் என என் அகத்தைத் துழாவிப் பார்த்தேன். ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும் என்னும் விருப்பம் எனக்கு உண்டு. காஞ்சிபுரம் சென்று விட வேண்டும் என்றும் நினைக்கிறேன். கோதாவரி பாயும் ராஜமுந்திரி சென்று விட வேண்டும் என்பதும் என் விழைவு. கர்நாடகாவின் கூர்க் பிராந்தியம் எனக்கு விருப்பமானது. மத்தியப் பிரதேசத்தின் சிறு குன்றுகள் இனியவை. காசியும் ரிஷிகேசமும் என்றைக்குமான விருப்பங்கள். இமயத்தில் வாழ்ந்தால் வாழ்நாளின் மீதி உள்ள நாட்கள் எல்லாம் இமயத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் அதை விட இன்னொரு இனிமை இருக்க இயலாது. என்ன நிகழப் போகிறது என்பதை அறியேன். அகத்தின் குரலைக்கு செவி சாய்க்கப் போகிறேனா என்பதை அடியேன் நோக்கிக் கொண்டிருக்கிறேன். 

இந்த எண்ணம் ஏன் உருவானது என்பதை என்னால் அத்தனை தெளிவாக வகுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த ஊர்கள் எவ்விதம் என் தெரிவாக இருக்கின்றன அவற்றின் பொதுத்தன்மை என்ன என்பதும் என்னால் அறிய இயலாததாக இருக்கிறது. எல்லா ஊர்களுமே நதிக்கரையின் ஊர்கள். ஸ்ரீரங்கமும் கூர்க் கும் காவிரிக்கரை ஊர்கள். காசியும் ரிஷிகேசமும் கங்கைக்கரை ஊர்கள். ராஜமுந்திரி கோதாவரிக்கரையில் இருக்கும் ஊர். நதிக்கரையில் பிறந்து வாழ்ந்த நான் இன்னொரு நதிக்கரை நகருக்கே செல்ல விரும்புகிறேன். 

சராசரி வாழ்நாளின் பாதி பங்கு கடந்து விட்டது. மீதி பங்கு எவ்வளவு என்பது என் திட்டமிடலுக்கு உட்பட்ட விஷயம் அல்ல. புதிய நிலத்துக்குச் சென்று ஒவ்வொரு கணமும் புதிதாய் உணரும் வாழ்க்கையை அங்கு வாழ வேண்டும் என விரும்புகிறேன். தினமும் புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ளும் வாழ்க்கை. இயற்கையிடமிருந்து பெற்றுக் கொண்டவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வாழ்க்கை. துயர் இல்லாத வாழ்க்கை. 

ஒரு புதிய நிலம் நோக்கி செல்வது என்னும் ஆர்வம் சில விஷயங்களை தீவிரமாக உறுதிப்படுத்துகிறது. செல்லும் ஊரில் சொந்தமாக நிலம் எதுவும் வாங்கக் கூடாது. ஏன் இவ்விதம் தோன்றுகிறது என அறியேன். சொந்தமாக நிலமோ வீடோ இல்லாமல் இருப்பது சிறப்பான விஷயம் என்பது என் அபிப்ராயமாக இருக்கிறது. எனது தொழில் கட்டுமானமும் மனை வணிகமும். இருப்பினும் என் அபிப்ராயம் இதுவே. இது மிக உறுதியான எண்ணம் அல்ல எனினும் நாம் ஒரு தொழில் செய்கிறோம் அந்தத் தொழிலுக்கு ஒரு சொந்த இடம் இருப்பது நல்லது எனில் நிலம் வாங்கி அதில் வீடு கட்டிக் கொள்ளலாம். வட இந்திய வணிகர்களுக்கு இந்த வழக்கம் உண்டு. அவர்கள் வீடுகள் பெரும்பாலும் கடைவீதியில் இருக்கும் ; அவர்களின் வணிகத்துக்குரிய கடை கீழ்தளத்திலும் வீடு மேல்தளத்திலும் இருக்கும். ஒருவர் கையில் பணம் இருக்கிறது அவர் ஒரு புதிய ஊருக்கு இடம் பெயரப் போகிறார் என்றால் அங்கே கையில் இருக்கும் பணத்தை வீடாக மாற்ற வேண்டியதில்லை. சொந்தமாக வீடு இல்லை என்றால் எந்த ஊருக்கும் சென்று அங்கே ஓராண்டோ இரண்டு ஆண்டுகளோ வாழ்ந்து விட்டு அடுத்த ஊருக்குச் செல்லலாம். பெங்களூரில் இரு ஆண்டுகள் ; ஸ்ரீகாகுளத்தில் இரு ஆண்டுகள்; திருவண்ணாமலையில் இரு ஆண்டுகள்; நாகபுரியில் இரு ஆண்டுகள் ; கௌஹாத்தியில் சில ஆண்டுகள் ; ஸ்ரீநகரில் சில ஆண்டுகள். எண்ணிப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. 

இங்கிருந்து புறப்படுவது என்று மனதுக்குத் தோன்றி விட்டது. அந்த எண்ணத்தை தெரிவித்து உத்தரவு பெற வேண்டும் என எண்ணுகிறேன். யாரிடம்? மாயூரநாதரிடமும் அபயாம்பிகையிடமும். திருஇந்தளூரின் பரிமள ரங்கநாதனிடம். இறை உரு முன் சென்று நிற்கப் போகிறேன். எனக்கான உத்தரவை அவர்களே கொடுக்கட்டும் என்று. 

என் மண்ணே ! என் நிலமே ! எனக்கு நீ எவ்வளவோ அளித்தாய். இப்போதும் அளித்துக் கொண்டிருக்கிறாய். கூட்டை விட்டுப் பறக்க வேண்டும் என்பதே பறவைகளின் தணியாத தாகம். எல்லையற்ற வானத்துக்குப் பறந்து செல்ல தளம் அமைத்துக் கொடுத்தலே கூட்டின் இயல்பு. என் மண்ணே! என் நிலமே ! உன் கூட்டிலிருந்து எல்லையற்ற வானம் நோக்கி இந்தப் பறவை பறந்து செல்லட்டும். என் மண்ணே ! என் நிலமே ! எனக்கு எப்போதும் ஆசியளி.   

Sunday, 29 March 2026

தீர்த்தன்

 

எனது நண்பன் சென்னையில் பணி புரிகிறான். அவனது மனைவி ஒரு சார்டட் அக்கவுண்டண்ட். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நண்பன் சென்னையிலிருந்து திருக்கருகாவூர் வந்திருந்தான். கோவிலில் ஸ்வாமியிடம் பிராத்தனை செய்து கொள்ள. அப்போது நான் உடன் சென்றிருந்தேன். (2024ம் ஆண்டு மே மாதத்தை ஒட்டி என்று ஞாபகம். நாங்கள் திருக்கருகாவூர் சென்று விட்டு பட்டீஸ்வரம், தாராசுரம் ஆலயங்களுக்கும் சென்றிருந்தோம். அப்போது தாராசுரத்தில் ஒரு தேர்தல் பரப்புரைக் குழு எங்களைக் கடந்து சென்றது. ) ஆலயம் வந்து விட்ட சென்ற சில வாரங்களில் நண்பனின் மனைவிக்கு சுகப்பிரசவம் ஆனது. சென்ற வருடம் குழந்தைக்கு ஓராண்டு பூர்த்தியானதும் அவர்கள் குடும்பத்துடன் திருக்கருகாவூர் வந்திருந்தனர். கும்பகோணத்தில் தங்கியிருந்த அவர்களைக் காணச் சென்றிருந்தேன். நண்பனுடன் அவ்வப்போது உரையாடினாலும் அவன் வீட்டுக்கு வந்ததில்லை என்பது என் மனக்குறையாக இருந்தது. அதற்கான சூழல் சரிவர அமையவில்லை. இன்று நண்பன் மனைவி குழந்தை தீர்த்தன் மூவரும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். ஆலயம் ஒன்றில் சுவாமி தரிசனம் செய்து விட்டு இங்கே ஊரில் ரயில் ஏற வேண்டும். 15 நிமிடம் மட்டும் வீட்டுக்கு வந்து விட்டு செல்லவும் என்று சொன்னேன். கடைசி நிமிடம் வரை வரமுடியுமா என்னும் நிலை; எனினும் சமாளித்து வந்து விட்டனர். நீர்மோர் மட்டுமே தயாரித்து வைக்க முடிந்தது. தீர்த்தன் நீர்மோரை விரும்பிப் பருகியது மனதுக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது. தீர்த்தன் புஷ்டியாக இருக்கிறான். இருக்கும் இடத்தில் இனிமையை நிறைக்கிறான். அவன் வண்ணச் சீரடிகள் வீட்டில் பட்டது ஸ்ரீராமனும் கிருஷ்ணனும் வீட்டுக்கு வந்ததைப் போன்ற உணர்வை அளித்தது. 

பிதாமகரின் ஆசி

 
இலக்கியப் படைப்பாளியான திரு.சிவப்பிரகாஷ் அவர்களின் ஆளுமை எப்போதும் ஒரு சிம்மத்தை நம் நினைவுகளுக்குக் கொண்டு வரும். கர்ஜிக்கும் சிம்மம். பராக்கிரமத்தை தன் இருப்பாய் வெளிப்படுத்தும் சிம்மம். இப்போது அவர் முற்றிலும் கனிந்திருக்கிறார். அவரின் ஒவ்வொரு சொல் செயல் சிறு அசைவிலும் அவர் அகம் கொண்டிருக்கும் கனிவு வெளிப்படுகிறது. இன்று அவர் ஒரு பிதாமகராக தன் அன்பையும் ஆசிகளையும் யாவர்க்கும் அளித்துக் கொண்டிருக்கிறார். 

கனிவு கொண்ட அம்மனிதருடன் இரண்டு மணி நேரம் உரையாடும் வாய்ப்பு கிடைத்த 29.03.2026ம் தேதியின் மாலைப்பொழுது அந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத மாலையாயிருக்கும் என்பதில் ஐயமில்லை. 

பாரதம் உலகில் தனித்துவம் கொண்ட மண். உலகியலிலும் ஆன்மீகத்திலும் மானுடம் தொட்ட உச்சங்கள் அனைத்தையும் பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் பாரத மண் பலமுறை பார்த்திருக்கிறது. மானுட அகம் ஒரு புறம் அதிகார விழைவு கொண்டிருக்க இன்னொரு புறம் பொருள் எல்லைகளுக்கு அப்பால் செல்லவும் உளம் கொள்கிறது. உலகியலின் இனிமைகளுக்கு ஒரு வாழ்க்கை மட்டும் போதுமா என எண்ணிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு பொருளும் அதன் ஸ்தூல வடிவமான உடலும் அழியக் கூடியது என்னும் உணர்வு ஏற்படும் போது வாழ்நாளின் கணிசமான பகுதி பூர்த்தியாகியிருக்கிறது. பொருள் உலகமும் பொருளுக்கு அப்பாற்பட்ட உலகமும் தங்கள் நிலையில் நின்றிருக்க மானுடம் அலைக்கழிப்புகளுக்கு ஆளாகிறான். கோடானுகோடி மானுடரில் ஒரு சிலரே வாழ்வின் சாரத்தை அனுபவபூர்வமாக சென்றடைகிறார்கள். 

கன்னட இலக்கியப் படைப்பாளியான சிவப்பிரகாஷின் வாழ்க்கை அவருக்குள் ஓர் ஆன்மத் தேடலை உண்டாக்குகிறது. வீர சைவம், சைவ சித்தாந்தம், காஷ்மீர சைவம், பௌத்த விபாசனா, கிரியா யோகம் ஆகியவை அவர் வாழ்க்கையின் நீண்ட பரப்பில் அவர் அகத்தை எட்டுகின்றன. பல ஆண்டுகள் ஆன்மீக சாதனையில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கிறது. அவரது ஆன்ம சாதனை அவருக்கு இனிதானதாக மட்டும் இருக்கவில்லை. மிகக் கடுமையானதாகவும் மிக உக்கிரமானதாகவும் இருந்திருக்கிறது. அவை அனைத்தையும் குரு அருளால் குருவின் இருப்பை உணர்ந்ததால் கடந்து வந்திருப்பதாகக் கூறுகிறார் சிவப்பிரகாஷ். இறைவனை விடவும் குரு கருணை கொண்டவர் என்னும் உணர்வுநிலையை அடையப் பெறுகிறார். ஆன்ம சாதகன் தன் ‘’குரு’’வை சிக்கெனப் பற்றிக் கொள்வான் எனில் குருவின் கருணையால் அவன் உணர வேண்டியவை அவனுக்கு உணர்த்தப்படும் என்கிறார். 

படைப்புச் செயல்பாடு என்பது கணந்தோறும் புதியது. உயிர்த்துடிப்பு மிக்கது. படைப்பூக்க மனம் கொண்ட படைப்பாளியும் இலக்கிய வாசகனும் எவ்விதம் யோகப் பயிற்சியில் ஈடுபடுவது என்னும் வினாவுக்கு தன் வாழ்வில் இருந்து நிறைய அனுபவங்களை முன்வைத்தார். தனது ஆன்ம சாதனை என்பது தனக்கு வாய்த்த குரு அருள் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி இருக்கிறார். தனக்கான குருவை எவ்விதம் கண்டடைவது என்னும் வினாவுக்கு கன்றுக்குட்டியின் நினைவு எப்போதும் தாய்ப்பசுவுக்கு இருந்து கொண்டேயிருப்பது போல சீடனை குரு எப்போதும் தன் உணர்வில் கொண்டிருப்பார் என பதில் அளித்தார். 

நிகழ்வில் கலந்து கொண்ட இலக்கிய வாசகர்கனின் மனதில் சுழன்று கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நேற்றைய நிகழ்வு சொற்கள் மூலமும் சொற்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுநிலை மூலமும் தீவிரமான பதிலை அளித்தது. பங்கேற்பாளர்கள் அனைவரும் பிதாமகரின் அன்பையும் ஆசிகளையும் பரிபூரணமாகப் பெற்றார்கள். 

Friday, 27 March 2026

சுகன்யா சம்ரிதி

 
இன்று அஞ்சல் அலுவலகம் சென்றிருந்தேன். எனது கணக்கிலிருந்து இன்னொருவரின் வங்கிக் கணக்குக்கு தொகையை மாற்றம் செய்ய வேண்டும். N E F T என்னும் முறையில் பணம் அனுப்ப அங்கே சென்றிருந்தேன். காத்திருந்த போது நான் முன்னர் சென்று முடி திருத்திக் கொண்டிருந்த சலூன் கடைக்காரரைச் சந்தித்தேன். அவர் கடையை விட குறைவான தூரத்தில் ஒரு புதிய சலூன் திறந்தார்கள் ; அவர்கள் காலையில் முன் நேரத்திலேயே கடையைத் திறந்து விடுவார்கள். ஆதலால் அங்கு செல்ல ஆரம்பித்தேன். வெகுநாட்கள் கழித்துப் பார்க்கிறோம். 

என்னிடம் ‘’ என்ன அண்ணன்! பாத்து எத்தனை நாளாச்சு? ஏன் அண்ணன் கடைக்கே வர்ரது இல்லை’’ என்றார். 

‘’இந்த மாசம் முடி வெட்டிக்கும் போது வரேன்’’ என்றார். 

அவர் சலூன் கடைக்காரர் என்பதால் சில நாட்கள் முன்னர் நான் முடி வெட்டியிருக்கிறேன் என்பது அவருக்கு முதற்பார்வையிலேயே தெரிந்திருக்கும். 

அவர் கையில் இரு பாஸ்புத்தகங்கள் இருந்தன. நான் அதனைக் கவனித்தேன். 

‘’அண்ணன் ! இது செல்வ மகள் திட்டம் அண்ணன். உங்களுக்கு ஞாபகம் இருக்கா ? நீங்க கடைக்கு ஒருநாள் வந்திருந்தீங்க. அப்ப உங்ககிட்ட முதல் நாள் நைட் எனக்கு பெண் குழந்தை பொறந்திருக்குன்னு சொன்னன். அப்ப நீங்க போஸ்ட் ஆஃபிஸ்ல ‘’செல்வ மகள்’’னு ஒரு ஸ்கீம் இருக்கு. உங்க பெண் குழந்தை பேர்ல மாசா மாசம் டெபாசிட் செய்ங்கன்னு சொன்னீங்க. எனக்கு ஃபார்ம்லாம் கூட வாங்கிட்டு வந்து தந்தீங்க.’’ அவர் சொன்னது என் நினைவில் வந்தது. 

‘’இன்னொரு பாஸ் புக்?’’

‘’போன வருஷம் ஒரு பையன் பொறந்தான் அண்ணன். அவன் பேர்லயும் கட்டறன்’’

பாஸ்புக்கை வாங்கிப் பார்த்தேன். மாதா மாதம் இரு குழந்தைகள் பெயரிலும் ரூ.1000 கட்டுகிறார். சில மாதங்கள் ரூ.1500ம் கட்டியிருக்கிறார். 

‘’நீங்க ஹெட் போஸ்ட் ஆஃபிஸ்ல தான் பணம் கட்டணும்னு இல்ல. கன்னியாகுமரில இருந்து காஷ்மீர் வரைக்கும் இருக்கும் எந்த போஸ்ட் ஆஃபிஸ்லயும் நீங்க பணம் கட்டலாம். உங்க சலூனுக்கு பக்கத்துல கூட ஒரு பிராஞ்ச் போஸ்ட் ஆஃபிஸ் இருக்கே. அங்க கூட பணம் கட்டலாம்’’

அவருக்கு நான் சொன்ன தகவல் புதிது. போஸ்ட் ஆஃபிஸ் ஊழியர் ஒருவரிடம் அழைத்துச் சென்று நான் சொன்ன விபரத்தை உறுதிப்படுத்தினேன். 

‘’சுகன்யா சம்ரிதி’’ என்னும் ‘’செல்வ மகள்’’ திட்டம் மிகச் சிறப்பான ஒரு திட்டம். பெண் குழந்தை பிறந்த நாள் முதல் குழந்தையின் பெயரில் ஒரு சேமிப்புக் கணக்கு துவங்கி மாதாமாதம் பணம் கட்டி வர வேண்டும். அந்த குழந்தைக்கு 18 வயது ஆகும் போது கல்விச் செலவுக்கென ஒரு தொகையையும் 21 வயதில் முழுத் தொகையையும் பெற முடியும். 

பெற்றோர் குழந்தை உறவின் உணர்வைப் பிணைப்பை அன்பை நேயத்தை வெளிப்படுத்தும் திட்டம் இது. நாடெங்கும் நான்கு கோடியே ஐம்பது இலட்சம் செல்வ மகள் கணக்குகள் நடப்பில் இருக்கின்றன. அதில் மூன்று இலட்சத்து முப்பத்து மூன்று ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. 

பிறந்த கைக்குழந்தை பெயரில் கணக்கு துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது இத்திட்டம் பெரிய அளவில் மக்களைச் சென்றடைந்ததற்கான காரணம். அவ்விதம் துவங்கப்பட்ட கணக்குகள் உணர்வின் அடையாளமாயின. 

சலூன் கடைக்காரர் அதற்கு முன் அவருக்கு சொந்தமாகக் கூட வங்கிக் கணக்கு வைத்திருந்து அதில் ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தியிருக்க மாட்டார். ஆனால் தன் குழந்தைகள் விஷயம் என வரும் போது கிரமமாக ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்துகிறார். 

இவ்விதமான திட்டத்தை வடிவமைத்த ஒருவர் நம் நாட்டு மக்களின் உளநிலையை உணர்வுநிலையை நன்கறிந்த ஒருவராக இருப்பார். அதனால் தான் இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Tuesday, 24 March 2026

வாணி வாழ்த்து


நூல் : சரஸ்துதி (கவிதைத் தொகுப்பு) ஆசிரியர் : கா.சிவா பக்கம் : 122 விலை:ரூ.230 பதிப்பகம் : வாசகசாலை பதிப்பகம், சென்னை-92. பதிப்பக மின்னஞ்சல் : vasagasalaipublication (at) gmail (dot) com  

***

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு 
தெள்ளிய ராதல் வேறு
-திருக்குறள்

ஞாயிறு மாலைகளில் பூம்புகாரோ தரங்கம்பாடியோ செல்வது எனது வழக்கம். இளைஞனாயிருந்த போது நூல் பிடித்தாற் போல இருந்த வழக்கம், இப்போது குறைந்தபட்சம் இரு வாரங்களுக்கு ஒருமுறை என்ற அளவிலேனும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அலைகளும் வானமும் மேகமும் நிறைந்திருக்கும் அந்த வெளியை அகத்தில் நிறைத்துக் கொண்டால்தான் அடுத்த ஏழு நாட்களும் இனிதே இருக்கும் என்பது எனது நம்பிக்கை. ஞாயிறன்று காலை ஓஷோவின் ''Glimpses of a golden childhood'' என்ற நூலை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஓஷோ கேட்கிறார். ‘’ உலகின் 10 சிறந்த நாவல்களை எவர் பட்டியலிட்டாலும் அதில் 5 நாவல்கள் ருஷ்ய நாவல்களாக இருக்கும். டால்ஸ்டாய், தாஸ்தயெவ்ஸ்கி, இவான் துர்கனேவ் ... சோவியத் யூனியன் அரசாங்கம் வந்தது. சோவியத் அரசு கலைஞனை எழுத்தாளனை போஷித்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் பெரும் படைப்புகள் எவையும் வரவில்லையே. ஏன்?’’ ஓஷோ மேலே சொல்லிக் கொண்டு சென்றார். ‘’சில விஷயங்கள் இயல்பாக நடக்க வேண்டும். மலர்கள் மலர்வது. பனி பொழிவது. மலர்களை வரி அமைப்புக்குள் கொண்டு வந்தால் அவை மலராது. பனிப் பொழிவும் அப்படித்தான்.’’ சிந்திக்கும் மனம் கொண்டவர்களுக்கு ஓஷோவின் அவதானங்கள் சிறு விதைகள். அவற்றை மனதுக்குள் அமிழ்த்து வைத்தால் செடிகளாக வளர்ந்து பூக்கத் தொடங்கி விடும், நூற்றுக்கணக்காக. அன்று முழுக்க பெரும் படைப்பாளிகள் ஏன் சோவியத் ஆட்சிக்குப் பின் உருவாகவில்லை என்னும் கேள்வியை மனம் கேட்டுக் கொண்டேயிருந்தது. 

மாலை திருவாரூரிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவருடன் பூம்புகார் சென்றேன். நண்பர் என்னிடம் ‘’என்னால் எந்த சடங்கிலும் மனதை இணைத்துக் கொள்ள முடியவில்லை.’’ என்றார். ‘’இது ஆழமா கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். நாம இப்படித்தான் அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருப்போம். ஆனா முழுக்க அப்படி இருக்க மாட்டோம். அந்த இடைவெளில நிறைய முக்கியமான பிரதானமான நமக்கு நம்ம பர்சனாலிட்டிக்கு ரொம்ப நெருக்கமான நமக்கு நிறைய பயன் தரக்கூடிய விஷயங்கள் இருக்கும். அத மிஸ் பண்ணிடக் கூடாது. அப்படி மிஸ் பண்றது நமக்கு இழப்பு’’ நண்பர் அமைதியாக இருந்தார். நான் தொடர்ந்து சொன்னேன் . ‘’தமிழ் சொஸைட்டில மரபான விஷயங்கள் மேல ஒரு ரெசிஸ்டென்ஸ் உருவாக்கிட்டாங்க. 90 பர்செண்ட் பியூபிள் மனசுல அந்த விஷயம் இருக்கு. அவங்க அத முழுசா தெரிஞ்சுக்கவும் இல்ல. கம்யூனிஸ்ட் உருவாக்குன ரெஸிஸ்டன்ஸ் அது. அதோட எஃபெக்ட் இப்பவும் இருக்கு’’. தான் எந்த சடங்கிலும் மனம் இணையாமல் இருப்பதற்கும் கம்யூனிசத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது நண்பருக்குத் தெரியவில்லை. ‘’முதல்ல சடங்குன்னு நீங்க எதை மீன் பண்றீங்க. அத வெளிப்படையா சொல்லுங்க’’. ‘’சாமி கும்பிடுறது’’. ‘’உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா ? நீங்க உங்களை நாத்திகர்னு உணர்றீங்களா?’’ ‘’நான் கடவுளை நம்பல. ஆனா ஒரு சக்தி இருக்குன்னு நம்பறன்’’. ‘’உங்க நம்பிக்கைக்கு யார் குறுக்க வந்தா? எல்லாரும் கும்பிடற மாதிரிதான் நீங்க கும்பிடணும்னு யார் சொன்னா? நீங்க நம்புற சக்தியை உங்களுக்கு உகந்த விதத்துல அணுகக் கூடாதுன்னு யாராவது ஏதாவது செஞ்சாங்களா?’’. நண்பர் அமைதியாக இருந்தார். இவ்விதமான எதிர்கொள்ளலை இப்போதுதான் சந்தித்திருப்பார். ‘’ ஆயிரம் வருஷம் ரெண்டாயிரம் வருஷம் முன்னால யாராவது எதையாவது எழுதியிருப்பாங்க. அதையே ஏன் இப்பவும் பெருசுன்னு நினைக்கனும். அதெல்லாம் ஒருத்தன் கற்பனையா எழுதனது. கற்பனைல இல்லாத விஷயத்தைக் கூட எழுத முடியும்.கவிஞர்கள் கவிதை எல்லாமே இல்லாதத எழுதறது தான்.  அத ஏன் நாம பெருசுன்னு நினைக்கனும். நம்ம அனுபவத்துல எது இருக்கோ நமக்கு எது பெருசோ நமக்கு எது முக்கியமானதோ அதான் அவசியம். மத்ததெல்லாம் தேவையில்லை’’. நண்பர் பட பட வென பேசி விட்டார். 

‘’நண்பரே ! எனக்கு உங்க உணர்வு புரியுது. உங்க கேள்வியும் புரியுது. உங்க கேள்விக்கு ஒரு பதில் இருக்கு. உங்க மனசுல இருக்கற கேள்விக்கான பதிலை நீங்க தேடிக் கண்டுபிடிச்சுட்டீங்களான்னு எனக்குத் தெரியாது. ஆனா நிச்சயமாக உங்க கேள்விக்கு ஒரு பதில் இருக்கு. உங்க கேள்விக்கான பதில்னு எனக்கு தெரியறத சொல்றன். அது உங்களுக்கு உபயோகப்படலாம் ; உபயோகப்பட்டா பயன்படுத்திக்கீங்க. இல்லன்னா விட்டிருங்க. நீங்களே தேடி கண்டுபிடிங்க.’’

‘’சடங்கு, கடவுள், கவிதைன்னு அடுத்தடுத்து நிறைய பெரிய விஷயம் உள்ள வந்துட்டோம். நான் எங்கயோ ஒரு இடத்துல இருந்து ஆரம்பிச்சுக்கறன். நாம இப்ப கடலுக்கு போயிட்டு இருக்கோம். நம்ம மரபுல கடலுக்கும் நதிக்கும் நிறைய தொடர்பு இருக்கு. அதனால நதியிலிருந்து ஆரம்பிக்கறன். நம்ம நாட்டுல ஒருத்தன் காலைல எழுந்ததும் ‘’ கங்கை யமுனை சரஸ்வதி ந்ர்மதை சிந்து காவேரி கோதாவரி’’ன்னு ஏழு நதிகளோட பேரையும் சொல்லணும்னு ஒரு வழக்கம் இருக்கு. இன்னைக்கும் நம்ம நாட்டுல அப்படி சொல்றவங்க இருக்காங்க. லட்சம் பேர் இருக்கலாம். ஆயிரம் பேர் இருக்கலாம். நூறு பேர் இருக்கலாம். 140 கோடி ஜனங்கள்ல ஆயிரம் பேர் சொல்றாங்கன்னே வச்சுக்கங்க. நம்பர்ல டிபேட் பண்ண வேண்டாம். அப்படி நதிகளோட பேரை சொல்றது ஒரு நம்பிக்கை. அத ஒரு சடங்குன்னு வேணாலும் உங்க தியரிபடி வச்சுக்கங்க. ஆனா இந்த வழக்கம் நம்பிக்கை சடங்கு குறைஞ்சது 4000 வருஷமா இருக்கு. 4000 வருஷம் முன்னாடி இந்த 7 நதியையும் ஒரு தடவை நேரா பாத்தவங்க குறைவா இருந்திருக்கலாம். இன்னைக்கு கூட இந்த 7 நதிகளையும் நேரா பாத்தவங்க எண்ணிக்கை நம்ம மக்கள்தொகையோட ஒப்பிட்டா குறைவா தான் இருக்கும். ஆனா ஒருத்தன் காலைல எழுந்ததும் பலபேருக்கு வாழ்க்கையைக் கொடுக்கற இந்த ஏழு நதிகளோட பேர சொல்ரான்னா அது ரொம்ப மகத்தான விஷயம்னு தான் நான் நினைப்பேன். அதே போல ஏழு நகரங்கள் புண்ணிய நகரங்கள். ‘’அயோத்தி மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா துவாரகா’’. நம்ம மரபு மண்ணை நதியை வானத்தை மேகத்தை பூமியை காத்தை நெருப்பை தெய்வமா பாக்கற மரபு. நம்ம மரபோட பார்வையை நாம விரிவுபடுத்தி பாக்கலாம். அதுக்கான முழு சுதந்திரம் நமக்கு இருக்கு. ஆனா மரபுக்கு அன்னியப்பட்டு போகக் கூடாது.’’ 

பேசிக் கொண்டே வந்ததில் சாயாவனத்தைத் தாண்டி விட்டோம்.அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன். ‘’திருவாரூருக்கும் பூம்புகாருக்கும் ஒரு தொடர்பு இருக்கு. அது என்னன்னு தெரியுமா?’’. நண்பருக்குத் தெரிந்திருக்கவில்லை. 

‘’அதாவது, பாண்டியனோட அவையில கண்ண்கி வந்திருக்கறத வாயிற்காவலன் சென்று சொல்கிறான். வந்திருப்பவள் ‘’வெற்றிவேற் தடக்கை கொற்றவை அல்லள்;. அதாவது வந்திருக்கறது பத்ரகாளி இல்லன்னு சொல்றான். அவளைப் பத்தி சொல்லும் போது அவனுக்கு ஏன் பத்ரகாளி ஞாபகம் வந்ததுன்னு நாம யோசிச்சுக்கணும். அவைக்குள்ள கண்ணகி சென்றதும் பாண்டியன் யார்ன்னு கேக்கறான். அதுக்கு கண்ணகி சொன்ன பதிலா இளங்கோ எழுதறார். மன்னனைப் பாத்து ‘’தேரா மன்னா’’ அப்படிங்கறா. தேர்வு தேர்தல் எல்லாத்துக்கும் மூல வார்த்தை அது. அலசி ஆராயும் திறன் இல்லாத மன்னனே ‘’தேரா மன்னா’’. ஒரே வார்த்தை அதுல எத்தனை விஷயத்தைப் புரியவச்சுடான் இளங்கோ. தேரா மன்னா செப்புவதுடையேன் . ஆராய்ச்சி இல்லாத மன்னா நான் சொல்வதைக் கேள்.

 "தேரா மன்னா செப்புவது உடையேன்!
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்,
வாயிற் கடைமணி நடுநா நடுங்க,
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத்
தான் தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின்
மடித்தோன், பெரும்பெயர்ப் புகார் என் பதியே!"

(இந்தப் பாடல் எனக்கு மனப்பாடம். அதனை நண்பரிடம் அப்படியே சொன்னேன்.)

புள்-னா பறவை. புள்ளுறு புன்கண் தீர்த்தவன் சிபிச்சக்கரவர்த்தி. அதாவது, சிபி பேரரசனா ஆட்சி செஞ்சான். அவன் ஆட்சி தர்மம் தவறாம நடந்தது. அவனை சோதிக்க இந்திரன் ஒரு கழுகா மாறி ஒரு புறாவைத் துறத்திட்டு வந்தான். அந்தப் புறா சிபி உப்பரிகைல நின்னப்ப அவன் கிட்ட வந்து அபயம் கேட்டது. மன்னன் அபயம் கேட்டு வந்தவங்கள பாதுகாக்கணும். அது அவனோட தர்மம். அதனால அபயம் கொடுத்தான். அப்ப கழுகு கேட்டது. மன்னனே நீ புறாவுக்கு அபயம் கொடுத்துட்ட ; நானும் ஒரு ஜீவன் தான். என்னோட குஞ்சுகள் கூட்டுல பசியோட இருக்கு. அதுக்கு இந்த புறா மாமிசம் தான் உணவு. இப்ப புறாவுக்கு நீ கொடுத்த அபயத்தாலே அங்க கூட்டுல என் குஞ்சுகள் சாகப் போகுதே. நீ என்ன செய்யப் போற? சிபி தன்னோட உடம்பு சதையை அரிஞ்சு புறாவோட எடைக்கு சமமா தரன்னு சொல்றார். அவர் உடம்புல உள்ள எல்லா சதையையும் அரிஞ்சு வச்சாலும் தராசு முள் சமானமாகலை. கடைசி தசையையும் அரியப் போகும் போது இந்திரன் தன் சுயரூபத்தைக் காட்டுறான். அப்படிப்பட்ட சிபிச்சக்கரவர்த்தி சோழ மன்னன். அந்த சோழ நாட்டுல ‘’ஆராய்ச்சி மணியை பசுமாடு அடிச்சதுக்கு காரணம் கண்டுபிடிச்சு தன் மகனை தேர்க்கால்ல இட்ட மனுநீதி சோழன் ஆகியோர் வாழ்ந்த ஊர்னு பூம்புகாரைச் சொல்றார் இளங்கோ. மனுநீதி சோழன் தலைநகர் திருவாரூர். இருந்தாலும் ஒரே நாடு ஒரே அரசாட்சிங்கறதால பூம்புகாரை மனுநீதி சோழன் ஊர்னு சொல்றார். 

இளங்கோ தப்பா சொன்னார் ; மாத்தி சொன்னார் அப்படின்னா ஒருத்தர் புரிஞ்சுகிட்டா அத யாரும் போய் தடுக்க முடியாது. அவர் என்ன உணர்வுல சொன்னார். எந்த உணர்வு அப்படி சொல்ல வச்சுதுன்னு நாம யோசிச்சு அதுல ஆழ்ந்து போய் பாத்தோம்ணா நாம நிறைய விஷயங்களை உணர்ந்துக்க முடியும். தெரிஞ்சுக்க முடியும். 

எனக்கு சிலப்பதிகாரம் தெரியும்ங்கறதால என் மனசு திருவாரூரையும் பூம்புகாரையும் ஒன்னா பாக்கும். அது இளங்கோ எனக்கு கொடுத்த கிஃப்ட்.’’

***

படைப்பு மனத்துக்கு படைப்பு மனங்களுக்கு சொல்லன்றி வேறு துணையில்லை. எல்லா படைப்பு மனங்களும் சொல்லின் தெய்வத்திடம் ஓயாமல் உரையாடுகின்றன. ஓயாத உரையாடலையே துதியென முன்வைக்கின்றன. சொல் அன்னை அதை அவ்விதமே ஏற்கவும் செய்கிறாள்.

தமிழ்ச் சூழலில் கா.சிவா வின் ‘’சரஸ்துதி’’ ஒரு முக்கியமான ஆக்கம். 

***  

பரஸ்பரம் ( ஹாஸ்யம்)

நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். சந்திப்புக்கு நேரம் முடிவு செய்தால் அந்த நேரத்துக்கு தாமதம் இன்றி சென்று விடுவது எனது வழக்கம். காலை 10 மணி என நேரம் முடிவாகியிருந்தது. 9.55க்கு அங்கிருந்தேன். நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். அவரது அலுவலக ஊழியர் ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். நண்பர் சாவகாசமாக 11 மணிக்கு வந்தார். அதன் பின் சில மணி நேரங்கள் நாங்கள் தொழில் நிமித்தமான சில விஷயங்களை விவாதித்தோம். அடுத்த நாளும் சந்திப்பதாக முடிவானது. நேரம் 10 மணி. நான் 9.55க்கு வந்தேன். அவர் 11 மணிக்கு. அன்றும் விவாதித்தோம். மூன்றாவது நாள் 10 மணி சந்திப்புக்கு நண்பர் எப்படியும் ஒரு மணி நேரம் தாமதம் ஆக்குவாறே என்று 11 மணிக்குச் சென்றேன். நீங்கள் குறித்த நேரத்தில் வருபவர் ஆயிற்றே என இன்று 10 மணிக்கே வந்து விட்டேன் என்று சொன்னார்.  

எந்த முடிவும் இல்லை (ஹாஸ்யம்)

 திருவாரூரில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரது தந்தை ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரி முதல்வர். கல்லூரி முதல்வராயிருந்து ஓய்வு பெற்றவர் என்பதால் அனுபவமிக்கவர் என ஒரு தனியார் பள்ளி அவரை பள்ளியின் ஆலோசகர் என்னும் பொறுப்பில் நியமித்து பள்ளி தொடர்பான எல்லா முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை அளித்தது. நண்பரின் தந்தைக்கு பள்ளிக்கு தினமும் சென்று வருவார். வருடங்கள் சில சென்றன. நண்பரின் தந்தை பொறுப்பில் இருக்கும் பள்ளியில் மாணவர் சேர்க்கை கணிசமாக குறைய ஆரம்பித்தது. நிர்வாகம், வரவு செலவு ஆகிய விஷயங்களில் துல்லியம் இருந்தது. ஆனால் மாணவர்கள் புதிதாக சேருவது மிகவும் குறைந்து போனது. வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கை 40 ஆக இருந்தது 25 ஆகக் குறைந்தது. அதனால் சில ஆசிரியர்களை பணியிலிருந்து அனுப்பி விட்டு இருக்கும் ஆசிரியர்களுக்கு கூடுதல் வகுப்புகளை அளிக்க ஆரம்பித்தனர்.  

நண்பர் என்னிடம் சொன்னார். ‘’அப்பா ! கவர்மெண்ட் காலேஜ்ல பிரின்சிபால் ஆக இருந்தவங்க. அங்க அட்மினிஸ்ட்ரேஷன் எப்படின்னா ஏதாவது ஒரு விஷயமோ பிரச்சனையோ கவனத்துக்கு வந்தா அது மேல எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்க. சும்மா அப்படியே போட்டு வச்சிடுவாங்க. எந்த முடிவும் எடுக்கறதில்லை என்பதே முடிவு. இந்த பிரைவேட் ஸ்கூல்லயும் ஃபோர்ஸ் ஆஃப் ஹேபிட் ல அந்த மாதிரியே முடிவெடுக்கறாங்க. அதனால பல விஷயம் தேங்கி நிக்குது. அதான் அட்மிஷன் குறையுது’’

நண்பரின் குடும்பத்தினரின் நண்பர் தந்தையின் வயதைக் காரணம் காட்டி பள்ளிப் பணியிலிருந்து விலகிடுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் அப்பணியிலிருந்து விலகினார். 

இப்போது அப்பள்ளியில் இன்னொரு ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரி முதல்வரே ஆலோசகராக இருக்கிறார் என நண்பர் சொன்னார். 

Monday, 23 March 2026

கிராமமும் தேசமும்

பாரத நிலம் பலவிதங்களிலும் தனித்துவமானது. அனாதி காலமாக பாரத நிலமெங்கும் மானுடர் சேர்ந்து வாழ்கின்றனர். நிலத்தை தெய்வமென நினைக்கும் தன்மை பாரத நாட்டுக்குரிய தனி இயல்பு ஆகும். நதியை கடலை நீர்நிலைகளை இறைமையாகக் காணும் தன்மை இந்த நாட்டுக்கு எப்போதும் இருந்திருக்கிறது.  

இன்றும் ஒவ்வொரு 50 கி.மீ தூரத்திலும் இன்றும் ஒவ்வொரு 100 கி.மீ தூரத்திலும் மக்களின் வாழ்க்கைமுறை சிறு சிறு மாற்றம் கொண்டு இருப்பதை நான் அறிய முடியும் ; உணர முடியும். இன்றும் சாமானிய இந்தியன் விவசாயியே. இன்றும் கிராமமே நாட்டின் அடிப்படை அலகு ஆகும். 

நாட்டின் ஒவ்வொரு கிராமமும் நாட்டில் இருந்த மன்னர்களை பேரரசர்களை கட்டுப்படுத்தும் இடத்தில் இருந்திருக்கின்றன என்பதை நாட்டின் வரலாற்றை நோக்குபவர்களால் அறிய முடியும். ஏனென்றால் நம் நாட்டின் உற்பத்தி என்பது விவசாய உற்பத்தியே. இன்றும் விவசாயம் கிராமத்து விவசாயிகளால் ஏறக்குறைய சேர்ந்தே செய்யப்படுகிறது. நாட்டின் உலகின் பொருளாதாரத்தை ஆய்வு செய்பவர்கள் பாரதத்தின் இத்தகைய தன்மையை சேர்த்து பொருளியலை அரசியலைக் கவனிப்பதில்லை ; அவ்விதம் கவனிப்பதற்கான பயிற்சி அவர்களுக்கு இல்லை. 

ஒரு கிராமவாசி ஒட்டு மொத்த கிராமத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவனே. அவன் தொழில்முறையிலும் வாழ்முறையிலும் ‘’தனியன்’’ இல்லை. ஒரு பெரும் கூட்டு வாழ்க்கையின் நுண் அலகே அவன். உலகில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை சுரண்டுவது என்பது மனிதர்கள் சமூகமாக வாழத் தொடங்கிய நாளிலிருந்து இருக்கிறது. மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில் சுரண்டல் குறைந்த அளவு இருப்பது நம் நாட்டில் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். உலகின் மிகப் பெரிய ஜனத்தொகை கொண்ட நாடாக அனாதி காலமாக இருப்பினும் அன்றும் இன்றும் ஒப்பீட்டளவில் நம் நாட்டில் சுரண்டல் குறைவு என்பது பொருளியலிலும் அரசியலிலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய விஷயங்கள். ஆய்வு செய்து மற்ற நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள். 

Sunday, 22 March 2026

வருவது உரைத்தல் (ஹாஸ்யம்)

காவிரி வடிநில பிராந்தியத்தில் ஒரு சிற்றூர் ஜோதிடத்துக்குப் பிரபலமானது. அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே அதிகம் செல்ல மாட்டார்கள். மாநிலத்தின் பிற பகுதியிலிருந்து நிறைய பேர் ஜோதிடம் பார்க்க வருவார்கள். எனது சென்னை நண்பர் ஒருவர் அங்கே ஜோதிடம் பார்த்திருக்கிறார். பின்னர் சில மாதங்கள் கழித்து நாங்கள் சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. தான் ஜோதிடம் பார்த்த அனுபவத்தை என்னிடம் சொன்னார். தனது கடந்த காலத்தில் நடந்த நான்கு சம்பவங்களை துல்லியமாகக் கூறினர் என வியந்து கூறினார். 
நான் கேட்டேன் : ‘’உங்கள் கடந்த கால வாழ்வில் நடந்த அந்த 4 சம்பவங்களும் தான் உங்களுக்கே தெரியுமே? அதை இன்னொருவர் சொல்லி நீங்கள் மீண்டும் கேட்டு அறிவது என்ன? ஜோதிடம் உங்கள் எதிர்காலம் குறித்து ஏதேனும் சொல்லி அது நடந்திருந்தால் அல்லவா நீங்கள் திருப்தி அடைய வேண்டும். நீங்கள் சென்றது உங்களுக்கு வர இருப்பதைக் கேட்கத்தானே?’’ என்றேன். நண்பர் யோசித்து ‘’ஆம்’’ என்றார்.     

Saturday, 21 March 2026

மாநிலத்தின் கல்வி நிலை

நண்பர்களுடன் ஒரு சினிமாவுக்கு செல்வதாக முடிவானது. சமீபத்தில் வெளியான ஹிந்தி திரைப்படம். பல இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியாகிறது. ஹிந்தி திரைப்படத்துக்கு ஆங்கில மொழியில் சப் டைட்டில் உண்டு. ஆறு பேர் செல்வதாக முடிவு செய்திருந்தோம். இணையத்தில் ஹிந்தி படமும் தமிழ் மொழிமாற்றப் படமும் ஒரே தேதியில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. எனினும் சில தொழில்நுட்ப விஷயங்களால் தமிழ் மொழிமாற்றப் படம் வெளியாவதில் சிறு தாமதம். டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம். இருப்பினும் காட்சி இல்லை என்பதால் தொகை ‘’ரீஃபண்ட்’’ ஆனது. 

’’இங்கிலீஷ் சப் டைட்டில் இருக்கிறதே ! ஹிந்தியில் படம் பார்க்கலாம்’’ என்றேன் நான். 

‘’இல்லை இல்லை ! வெயிட் செஞ்சு தமிழில் பார்ப்போம்’’ என்றார்கள். 

’’இங்கிலிஷ் சப் டைட்டில் இருக்கே! டயலாக் புரியும்.’’ மீண்டும் நான் வற்புறுத்தினேன். 

‘’ சப் டைட்டில் இருக்கற டைம்-குள்ள இங்கிலீஷ் டெக்ஸ்ட் படிச்சு புரிஞ்சுக்க முடியாது’’ அனைவருமே கூறினர்.

ஐந்து பேருமே பட்டதாரிகள். 1990,2000க்குப் பிறகு பிறந்தவர்கள். பள்ளிக் கல்வியை ஆங்கில மீடியம் மூலம் படித்தவர்கள். பட்டப்படிப்பும் ஆங்கில வழியில் படித்தவர்கள். இவர்கள் ஆங்கிலம் தான் ஒரு படத்தின் ‘’சப் டைட்டில்’’ படிக்க முடியாத நிலையில் இருக்கிறது என்றால் தினமும் ஒரு நாளிதழ் தமிழ் மொழியில் படிக்கும் வழக்கம் கூட அவர்களுக்கு இல்லை. 

எளிய சம்பவம் எனினும் அது அளித்த அதிர்ச்சி சாமானியமானது இல்லை. 

5 நண்பர்களையும் தமிழில் வந்ததும் பாருங்கள் எனக் கூறி விட்டு தனியாக சென்று படம் பார்த்தேன்.  

Friday, 20 March 2026

வருவாய் இலாகாவும் தபால் இலாகாவும்

பிரிட்டிஷ் இந்தியாவை ஆண்ட போது இந்தியக் குடிகளிடமிருந்து அவர்கள் வசூலித்த நிலவரியே அரசாங்கத்தின் முக்கிய வருவாய் மூலமாக இருந்தது. எனவே தான் பிரிட்டிஷார் நிலவரி வசூல் செய்யும் இலாகாவுக்கு வருவாய் இலாகா எனப் பெயரிட்டனர். நாட்டின் மொத்த வருவாயில் 84 சதவீதம் வருவாய் இலாகாவிலிருந்து அரசுக்குக் கிடைத்தது. நில அளவை செய்யும் செயினுக்கு ‘’குந்தர் செயின்’’ என்று பெயர். அதன் நீளம் 66 அடி ( 20.12 மீட்டர்). ‘’குந்தர் செயின்’’ கையாள சற்று சிரமமாக இருந்ததால் அதனைப் பாதியாக்கி 33 அடி நீளத்தை அளக்கும் வகையில் ஒரு செயினை உருவாக்கினர். அதனை ‘’ரெவின்யூ செயின்’’ என்று கூறுவர். இன்றும் நிலம் அளக்க பயன்படும் கருவியாக உள்ளது.  
குடிமக்களிடமிருந்து விவசாயிகளிடமிருந்து வரிவசூல் செய்து - கலெக்ட் செய்து - கொடுப்பவரே கலெக்டர். மாவட்ட ஆட்சியர் இன்றும் கலெக்டர் என அழைக்கப்படுவது அதனால் தான். 


வருவாய் இலாகாவுக்கு சமானமாக பிரிட்டிஷ் ஆட்சியில் முக்கியத்துவம் பெற்றிருந்த இலாகா தபால் இலாகா. நாட்டின் நிர்வாக வலைப்பின்னலுக்குத் தேவையான தகவல் பரிமாற்றத்தை தபால் இலாகாவே சாத்தியமாக்கியது. அரசின் தகவல் பரிமாற்றம் மட்டும் இன்றி சாமானிய பொதுமக்களின் தகவல் பரிமாற்றமும் தபால் இலாகாவால் சாத்தியமாயிற்று. 

எனக்கு சிறுவயது முதலே தபால் இலாகா மீது பெரும் ஆர்வம் உண்டு. ஒருவர் எழுதும் அஞ்சல் அட்டை பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து இன்னொருவர் கைக்கு மிகச் சரியாகச் சென்று சேர்கிறது என்பதை நான் ஒரு பேரற்புதம் என்று கருதுவேன். ஒரு தபால் எழுதி அனுப்புவது என்பது ஒரு கலை . ஒரு பயிற்சி. தபால் எழுதுபவர்கள் தங்கள் கையாலேயே அஞ்சல் உறையில் அனுப்புநர் பெறுநர் முகவரி எழுதி தங்கள் கையால் உறையில் பசையிட்டு ஒட்டி தங்கள் கையாலேயே தபால் பெட்டியில் இட விரும்புகின்றனர். 

இன்று ஒரு கிளை அஞ்சல் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். பணியில் இருந்தவர் ஓர் இளைஞர். வயது 25 இருக்கலாம். 2000க்குப் பின் பிறந்தவர் என்பதால் அவருக்கு ஒரு அஞ்சல் அட்டையோ அல்லது ‘’இன் லாண்ட் கடிதமோ’’ அல்லது ‘’அஞ்சல் உறை’’யில் கடிதமோ எழுதி அனுப்பி பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. அஞ்சல் உறை ஒன்றை அளித்தேன். உறையின் மேல் இடது பக்கம் எழுதப்படுவது ‘’அனுப்புநர்’’ முகவரி வலது பக்கம் எழுதப்படுவது ‘’பெறுநர்’’ முகவரி என்பது உலக வழமை. அதனால் நான் ‘’அனுப்புநர்’’ ‘’பெறுநர்’’ எனக் குறிப்பிடாமல் இரு முகவரிகளையும் எழுதியிருந்தேன். அஞ்சல் ஊழியரான இளைஞர் என்னிடம் ‘’சார்! இதுல எது ‘’ஃப்ரம்’’ எது ‘’டூ’’ என்று கேட்டார். விளக்கினேன். 

Thursday, 19 March 2026

கோடுகளும் சொற்களும்


 எனது பள்ளித் தோழனை வெகுநாட்கள் கழித்து சந்தித்தேன். அவனது குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தான். அப்போது சற்று நேரம் அளவளாவினோம். நான் எவருக்கும் ஏதேனும் பரிசளிக்க வேண்டும் என்று நினைத்தால் பரிசுப் பொருள் என என் மனதில் உதிப்பது புத்தகமே. அந்தக் குழந்தைக்கு ஒரு புத்தகத்தைப் பரிசளிக்க விரும்பினேன். ஜப்பான் மாங்கா காமிக்ஸ் ‘’புத்தர்’’ வரிசை நூலில் முதல் நூலை வரவழைத்து அதனை அளிக்க முடிவு செய்தேன். புத்தகம் இன்று கைக்கு வந்தது. அதனை வாசித்தேன். 

மாங்கா காமிக்ஸ் நூதனமானது. காணலும் வாசித்தலும் ஒருங்கே நிகழ்வது. அந்த நூலை சொற்களை வாசிக்காமல் ஓவியங்களை மட்டும் கண்டவாறு ஒரு வாசிப்பை நிகழ்த்த முடியும். அதில் இருக்கும் சொற்களை மட்டும் வாசித்தவாறு வேறு வாசிப்பை நிகழ்த்த முடியும். சொற்களையும் ஓவியங்களையும் சேர்த்து மற்றொரு வாசிப்பை நிகழ்த்திக் கொள்ள முடியும். 

வாசிப்பு என்பது சொல்லிருந்து சொற்களின் மூலம் அகத்தில் ஒரு காட்சியை உருவாக்கிக் கொள்வது. வாசிப்பு என்பது அதுவே. மாங்கா காமிக்ஸ் சொல்லுடன் சொல்லுக்கு இணையாகவே நம் கண்களுக்கு ஒரு அகச்சித்திரத்தையும் அளித்து விடுகிறது. சொல் உருவாக்கும் அகச்சித்திரமும் புத்தகத்தில் இருக்கும் சித்திரமும் இணைந்து நூதனமான அற்புதமான அனுபவம் ஒன்றை உருவாக்கிக் காட்டுகின்றன. 

100 பக்கங்களுக்கு மேல் மாங்கா காமிக்ஸ் அனுபவத்தில் மூழ்கியிருந்தேன். அதில் ஒரு காட்சி. சித்தார்த்தன் ஒரு வனத்தில் துறவி ஒருவரைச் சந்திக்கிறான். மரணத்தின் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை எந்த மனிதன் மூலம் அறிய முடியும் எனக் கேட்கிறான். அப்போது அந்தத் துறவி மரணத்தை மனிதன் மூலம் தான் அறிய முடியுமா என்ன எல்லா உயிர்களும் இறக்கின்றன; எல்லா உயிர்களுக்கும் இறப்பு பொதுவானது . இந்தக் காட்டில் இந்தக் கணத்தில் இறந்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பிராணிகளிடமிருந்து கூட நீ இறப்பை அறிய முடியும் என்கிறார். 

எனக்கு அந்த பகுதி பெரும் அகஎழுச்சியை உருவாக்கியது. 

ஒரு ஈசலிடமிருந்து நாம் இறப்பு குறித்து அறிந்திட முடியும் ; நாம் ஈசலின் அனுபவத்தை உணர முடிந்தால். சில வாரங்கள் மட்டுமே உயிர் வாழும் பட்டாம்பூச்சியிடமிருந்து நாம் இறப்பு குறித்து அறிய முடியும். சில மாதங்கள் வாழும் எறும்பிடமிருந்தும் நாம் மரணம் குறித்து அறிய முடியும். 

மனிதனுக்கு மனித சமூகத்துக்கு மரணம் குறித்த ஆர்வம் இல்லை. மனிதர்கள் மனித சமூகங்கள் மரணத்தை அஞ்சுகின்றன. மரணத்திலிருந்து விலகி ஓட நினைக்கின்றன. மனித குலம் உருவான நாளிலிருந்து இன்று வரை எந்த மனிதரும் மரணிக்க விரும்புவதில்லை ; எந்த மனிதரும் மரணிக்காமலும் இருந்ததில்லை. கோடானுகோடி மனிதர்களில் ஒருவரே சாவை உணர்கிறார் ; அறிகிறார். அவர்களே ஞானியர் ; யோகியர். 

சாவை அறிந்தவனால் மட்டுமே வாழ்வையும் அறிய முடியும்.  

Wednesday, 18 March 2026

இடதுசாரிகள் ஏற்படுத்திய பேரழிவு

எனக்கு 10 வயதான போது சோவியத் யூனியன் உடைந்தது. சிறுவனான நான் தமிழகச் சூழலிலும் இந்தியச் சூழலிலும் அதன் பின்னும் கம்யூனிசம் ஒரு வலுவான குரலாக ஒலிப்பதை ஆச்சர்யமாகப் பார்த்தேன்.  கம்யூனிஸ்டுகள் கருத்தியல் இதழியல் கலை நுண்கலைத் தளங்களில் நிரம்பியிருந்தனர். பெரும்பாலான கட்சிகள் சிறிய கட்சிகளிலிருந்து பெரிய கட்சி வரை கம்யூனிச சித்தாந்தத்தை ஆதரித்துப் பேசின. நாட்டின் பெரிய கட்சியாயிருந்த காங்கிரஸ் கட்சி கூட இடதுசாரி சிந்தனைகள் கொண்டவர்களால் நிரம்பியிருந்தது. நாட்டின் அதிகாரவர்க்கம் மற்றும் வங்கிகள் கம்யூனிச யூனியன்கள் கையில் இருந்தன. மார்க்ஸ் பார்த்த வகையில் உலகை உலகியலை மானுட சமூகங்களைப் பார்த்து அவற்றின் இயங்குமுறையைத் தீர்மானிக்க முயன்று கொண்டிருந்தனர் மார்க்ஸிஸ்டுகள். பத்திரிக்கையைத் திறந்தால் இடதுசாரிகள். கடைத்தெருவுக்குச் சென்றால் சிவப்புக் கொடி கட்டிய தெருமுனைக் கூட்டங்கள். மாதம் ஒருமுறையாவது நிகழும் பெரும் வேலைநிறுத்தங்கள். கம்யூனிசத்தை லட்சியவாதமாகவும் கம்யூனிஸ்டை லட்சியவாதியாகவும் காட்டும் முயற்சிகள். உல்ஃபா , மக்கள் யுத்தக் குழு, விடுதலைப் புலிகள் என பல பயங்கரவாத அமைப்புகளின் பயங்கரவாத செயல்பாடுகள். இவற்றை நான் நோக்கிக் கொண்டிருந்தேன். 

என்னுடைய 10 வயதில் நான் பாரதியார் கவிதைகளை எப்போதும் வாசித்துக் கொண்டிருப்பேன். பாரதி எனக்கு தேசமே தெய்வம் எனக் காட்டினான். பூரண ஞானம் பொலிந்த நன்னாடு ; புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு’’ என நம் நாட்டைக் குறித்துப் பாடினான். அந்த சொற்களின் உணர்ச்சியே என் சிந்தனைகளை வழிநடத்தியது. 

எனக்கு எப்போதுமே கம்யூனிசம் மீது ஈடுபாடு இருந்ததில்லை. கீழை மரபின் பொருளியல் சிந்தனைகளே என்னைக் கவர்ந்தன. மார்க்ஸ், கிராம்ஷி, இ எம் எஸ் நம்பூதிரிபாடு ஆகியோர் மீது எனக்கு பெருமதிப்பு உண்டு. அவர்கள் ஒரு விஷயத்தை நோக்கும் விதத்தை நான் அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் செய்வேன். அதன் பின் அதனை விரிவுபடுத்தியும் அதன் மற்ற கோணங்களை ஆராய்ந்தும் அந்த விஷயத்தை முன்னகர்த்தி சிந்திப்பேன். அரசியலுக்கும் பொருளியலுக்குமான நெருக்கமான உறவை முழுமையாகப் புரிந்து வைத்திருந்தவர் மகாத்மா காந்தி. அவரிடம் கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வளிக்கும் பொருளியல் வழிமுறைகளையும் வாழ்வியல் வழிமுறைகளையும் முன்வைக்கும் இயல்பு எப்போதும் இருக்கிறது. அரசு அதிகாரத்தின் எந்த பதவியிலும் அவர் இருந்தது இல்லை எனினும் அவர் தன் இயங்குமுறையாக அதனை கைக்கொண்டிருந்தார். ‘’கதர்’’ ஆடையை நம் தேசத்தவர் அணிய வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் கதர் இயக்கத்தை நடத்தியதை இதனுடன் இணைத்துப் புரிந்து கொள்ளலாம்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் முதல் இன்று வரை கருத்தியல் தளத்தில் இடதுசாரிகளின் ஆதிக்கம் அதிகம் இருந்தது ; இப்போதும் இருக்கிறது. லெனின் தலைமையில் சோவியத் யூனியன் உருவானதிலிருந்து அது உலகெங்கும் தனது உளவு அமைப்புகள் மூலம் எல்லா நாடுகளிலும் கம்யூனிச சித்தாந்தத்தைப் பரப்பியது.  

சோவியத் யூனியன் உலகெங்கும் கம்யூனிச சித்தாந்தத்தைப் பரப்பிக் கொண்டிருக்கையில் அதே காலத்தில் ஜோசஃப் ஸ்டாலின் ருஷ்ய நாட்டின் சிறு விவசாயிகள் கோடானுகோடி பேரைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தார். அவ்விதம் கோடானுகோடி எளிய விவசாயிகளான குடிமக்கள் கொன்றழிக்கப்பட்டனர் என்னும் விஷயமே 1990ம் ஆண்டில் தான் முழுமையாகத் தெரிய்வந்தது. சோவியத் யூனியனின் கம்யூனிச அதிபர் ஜோசஃப் ஸ்டாலினின் கொடுங்கோன்மை  முன் அடால்ஃப் ஹிட்லர் ஒரு சிறு புள்ளி மட்டுமே. இன்றும் கம்யூனிசம் என்றால் மனிதாபிமானம் என வெட்கமில்லாமல் கூறுகிறார்கள் கம்யூனிஸ்டுகள். 

சோவியத் யூனியன் உடைந்த பின் கம்யூனிசம் அஸ்தமித்து விட்டது. உலகில் எங்குமே அது பெரிய அரசியல் சக்தி அல்ல. இருப்பினும் நம் நாட்டில் கருத்தியல் தளத்தில் அதன் உயிர் இருக்கிறது. 

ஒரு எளிய சாமானியனின் வாழ்வுக்கு எவ்வகையிலேனும் உதவ முடியும் என்றால் அதுவே எனது பொருளியல் கொள்கை. ரூ.100 சம்பாதிக்கும் ஒரு விவசாயிக்கு அவன் விவசாய வருமானத்தை ரூ.150 ஆக்க முடியும் என்றால் அதுவே எனக்கு மாபெரும் மகிழ்ச்சி. நான் மனிதனை நம்புகிறேன் ; அவனைப் புரிந்து கொள்கிறேன். அவன் நல்லியல்பின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுகிறேன். சனாதனம், சமணம், பௌத்தம் ஆகிய கீழை மரபின் பொருளியல் சிந்தனைகள் ஒட்டு மொத்த மானுடத்துக்கும் வரலாற்றின் தொல்காலத்திலிருந்து வழிகாட்டி வருவதை உலகம் முழுமையாக அறியும் வண்ணம் செய்ய வேண்டும் என்பதே நம் தேசத்தவரின் நம் அனைவரின் கடமை.  

Tuesday, 17 March 2026

நீங்குதல்

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். 

-திருக்குறள்.  

யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான், அவன்
அப்பொருளால் துன்பம் எய்துதல் இலன்.

-பரிமேலழகர் உரை

***

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் எங்கள் குடும்ப நண்பர். நான் பிறப்பதற்கு முன்பிருந்தே எங்கள் குடும்ப நண்பர். அவர் ஓர் அலாதியான மனிதர். சீர்காழியைச் சேர்ந்தவர். அவருடைய பழைய வீடு சீர்காழியில் இருக்கிறது. பல ஆண்டுகளாகவே மிகவும் மதிப்பு மிக்க சொத்து. கோடிக்கணக்கான மதிப்பு கொண்டது. அதனை விற்பனை செய்தால் அவர் அந்த ஊரின் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருப்பார். எனக்குத் தெரிந்து அந்த சொத்தை 25 ஆண்டுகளாக விலைக்குக் கேட்கிறார்கள். நண்பர் எந்த பதிலும் சொல்வதில்லை. அவரது சிறப்பியல்பு என்னவெனில் யார் எதற்கு அழைத்தாலும் அவர்களுடன் சென்று விடுவார். திருமணம், மங்கள நிகழ்ச்சிகள், துக்கம் என அனைத்துக்கும் சென்று விடுவார். இவ்விதமான நிகழ்வுகளின் அனைத்து பணிகளும் அவருக்குத் தெரியும். மூன்று நான்கு நாட்கள் இருந்து எல்லா பணிகளையும் முடித்துக் கொடுத்து விட்டு தான் வருவார். ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்தார். வருடத்தில் 100 நாட்கள் கடையில் இருந்தால் மிகப் பெரிய விஷயம். ஆனால் கடைக்காரர் ஏன் அடிக்கடி விடுப்பு எடுக்கிறீர்கள் எனக் கேட்க மாட்டார். நண்பரின் சுபாவம் அவருக்குத் தெரியும். நான் பிறந்து மருத்துவமனையில் இருந்த தினத்திலேயே என்னைக்  காண வந்தவர்களில் ஒருவர். என்னை விட பல வயது பெரியவர். இருப்பினும் சிறு குழந்தையாயிருந்த நாளிலிருந்து அவரை அண்ணன் என்றே அழைப்பேன். 

அவரைப் பற்றி சொன்னால் நிறைய நிகழ்வுகள். இன்று எங்களுக்குள் நிகழ்ந்த உரையாடலை மட்டும் குறிப்பிடுகிறேன். 

***

இன்று காலை மரணத் தறுவாய் குறித்து எழுதியதும் மரணம் குறித்து நிறைய யோசித்துக் கொண்டிருந்தேன். காலை 10 மணி அளவில் ஒரு மரணச் செய்தி வந்தது. அங்கே செல்ல வேண்டும். இங்கிருந்து 2 மணி நேர பைக் பயணம். அண்ணனுக்கு ஃபோன் செய்தேன். 

‘’அண்ணன் ! ஊர்ல இருக்கீங்களா? ஒரு ‘’டெத்’’க்கு போகணும்’’

‘’இங்க தான் தம்பி இருக்கன்.’’

‘’நான் இன்னும் 1 மணி நேரத்துல கிளம்பிடுவேன். நீங்க எங்க வரீங்க?’’

‘’நான் பை பாஸ்-ல நிக்கறன். வந்துடுங்க’’

ஒரு ஆவணம் தயார் செய்ய வேண்டியிருந்தது. ஆவண எழுத்தரைப் பார்த்து தயார் செய்யச் சொல்லி பணியைத் துரிதப்படுத்தி விட்டு கிளம்பினேன்.

புறவழிச்சாலையில் சட்டநாதபுரம் திரும்பியதும் அண்ணனிடமிருந்து ஃபோன். நான் வழக்கமாக பிக் அப் செய்யும் இடத்துக்கு வந்திருந்தார். 

***

பங்குனி வெயில். 

நாங்கள் சென்று கொண்டேயிருந்தோம். 

’’அண்ணன்! நீங்க பிறந்த வருஷம் என்ன?’’

‘’தெரியல. ஞாபகம் இல்ல’’

ஞாபகம் இல்லையெனில் சற்று முயன்று ஞாபகத்துக்குக் கொண்டு வந்து விடலாம். தெரியவில்லை என்றால் சிரமம் தான். 

‘’அண்ணன் உங்க மேரேஜ் எந்த வருஷம் நடந்தது? அப்ப உங்களுக்கு என்ன வயசு?’’

‘’1996. அப்ப எனக்கு 35 வயசு’’

’’அப்ப நீங்க பிறந்த வருஷம் 1961. இப்ப உங்களுக்கு 65 வயசாகுது’’

கொள்ளிடத்தைத் தாண்டி விட்டோம். 

‘’அண்ணன் நீங்க சீர்காழி. நான் மாயரம். நம்மகிட்ட 10 வருஷம் முன்னாடி யாராவது நாம இப்படி நம்ம ஏரியால 4 வழிச் சாலைல போவோம்னு சொல்லியிருந்தா நாம நம்பியிருப்போமா?’’

‘’நம்பவே முடியாத விஷயம். உண்மையாயிருக்கு.’’

50 நிமிடங்களில் கொள்ளிடத்திலிருந்து கடலூர் சென்று விட்டோம். துக்க நிகழ்வில் இறுதி மரியாதை செலுத்தி விட்டு வெளியேறினோம். 

***

’’அண்ணன் ! இன்னைக்கு நியூஸ் பேப்பர்ல ஒன்னு படிச்சன். அதாவது சாவுக்கு ரொம்ப பக்கத்துல போன ஒருத்தருக்கு சாவுக்கு அப்புறம் நடக்க இருக்கற விஷயங்கள் தெரிஞ்சுருக்கு. அத அவர் ஒரு படமா வரைஞ்சிருக்கார்.’’

‘’அந்த படம் எப்படி இருக்கு’’

‘’பூமி சுத்திட்டு இருக்கு. மேலே சூரியன் இருக்கு. அதுக்கு நடுவுல ஒவ்வொரு உயரத்துல ஒவ்வொரு லைன் இருக்கு. அந்த லைன்ல நிறைய ஜீவன் லாம் நிக்குது. எல்லாத்துக்கும் மேல சூரியன்.’’

அண்னன் அந்த காட்சியை கற்பனை செஞ்சு பாத்தார். 

‘’நாம இப்ப டெத் வீட்டுக்கு போனோம்ல அந்த ஜீவனுக்கு என்ன நடந்ததுன்னு தெரியாது. உடம்பிலிருந்து நீங்கிடும். ஆனா உடம்பு பக்கத்துலய இருக்கும். ஏன்னா பல வருஷம் இருந்த இடம். அதனால என்ன செய்யணும்னா ஒருத்தர் இறந்திட்டா 6 மணி நேரத்துக்குள்ள அந்த சடலத்தை தகனம் செஞ்சிடணும். இனிமே அதுக்கு இங்க வேலை இல்ல. மெல்லவோ வேகமாவோ அது வானத்தை நோக்கி   போகணும். அது போய் சேர வேண்டிய இடம் அதுதான். கூட இருக்கறவங்க அந்த பயணத்துக்கு அந்த வழியனுப்பலுக்கு ஹெல்ப் பண்ணனும். பயணத்தை டிலே செய்துட கூடாது’’

அண்ணன் யோசித்தார். 

‘’பூமிக்கும் வானத்துக்கும் நடுவ கோடு கோடா இருக்குல்ல. அது ஒவ்வொன்னும் ஒவ்வொரு குரூப். இப்ப நீங்க இருக்கீங்க. உங்களுக்கு நிகழ்ச்சிகள்ல கலந்துக்கறது இண்ட்ரஸ்ட். அந்த மாதிரி இருப்பவங்க ஒரு குரூப் நிப்பாங்க. விளையாட்டுல இண்ட்ரஸ்ட் இருக்கறவங்க ஒரு குரூப்பா நிப்பாங்க. அமைதியா இருக்கணும்னு நினைக்கறவங்க ஒரு குரூப்பா இருப்பாங்க. ( அப்போது ஒரு டாஸ்மாக் கடை அங்கே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது) குடிபோதைல இண்ட்ரற்ஸ்ட் இருக்கறவங்க இன்னொரு குரூப்பா இருப்பாங்க. நாம அதில ஏதாவது ஒன்னுல போய் சேர்ந்திடுவோம். நாம எதை விரும்புறோமோ அதுல இருப்போம். நல்லதை விரும்பியிருந்தா நல்லதோட. கெட்டதை விரும்பியிருந்தா கெட்டதோட. திரும்ப பூமிக்கு வரணும். இன்னொரு ஜென்மம் வாழணும்’’

சொல்லும் போது எனக்கும் கேட்கும் போது அண்ணனுக்குமே சோர்வாக இருந்தது ; இன்னொரு ஜென்மத்தை நினைச்சா. 

‘’ஆனா சில ஜீவன்கள் மட்டுமே மேலே உயரத்துக்கு போயிடுறாங்க. உடல்லயிருந்து உயிர் நீங்கனதும் எங்கயும் நிக்காம வானத்துல போய்ட்டேயிருக்காங்க. சூரியனுக்கும் மேல கடவுள் இருக்கார். அவர்ட்ட போயிடுறாங்க. அவங்க திரும்ப பூமில ஒரு ஜீவனா கருப்பைல பிறக்க மாட்டாங்க. 100 கோடி மனுஷ ஜீவன்ல ஒருத்தருக்குத்தான் இது சாத்தியம் ஆகுது. ‘’

’’அடுத்த ஜென்மத்துல மனுஷங்க மனுஷங்களாதான் பிறப்பாங்களா?’’ அண்ணன் கேட்டார்.  

‘’தெரியாது அண்ணன் ! ( அங்கே ஒரு உடும்பு ஓடியது. ஒரு பசு மாடு நின்றது) . உடும்பா கூட பொறக்கலாம். பசு மாடா பொறக்கலாம். இந்த பசு மாடும் உடும்பும் அடுத்த ஜென்மத்துல மனுஷனா பொறக்கலாம்’’ 

இருவரும் மௌனமாகி விட்டோம். 

‘’காசில அண்ணன் சடலங்களை எடுத்துட்டு போகும் போது ‘’ ராம் நாம் சத் ஹை’’ அப்படின்னு சொல்லுவாங்க. அதாவது இந்த உலகத்துல ராம நாமம் மட்டும்தான் சத்தியம் அப்படின்னு அர்த்தம்’’

நம் நாட்டில் எவர் தான் ராமன் கதையை ஆர்வமாகக் கேட்காதவர் ? ஆர்வமாகச் சொல்லாதவர்?

‘’அடுத்த நாள் காலைல பட்டாபிஷேகம். முதல் நாள் ராத்திரி கூப்பிட்டு கைகேயி சொல்றாங்க. (கம்பன் பாடலைச் சொன்னேன்). 

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி தாங்க அருந் தவம் மேற்கொண்டு
பூழி வெங் கானம் நண்ணி புண்ணியத் துறைகள் ஆடி
ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள்.

உலகமே பெருசு. கடல் சூழ்ந்த உலகம் இன்னும் பெருசு. நீ சடாமுடி தரித்து நிறைய தவம் செஞ்சு காட்டுல இருந்துட்டு தூரத்தில இருக்கற புண்ணிய நதிகள்ல நீராடிட்டு 14 வருஷத்துக்கு அப்புறம் வா. இந்த 14 வருஷம் கேட்க பெருசா தெரிய போகுதுண்ணு ஏழிரண்டு ஆண்டுன்னு சொல்லப்படுது. ஏழு இரண்டு எவ்வளவு “

அண்னன் ‘’14’’ என்றார். 

‘’என்னடா இப்படி ஆயிடுச்சேன்னு ராமன் நினைச்சு மனசு வருத்தப்பட்டிருக்கலாம். எல்லா ராஜ்யத்தையும் சேர்ந்தவங்க வந்திருக்காங்க. முக்கியமான அரசு நிகழ்வு நடக்கலண்ணா நம்ம நாட்டைப் பத்தி தப்பா நினைப்பாங்களேன்னு நினைச்சுருக்கலாம். வசிஷ்டர் வார்த்தை தப்பா போய்டக் கூடாதேன்னு யோசிச்சிருக்கலாம். ஆனா அவர் எதையுமே நினைக்கல. அவர் மனசுல துளி கூட வருத்தம் இல்ல. கம்பன் சொல்றான் ; ‘’ராஜ்யம் இல்லை ; காட்டுக்குப் போ’’ன்னு சொன்னப்ப ராமன் மகன் ‘’அன்றலர்ந்த தாமரை முகத்தினன்’’ அப்படிங்கறான். அவன் முகம் 10 செகண்ட் முன்னாடி பூத்த தாமரைப்பூ மாதிரி இருந்துச்சாம். ‘’

இருவரும் மீண்டும் மௌனமாகி விட்டோம். 

’’ஒரு மனுஷன் அடையக்கூடிய உச்சபட்சமான வாழ்க்கை ராமனுடைய வாழ்க்கை. ராஜ்யத்தை இழந்தான். அத பெருசா நினைக்கல. காட்டுல கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்தான். அதயும் பெருசா நினைக்கல. மனைவியைப் பிரிஞ்சு வேதனைப்பட்டான். அவங்களை திரும்பக் கண்டடைஞ்சான். திரும்ப ராஜ்யம். திரும்ப பிரிவு. குழந்தைகள் கூட இருக்க முடியல. ஆனா ராமன் எல்லா துன்பத்தையும் ஏத்துக்கிட்டு செய்ய வேண்டியதை செஞ்சுட்டு இருந்தான். ராமன் கிட்ட ஒவ்வொரு மனுஷனுக்கும் படிக்க பாடம் இருக்கு. நாம பொருளை இழந்திருக்கோமோ முயற்சி செஞ்சா திரும்ப கிடைக்கும்ங்கறது ராமன் வாழ்க்கைல இருக்கு. ஒரு பின்னடைவா அத இல்லாம ஆக்க முடியும் இதுவும் ராமன் வாழ்க்கைல இருக்கு. அவன் வாழ்க்கைய பாத்து நாம நிறைய கத்துக்கலாம்’’

***

கொள்ளிடம் பாலத்தைத் தாண்டினோம். 

‘’ மண்ணில இருந்து வானத்துக்கு போற பயணத்துக்கு எதுவும் கூட வராது. நாம சேர்த்த செல்வம் நம்மோட சொந்த பந்தங்கள் எதுவும் வராது. அந்த பயணம் ரொம்ப தூரம்ங்கறது மட்டும்தான் தெரியுது. வேற என்ன சொல்றதுன்னு தெரியல’’

அண்ணனை சீர்காழியில் டிராப் செய்து விட்டு கிளம்பினேன். 


 

மண்ணும் விண்ணும்


சமீபத்தில் ஒரு பத்திரிக்கை செய்தியை வாசித்தேன். அதாவது, மரணத் தருவாய் வரை சென்று வந்த ஒருவர் தனது அனுபவத்தை ஒரு சித்திரமாகத் தீட்டியிருக்கிறார். அந்த படத்தை மேலே கொடுத்துள்ளேன். படத்தின் கீழே பூமி. மேலே சூரியன். ஜீவன்களின் சாரம் புவி மேற்பரப்பில் குவிந்து ஓர் அலைப்பரப்பின் கீழ் வெளியில் இருக்கின்றன. அந்த அலைப்பரப்பின் மேல் அடுக்குகளில் வேறுவிதமான ஜீவ சாரங்கள் இருக்கின்றன. சூரியன் சுடர்ந்து கொண்டிருக்கிறது. பூமி சுழன்று கொண்டிருக்கிறது. மரணத் தருவாயை அடைந்தவர் இவ்விதமான காட்சியை உணர்ந்திருக்கிறார். அதனை சித்திரமாக வரைந்திருக்கிறார். 

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். என்னை விட 5 வயது இளையவர். அவர் தந்தை ஒரு விவசாயி. அவரது சகோதரர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள்.இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவரது கல்லூரி நாட்களில் அவரை நான் சந்தித்திருக்கிறேன். பட்டப்படிப்பு முடித்ததும் அவர் வெளிநாடு சென்று விட்டார். அதனால் பல வருடங்கள் பார்க்க முடியவில்லை. ஒரு நாள் தற்செயலாக ஊரின் கடைத்தெருவில் சந்தித்தோம். அவருக்கு என்னைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. வெகுநாள் கழித்து சந்தித்ததைக் கொண்டாடும் விதமாக ஐஸ்கிரீம் சாப்பிடச் சென்றோம். அவர் அப்போது உடல் மிகவும் சோர்வாக இருந்தார். ஏன் சோர்வு தென்படுகிறது என்று கேட்டேன். பெங்களூரில் 30 நாள் முன்பு தனக்கு நடந்ததை என்னிடம் கூறினார். வெளிநாட்டில் வேலை பார்த்த அவர் பின்னர் பெங்களூரில் வீடு வாங்கிக் கொண்டு வந்து குடியேறி விட்டார். அப்போது அவருக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. 

பெங்களூரில் ஒரு ஹோட்டலுக்கு உணவருந்தச் சென்ற அவரிடம் ‘’மெனு’’ கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ‘’கார்லிக் ஜூஸ்’’ என இருந்திருக்கிறது. அதனை ஆர்டர் செய்து விட்டார். ஜூஸ் வந்திருக்கிறது. அதனைக் குடித்து விட்டார். குடிக்கும் போது அவர் நாவுக்கு உகந்த ருசியாகவே இருந்திருக்கிறது. விருப்பத்துடன் குடித்திருக்கிறார். குடித்து முடித்த பின் அவர் ஏதோ ஒரு மாறுபாட்டை உணர்ந்திருக்கிறார். அதனை இன்னதென்று சொல்ல முடியவில்லை என்றார். ஜூஸுக்கான கட்டணத்தை செலுத்தி விட்டு தனது ஃபிளாட்டுக்கு வந்து விட்டார். 

அவர் உடல் எப்போதும் இருப்பதைப் போல் இல்லாமல் கொஞ்சம் மாறுபாடு அடைவதைப் போல் தோன்றியிருக்கிறது. மிகவும் இலகுவாக ஆவதைப் போல தோன்றியிருக்கிறது. உடல் என்ற ஒன்றே இல்லாமல் இருப்பதைப் போல உணர்ந்திருக்கிறார். படுக்கையில் படுத்து விட்டார். நிமிடங்கள் மெல்ல கடந்திருக்கின்றன. உடலற்ற நிலையில் தான் இருப்பதாக அவருக்குத் தோன்றியிருக்கிறது. ‘’கார்லிக் ஜூஸ்’’ அருந்தியதன் விளைவு என அவர் எண்ணவில்லை. திடீரென மூச்சு வேகமாக இயங்கத் தொடங்கியிருக்கிறது. மூச்சு மட்டுமே இருப்பதாக உணர்ந்திருக்கிறார். மூச்சு மட்டுமே இருந்திருக்கிறது . வேறு ஏதும் இல்லை. மூச்சு உள்ளே செல்கிறது ; வெளியேறுகிறது. அதனை மட்டுமே கவனித்திருக்கிறார். வேறு எதிலும் கவனம் இல்லை. மிக வேகமாக மூச்சு படபடக்கத் தொடங்கியிருக்கிறது. அவர் அதன் லயத்தில் அதனுடன் ஆழ்ந்து விட்டார். பல மணி நேரங்கள் இவ்வாறே சென்றிருக்கின்றன. அவர் தான் மயக்கம் அடையவில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறார். அப்போது அவருக்கு சில காட்சிகள் தென்பட்டிருக்கின்றன. அவர் உடல் பூமியில் கிடப்பதாகவும் மேலே சூரியன் ஒளி விட்டுக் கொண்டிருப்பதாகவும் தான் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருப்பதாகவும் சூரியனுக்கு அருகில் இருந்தாலும் வெம்மையாக இல்லை ; குளிரான சூழ்நிலையாகவே இருந்தது என்றும் சொன்னார். தான் அந்த நிலையை விரும்பியதாகவும் அப்படியே அங்கேயே இருந்து விடலாம் எனத் தோன்றியதாகவும் கூறினார். அங்கே துயரம் இல்லை ; வலி இல்லை ; அல்லல் இல்லை. 

அவர் கார்லிக் ஜூஸ் குடித்த போது நேரம் மாலை 6.30. தனது ஃபிளாட்டில் படுத்த போது நேரம் இரவு 7.15. நிச்சயமாகத் தான் தூங்கவும் இல்லை ; மயக்கமடையவும் இல்லை என உறுதியாக மீண்டும் மீண்டும் கூறினார். அதிகாலை 4 மணிக்கு அவர் சூழலில் ( ஹாஸ்யம் : அப்படித்தானே சொல்ல முடியும் ? உடல் பிரக்ஞை இல்லை. மனமும் இல்லை ; உடலும் மனமும் மூச்சில் லயித்து விட்டன) சிறு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அது ஒரு சுருதிபேதம் என அவர் கருதுகிறார். (ஹாஸ்யம் :அவர் அதை விரும்பவில்லை.) எனினும் சூரியனையும் அண்ட வெளியையும் விட்டு விட்டு தன் உடல் பக்கத்தில் அவரது பிரக்ஞை வந்து விட்டது. உடலில் சிறு அசைவு ஏற்பட்டு மனம் தன் வழமையான இயக்கத்துக்கு வந்திருக்கிறது. பெருவெளியில் உலவி வந்ததால் அவர் எழுந்து அமர்ந்து ஃபிளாட்டைப் பூட்டி விட்டு கீழே சென்று அங்கே இருந்த அபார்ட்மெண்ட் காவலரிடம் ஒரு ஆட்டோ பிடித்து வருமாறு கூறியிருக்கிறார். தெரு முக்கில் அந்த நேரத்தில் ஆட்டோ இருந்திருக்கிறது. ஆட்டோ பிடித்து அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்திருக்கிறார். இதயம் மிக படபடப்பாக இருப்பதை நாடி பிடித்துப் பார்த்தே அறிந்திருக்கிறார்கள். மூச்சு மிகவும் படபடப்பாக இருந்திருக்கிறது. ( ஹாஸ்யம் : நான் அவரிடம் கேட்டேன் :   இரவு 7.15க்கு மூச்சுத்திணறல் இருந்ததா என்று கேட்டேன். அவருக்கு சொல்லத் தெரியவில்லை. அவர் தான் ஒரு லயத்தை 7.15 லிருந்தே உணர்ந்ததாகச் சொன்னார். ‘’லயம்’’ என்பது என்னுடைய வார்த்தை. அவர் அவ்விதம் சொல்ல ’’அதை என்ன வார்த்தையில் சொல்வது என்று தெரியவில்லை’’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்). மருத்துவமனையில் அப்போது இருந்த ’’டியூட்டி டாக்டர்’’  இரவு என்ன சாப்பிட்டீர்கள் எனக் கேட்டிருக்கிறார்.நண்பர் கார்லிக் ஜூஸ் எனக் கூறியிருக்கிறார். வேறு திட உணவு ஏதும் சாப்பிட்டீர்களா ? குமட்டல் இருந்ததா ? வாந்தி எடுத்தீர்களா? எனக் கேட்டிருக்கிறார்கள். எதுவும் இல்லை. ‘’டியூட்டி டாக்டர்’’ இதயம் படபடப்பதும் மூச்சு மிக அதிகமாகத் திணருவதும் இருப்பதால் வாயின் வழியாக ஒரு டியூபைச் செலுத்தி குடலில் இருக்கும் வஸ்துக்களை வெளியேற்றி விட்டனர். வெளியேறிய பின் சில மணி நேரங்கள் மூச்சுத் திணறல் இருந்திருக்கிறது. அப்போது நண்பர் அசௌகர்யத்தையும் வலியையும் உணர்ந்திருக்கிறார். ( ஹாஸ்யம் : அப்போது நான் கேட்டேன். மருத்துவமனையில் இருந்த போது பூமி, சூரியன் ஆகிய உணர்வு இருந்ததா என சீரியஸாகவே கேட்டேன். இல்லை அப்போது வலி மட்டுமே இருந்தது. வீட்டு மனிதர்கள் நினைவு இருந்தது என்றார்). அதன் பின்னர் மயக்கமாகி விட்டார். மயக்கத்தில் எந்த நினைவும் இல்லை. மெடிக்கல் உபகரணங்கள் அவர் மூச்சு இயல்பாக இருப்பதையும் அவர் இதயம் இயல்பாக இயங்குவதையும் காட்டியிருக்கிறது. மருத்துவர்கள் அவரை எழுப்பியிருக்கின்றனர். சீனியர் மருத்துவர்கள் வந்திருகின்றனர். ‘’டியூட்டி டாக்டர்’’ சற்று முரட்டி வைத்தியம் தான் செய்திருக்கிறார் ; இருந்தாலும் அவ்விதம் செய்யப்படவில்லை எனில் நோயாளியின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாது. இது ஒரு வித்தியாசமான சூழ்நிலை. உணவு ஒவ்வாமை ஏற்பட்டால் குமட்டலும் வாந்தியும் இருக்கும் ; உணவு ஒவ்வாமை குடலைத்தான் பாதிக்கும் ; ஆனால் இவர் விஷயத்தில் நுரையீரலை பாதித்திருக்கிறது. எனினும் நுரையீரலில் ஸ்கேன் எந்த மாறுதலையும் காட்டவில்லை. நோயாளி எவ்விதம் நோயுற்றார் என்பதும் எவ்விதம் உயிர் பிழைத்தார் என்பதும் கண்டறியப்படாததாகவே இருக்கிறது ‘’ எனக் கூறியிருக்கின்றனர்.   

ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்த பின்னர் ‘’சூரியனுக்குப் பக்கத்துல போனேன்’’ என்றார். 

ஊருக்குப் பக்கத்தில் ஒரு சில்லறை சிமெண்ட் வியாபாரி இருக்கிறார். அவரிடம் எப்போதும் 10 மூட்டை சிமெண்ட் இருக்கும். எவரும் அவரசரமாக ஒரு மூட்டை இரண்டு மூட்டை வேண்டும் என்றால் அவரிடம் வாங்குவார்கள். அவரை ஒரு நாகப்பாம்பு கடித்து விட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். பின்னர் உடல்நலம் மீண்டு வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவரைக் கண்டு நலம் விசாரிக்கச் சென்றேன். ‘’சார் ! மூச்சு மட்டும் தான் ஃபீல் பண்ணன். சூரியனுக்குப் பக்கத்துல போய்ட்டன்’’ என்றார். 

யோகா வகுப்புகளில் ‘’மூச்சை கவனியுங்கள்’’ என்பார்கள். சாமானியமாக மனிதர்களுக்கு மூச்சு என ஒன்று இருக்கிறது எனும் கவனம் கிடையாது. உடல் இருப்பதை அறிவார்கள். மனம் இருப்பதை அறிவார்கள். அந்த இரண்டும் அவர்கள் நேரடி அனுபவத்தில் இருக்கும். மூச்சு சாமானியமாக கவனத்துக்கு வராது. ஏனென்றால் மூச்சு சூட்சுமமானது. அதனைக் கவனித்தல் என்பது அபூர்வம். விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள், தீவிரமான உடல் உழைப்பு கொடுப்பவர்கள், நீச்சல் அடிப்பவர்கள் ஆகியோருக்கு ‘’மூச்சைக் கவனித்தல்’’ என்னும் தன்மை இயல்பாக இருக்கும். உடலைக் கடுமையாகப் பயிற்றுவிப்பதன் மூலம் மூச்சு அடையும் மேனிலையை அவர்கள் அனுபவபூர்வமாக உணர்வார்கள். அவர்களிடம் அதனை வார்த்தையாக சொல்லுங்கள் என்று சொன்னால் அப்படி ஒன்று இருக்கிறது என்பது கூட அவர்களுக்குத் தெரிந்திருக்காது. அவர்கள் வாழ்க்கை அனுபவத்துடன் அது வேறுபடுத்த முடியாததாக இருக்கும். 

ஹாஸ்யம் : சமீபத்தில் சாவின் பக்கத்தில் சென்று வந்து ஓவியம் வரைந்தவரும் ‘’கார்லிக் ஜூஸ்’’ குடித்த எனது நண்பரும் நாகப்பாம்பு கடித்த சிமெண்ட் வியாபாரியும் என மூவருமே சூரியனுக்குப் பக்கத்தில் போனதாகவே சொல்கிறார்கள். 
 

Monday, 16 March 2026

கிழக்கும் மேற்கும் (ஹாஸ்யம்)

எனது நண்பரின் வீடு மிகப் பெரியது. 4 ஏக்கர் பரப்பு கொண்டது. அதன் மையப்பகுதியில் 2000 சதுர அடி கொண்ட கட்டிடம் உள்ளது. 4 ஏக்கர் பரப்பையும் சுற்றிச் சுற்றுச்சுவர். 1990ம் காலகட்டத்தைச் சேர்ந்த பெரிய இரும்பு கேட். உள்ளே கார் பார்க்கிங் செய்ய பரந்த பரப்பு. வேப்ப மரத்தின் அடியில் நான்கு சிமெண்ட் பெஞ்ச். அதில் 20 பேர் அமர்ந்து சம்பாஷிக்க முடியும்.  வீட்டுக்கு மிகப் பெரிய வாசல். அதில் கோலமிடப்பட்டு எப்போதும் இரு குத்து விளக்குகள் சுடர் விட்டுக் கொண்டிருக்கும். உள்ளே நுழைந்ததும் இடது புறம் அலுவலக அறை. அது வீட்டின் புழக்கத்துடன் இணைந்ததாக இருக்காது . தனியாக இருக்கும். 

வீடு எந்த அளவு சிறியதோ அந்த அளவு அதன் உள்ளே எத்தனை பேர் இருக்கிறார்கள் என அறிய முடியும். அளவில் பெரிதாகிக் கொண்டே போனால் உள்ளே இருப்பவர்களை நாம் அறிய முடியாது. 

எனது நண்பரின் வீடு அமைந்திருப்பது ஒரு கிராமத்தில். 

எனக்கு ஒரு வழக்கம் உண்டு. ஒரு வீட்டுக்குச் சென்றால் அந்த வீட்டிலிருப்பவர்கள் அனுமதி இல்லாமல் அவர்கள் வீட்டுக்குள் செல்ல மாட்டேன். வீட்டு வாசலில் இருந்து ‘’அம்மா’’ ‘’அம்மா’’ என்று கூப்பிடுவேன். அவர்கள் சத்தம் கேட்டு வந்தால் மட்டுமே உள்நுழைவேன். அது வரை வாசல் தான். எனது அனுபவம் தமிழகத்தில் 100க்கு 99 சதவீத இல்லங்களில் அழைப்பு மணிகள் வேலை செய்வதில்லை. வீடு கட்டும் போது ஒரு ஆர்வத்தில் சத்தம் பெரிதாக இருக்கும் விதமாக அழைப்பு மணி ஒலியை அமைத்து விடுவார்கள். கொஞ்ச நாட்களில் ‘’கண்ட்ரோல் சுவிட்ச்’’ ஆஃப் செய்து வைத்து விடுவார்கள். இப்போது கூரியர்காரர்கள் கூட வாசலில் நின்று அழைப்பதில்லை. அலைபேசியில் அழைக்கிறார்கள். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளுக்காக கிராமம் கிராமமாக சென்று ஒவ்வொரு வீட்டுக்கும் நேராக சென்றிருக்கிறேன். அதாவது ஒவ்வொரு வீட்டிலும் ‘’அம்மா’’ ‘’அம்மா’’ என அழைத்திருக்கிறேன். பல வீடுகளில் வெளியில் இருக்கும் எனக்கு உள்ளே டி.வி ஓடிக் கொண்டிருக்கும் ஒலி கேட்கும். உச்ச ஸ்தாயியில் சீரியல் ஓடிக் கொண்டிருக்கும். அதைத் தாண்டி என் குரல் ஒலிக்க வேண்டும். 

தமிழக இல்லங்களில் எவரும் ஒருவர் வாசலில் தான் நின்று அழைக்க வேண்டும் என எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் மேலை நாடுகளிலும் அமெரிக்காவிலும் ஒருவர் வசிப்பிடத்துக்குள் இன்னொருவர் அனுமதியின்றி நுழையக்கூடாது என்னும் நெறி உண்டு. என் மனதில் அந்த மேலை நெறி பதிந்து விட்டது. 

நான் நண்பரின் வீட்டிற்கு சற்று வெளிப்பக்கத்தில் இருக்கும் அலுவலக அறையில் அமர்ந்து கொள்வேன். இருப்பினும் நான் அங்கே அமர்ந்திருப்பது எவருக்கும் தெரியாது. பலர் மிக சகஜமாக அவர் வீட்டுக்கு செல்வதும் வருவதுமாக இருப்பார்கள். உறவினர்கள், அண்டை வீட்டுக் காரர்கள், பணியாளர்கள் என. என்னை அறிந்தவர்கள் என அவர்களில் எவரும் இருந்தால் வீட்டின் உரிமையாளர்களுக்குத் தகவல் தெரிவிப்பார்கள். அறியாதவர்கள் என்னை கவனத்துக்குள் கொண்டு வரவே மாட்டார்கள். 

மக்கள் தொடர்பில் தேர்ச்சி உள்ளவன் எனினும் எனக்குள்ளும் சில சிறு தயக்கங்கள் இருக்கும். ‘’அலுவலக அறையில் இருக்கிறேன்’’ என நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்புவேன். பெரிய அலுவலக அறை இருந்தாலும் நண்பர் மாடியில் இருக்கும் ஒரு அறையையே தன் அலுவலக வேலைகளுக்கு பயன்படுத்துவார். வாசலில் இருக்கும் அறைக்கு யாராவது வந்து கொண்டேயிருப்பதால் தனது பணியைச் செய்ய முடியவில்லை என. 

ஒவ்வொரு முறை செல்லும் போதும் பலர் இருக்கும் அந்த வீட்டில் என்னை அறிந்தவர் எவரும் இருந்தால் இயல்பாக இருக்கும் என நினைப்பேன்.  

என்னை மன்னித்து விடுங்கள் (ஹாஸ்யம்)

சென்னையில் வசிக்கும் ஒருவரை ஊரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது சொத்து ஒன்றை விற்பனை செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். நான் முயற்சிகள் மேற்கொண்டேன். எனினும் விற்பனை நிகழவில்லை. மதிப்பு மிக்க சொத்துதான் என்றாலும் விற்பனை கை கூடவில்லை. இவ்வாறான நிகழ்வுகளில் அதனை அப்படியே நிலுவையில் வைத்து விட்டு அடுத்த வேலைகளைப் பார்க்கலாம். அதற்கென ஒரு நேரம் அமையும் என காத்திருக்க வேண்டும்.  

நாளாக நாளாக அந்த சொத்து குறித்த விஷயமே என் நினைவில் இல்லை. அதன் அகல நீளங்கள், பரப்பளவு, விலை எதுவுமே. அமைவிடம் மட்டும் நினைவில் இருந்தது. 

அவர் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டார். என்னால் ஃபோன் எடுத்து பேச முடியவில்லை. பலமுறை அழைத்தார். ஒருமுறை கூட என்னால் ஃபோன் எடுக்க முடியவில்லை. எனக்கு மனதில் வருத்தமாக இருந்தது. அவருக்கு ‘’நாளை அழைக்கிறேன்’’ என குறுஞ்செய்தி அனுப்பினேன். இரண்டு நாள் கழித்து அவரிடம் பேசினேன். அவரிடம் சொன்னதைக் கூறும் முன் அலைபேசி தொடர்பாக எனது அபிப்ராயங்களைத் தெரிவித்து விடுகிறேன். அதனை எவ்விதம் காண்கிறேன் அணுகுகிறேன் என்பதை தெரிவிக்கிறேன். 

(1) அலைபேசி எனப்படும் அதாவது எனது அலைபேசி எனப்படும் உபகரணம் என்னுடையது. அதை நான் ’’சைலண்ட்’’ ஆக வைத்திருக்க முடியும். சுவிட்ச் ஆஃப் செய்ய முடியும். எனது எண் 100 பேரிடம் இருக்கிறது என்பதற்காக அவர்கள் அழைத்ததும் அந்த அழைப்பை ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவானால் அந்த அலைபேசி எனது அலைபேசியாக இராது. அந்த 100 பேரின் அலைபேசியாக ஆகி விடும் அல்லவா? உலகில் 700 கோடி மக்கள் இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் எனது எண் தெரிய இன்றைய இணைய வசதி மூலம் வாய்ப்பு உண்டு. அவ்வாறெனில் என் அலைபேசி என்னைத் தவிர மற்ற 700 கோடி பேரின் அலைபேசியாக ஆகி விடும் அல்லவா? ஒவ்வொருவரும் என்னை அழைத்தால் என்னை அழைக்கும் எல்லா அழைப்புகளையும் நான் ஏற்றால் நான் இன்னும் 13,000 ஆண்டுகள் வாழ வேண்டும். அந்த 13,000 ஆண்டுகளும் ஊன் உறக்கம் இன்றி ஃபோன் பேசிக் கொண்டு தான் இருக்க வேண்டும். ஒரு ஃபோனுக்கு ஒரு நிமிடம் என்று பார்த்த கணக்கு இது. 

(2) அடியேன் படைப்பூக்க மனநிலை கொண்டவன். என் மனம் படைப்பூக்கமானது. அதனைப் பராமரிக்க வேண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனில் அலைபேசி அழைப்புக்கு என் மனத்தை செலுத்திக் கொண்டிருக்க முடியாது. 

(3) எனது வணிகம் சார்ந்து எனக்கு அலைபேசி தகவல் தொடர்பில் உதவுகிறது. எந்த அளவு தேவையோ அந்த அளவு எனக்கு போதும் என நான் எண்ணுகிறேன். 

(4) அலைபேசி எனக்குத் தொந்தரவு தான். ஜி.எஸ்.எம் ஃபோனே எனக்குத் தொந்தரவு தான். என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை. வாங்கப் போவதும் இல்லை. 

(5) ’’இரு கோடுகள்’’ தத்துவம் என ஒன்று உண்டு. வரையப்பட்ட ஒரு கோட்டை அழிக்காமல் சிறிய கோடாக்க வேண்டும் என்றால் அதன் பக்கத்தில் முன்னர் இருந்த கோட்டை விட அளவில் பெரியதாக இன்னொரு கோட்டை வரைய வேண்டும். அப்போது முதல் கோடு சிறியதாகி விடும். 

அந்தத் தத்துவத்தின் அடிப்படையில் இப்போது என்னிடம் இருக்கும் அலைபேசியை ரீ-சார்ஜ் டாப் அப் செய்யாமல் இருந்து விடப் போகிறேன். என்னிடம் அலைபேசியே இல்லை எனும் போது நான் அலைபேசி அழைப்புகளை ஏற்பதில்லை என்னும் புகார் இருக்காது.  

நான் பேசிய நண்பரிடம் ,’’சார் ! நான் ஃபோனை ரொம்ப மினிமமா யூஸ் பண்றவன். நான் ஃபோன் எடுக்கலண்ணு வருத்தப்படாதீங்க. என்னை மன்னித்து விடுங்கள். செல்ஃபோன்ல எனக்கு கால் பண்ணாதீங்க. எஸ் எம் எஸ் அனுப்புங்க. மெஸேஜ் பாத்ததும் நான் கால் பண்றன்’’ என்றேன்.  

Sunday, 15 March 2026

நம்பிக்கைக்கு உரியவர் (ஹாஸ்யம்)

40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. என் நண்பர் இதனை என்னிடம் கூறினார். 

பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளிடம் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்வது வழக்கம். பெரிய கட்சிகள் பெரிய அளவில் கையில் பணம் வைத்திருக்கும். சிறிய கட்சிகளிடம் அந்த அளவுக்கு பணம் இருக்காது. எனவே தேர்தல் செலவுக்கு கூட்டணியில் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையில் அடிப்படையில் தொகுதிக்கு இவ்வளவு என தொகையை அளிப்பார்கள். இந்த தொகை அளிக்கப்படுவதும் பெறப்படுவதும் கமுக்கமாக நடைபெற வேண்டிய செயல்கள். எனது நண்பர் சிறிய கட்சியின் தலைமைக்கு நெருக்கமானவர். ஆகவே தலைமை அவரை அவருடைய வாகனத்தில் பெரிய கட்சியின் அலுவலகத்துக்குச் சென்று அவர்கள் அளிக்கும் தொகையை பெங்களூரில் இருக்கும் வணிக நிறுவனம் ஒன்றில் அளித்து விடுமாறும் அவர்கள் அத்தொகையை தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொண்டு சிறிய கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளரிடம் அந்தந்த தொகுதிகளில் பட்டுவாடா செய்து விடுவார்கள் என்றும் ஏற்பாடு. ‘’ஹவாலா’’ வழிமுறை போல. முக்கியமான செயல் என்பதால் தனியராக செல்வது உகந்த வழிமுறை அல்ல என்பதால் இந்த செயல்பாட்டில் உடனிருக்க இன்னொருவரையும் கூட்டிச் செல்ல கூறியிருக்கிறது தலைமை. நண்பர் இந்த விஷயங்களுக்கு நன்றாகப் பழகியவர். எனவே சென்னையில் இருக்கும் அவரது வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் பெரிய கட்சியின் தலைமை அலுவலகத்தில் பணம் நிரம்பிய சூட்கேஸை பெற்றுக் கொண்டு சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் பெங்களூர் நோக்கி பறந்து கொண்டிருக்கிறார். எத்தனை சீக்கிரம் வேலை முடிகிறதோ அத்தனை சீக்கிரம் நிம்மதி என வாகனத்தை எவ்வளவு வேகமாக இயக்க முடியுமோ அவ்வளவு வேகமாக இயக்கியிருக்கிறார். வண்டி இன்னும் பூவிருந்தவல்லியைத் தாண்டவில்லை. 

நண்பரின் உடனிருந்தவர் ‘’அண்ணன்’’ என அழைத்திருக்கிறார். 

வாகன இயக்கத்தில் மும்முரமாக இருந்த நண்பர் சாலையிலிருந்து கண்களை அகற்றாமல் ‘’என்னப்பா’’ என்றார். 

‘’அண்ணன் ! சூட்கேஸ்-ல எவ்வளவு பணம் இருக்கும்?’’

நண்பர் மௌனமாக இருந்திருக்கிறார். 

‘’எங்கேயாவது போய்டுவோம்ணன். இந்த பணத்தை நீங்களும் நானும் பாதிப்பாதி எடுத்துப்போம். அஞ்சு பத்து வருஷம் எங்காவது ஃபாரின் போய்டுவோம். அப்புறமா திரும்ப வந்தா யாரும் நம்மள ஒன்னும் செய்ய முடியாது’’

‘’உலகத்துல நாம எங்க இருந்தாலும் தேடி வந்துடுவாங்க. கொஞ்சம் அமைதியா இரு.’’ எனக் கூறி விட்டு எப்போது பெங்களூர் சென்று சேருவோம் என சென்று சேர்ந்திருக்கிறார். 

நண்பர் என்னிடம் சொன்னார். ‘’கட்சில தொண்டர்கள் ஆயிரக்கணக்கா இருக்காங்க. தலைமை நம்பிக்கைக்கு உரியவர்னு யாரை ரொம்ப அதிகமா நம்புதோ அந்த ஆளே இப்படி. அப்ப மத்தவங்கலாம் எப்படின்னு யோசிச்சுப் பார்த்தால்’’ என்றார்.    

எந்தத் திறனும் இல்லாதவன் (ஹாஸ்யம்)

 ஒரு நாட்டில் ஒரு ராஜாங்கம் இருந்தது.அந்த ராஜ்யத்தின் ராஜனுக்கு ராணி மீது கொள்ளைப் பிரியம். அவள் மீது ஒரு துரும்பு விழுந்தால் கூட ராஜன் துடிதுடித்துப் போய்விடுவான். 

அந்த ராஜாங்கத்தில் ஒரு மந்திரி இருந்தார். அவர் கவனத்துக்கு ஒரு விஷயம் வந்தது. அதாவது , அந்த ராஜ்யத்தின் பிரஜை ஒருவன் எந்தத் திறனும் இல்லாதவனாக இருக்கிறான் என்று. மந்திரி சொன்னார், ‘’அது எப்படி ஒருவன் எந்தத் திறனும் இல்லாதவனாக இருக்க முடியும். அவனை என்னிடம் அழைத்து வாருங்கள். நான் விசாரிக்கிறேன்’’ என்றார். அவனை மந்திரி முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். 

‘’உன்னிடம் உள்ள திறன்களைச் சொல்’’ மந்திரி மென்மையாகவே கேட்டார். 

அவன் மௌனமாயிருந்தான். 

‘’அஞ்சாதே ! சொல்ல நினைப்பதைச் சொல்.’’ மந்திரி அவனுக்கு ஊக்கம் கொடுத்தார். 

‘’எனக்கு நல்லா துக்கம் சொல்ல வருங்க. அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது.’’

மந்திரி ஓலைநாயகத்தை அழைத்து ‘’எந்தத் திறனும் இல்லாதவன்’’ எனக் கூறப்பட்டவனுக்கு பணி நியமன உத்தரவு அளிக்கச் சொன்னார். 

மந்திரி அவனிடம் ‘’ இனி நீ அரசாங்க ஊழியன். அரண்மனையில் ஊழியர் குடியிருப்பில் தங்கிக் கொள்ளலாம். மூன்று வேளை உணவும் மாத ஊதியமும் உண்டு. குடும்பத்தை அழைத்து வந்து விடு.’’

அரண்மனை செயலக ஊழியர்களுக்கு மந்திரி ஏன் இவனுக்கு பணி நியமனம் செய்தார் என்பது புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது. அரசாங்கத்தில் எல்லாம் புரிந்து தெரிந்தா நடக்கிறது ; நாம் இதில் மனதைச் செலுத்த வேண்டாம் என தங்கள் வழமைகளுக்குத் திரும்பினர். 

நாட்கள் வேகமாக ஓடின. 

ராஜன் நாட்டில் இருந்த காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். காட்டில் 15 நாள் முகாம் செய்வதாய் திட்டம். காட்டுக்குச் சென்று 5 நாள் ஆகியிருந்தது. 

ராஜன் காட்டுக்குச் சென்ற 5 வது நாள் ராணிக்கு விஷ ஜூரம் வந்தது. அரண்மனை வைத்தியர்கள் எவ்வளவோ முயன்று பார்த்தனர். ஒரு ராத்திரி கூட சிகிச்சையால் அவள் உயிரைப் பிடித்து வைக்க முடியவில்லை. அவள் காலமாகி விட்டாள். இந்த தகவல் மன்னனுக்குத் தெரிவிக்கப்பட்டு அவன் திரும்பி வர குறைந்தது 3 நாளாவது ஆகி விடும். அதுவரை சவத்தைப் பாதுகாத்து அரண்மனையில் வைக்க முடியாது என்பதால் அரச குடும்பத்தின் வாரிசுகளைக் கொண்டு தகனத்தை முடித்து விட்டனர். 

ஒன்றுக்கு இரண்டு எதிர்பாராமைகள் அரங்கேறி விட்டன. ராணி உயிரையும் சிகிச்சை அளித்து காக்க முடியவில்லை ; ராணி சடலத்தைக் கூட மன்னன் பார்க்க முடியாமல் தகனம் செய்தாயிற்று. இந்த இரண்டு தகவலையும் மன்னனுக்கு எவ்விதம் தெரிவிப்பது என ராஜாங்கத்தின் அமைச்சகங்களும் செயலகங்களும் திணறின. கூடிக் கூடி ஆலோசித்தன. மந்திரிக்கு தான் அரசாங்க வேலை கொடுத்த ‘’எந்தத் திறனும் இல்லாதவன்’’ நினைவு வந்தது. அவனை அழைத்து வரச் சொன்னார். 

அவனிடம்,’’ விஷயம் உனக்குத் தெரிந்திருக்கும். இந்த செய்தியை யார் கொண்டு சென்று தெரிவித்தாலும் ராஜன் அக்கணமே செய்தி கொண்டு சென்றவன் தலையைக் கொய்து விடுவார். மேலும் அரண்மனைக்கு வந்து இங்கே உள்ள அத்தனை ஊழியர்களையும் கழு ஏற்றி விடுவார்’’என்றார். 

‘’மந்திரி ஐயா! நாடே நான் எதுக்கும் பயன்படாதவன்னு சொன்னப்ப எனக்கு நீங்க அரசாங்க வேலை கொடுத்தீங்க. அதை எப்போதும் நான் நன்றியோட நினைப்பன். நான் தகவல் கொண்டு போறன்’’ என்று சொல்லி புறப்பட்டான். 

அரசாங்க ஊழியர்கள் இன்னும் ஓரிரு நாளில் ஒட்டுமொத்தமாக கழுவேற்றம்தான் எனக் கவலையோடு இடிந்து போய் உட்கார்ந்திருந்தனர். 

துக்கம் சொல்லச் சென்றவன் காட்டில் மன்னன் கூடாரத்தை அடைந்து நெடுஞ்சாண் கிடையாக மன்னனை வணங்கினான். 

ராஜன் எச்சொல்லும் உரைக்காமல் அவனை நோக்கினான்.

’’மஹாராஜா! ராணிக்கு லேசாக உடம்பு சரியில்லை’’ என்றான் துக்கம் சொல்ல வந்தவன். 

ராஜன் பதறி விட்டான். ‘’ஆ! என்ன சொல்கிறாய்? என்ன உடம்புக்கு? வைத்தியம் நடக்கிறதா ? வெளிநாட்டிலிருந்து வைத்தியர்கள் வந்தார்களா ? நான் இப்போது உடனே புறப்படவா ? ‘’ என அடுக்கடுக்காக கேள்வியாகக் கேட்டான். 

‘’ராஜா! நம் வைத்தியரே குணப்படுத்தி விட்டார்’’ என்றான் துக்கம் சொல்ல வந்தவன். 

’’அப்பாடா’’ என ஆசுவாசம் ஆனார் மன்னர். 

‘’குணமான அடுத்த நாள் ராணியின் கால் சுண்டு விரலில் சிறு காயம் மஹாராஜா’’

மன்னன் அதற்கும் பதட்டமடைந்து பின் விபரம் கூறப்பட்டு சகஜமானான். துக்கம் சொல்ல வந்தவன் விரல், கை, கால் என ஒவ்வொரு அவயங்களிலும் சிறு காயம் ஏற்பட்டு ராணிக்குச் சரியானது என்றான். ஒவ்வொரு முறையும் பதட்டமைந்து பின் ஆசுவாசமாகி நிலை மீண்டான் ராஜன். அதன் பின் ராணிக்கு ஜூரம் வந்தது ; விஷ ஜூரம் வந்தது எனக் கூறப்பட்டது. 

ராஜன் உச்சகட்ட பதட்டத்துக்குச் சென்று கத்தினான். ‘’ ராணி உயிரோட இருக்காளா? இல்ல செத்து தொலஞ்சிட்டாளா?’’ 

‘’ நாலு நாள் முன்னாடியே ராணி இறந்துட்டாங்க மஹாராஜா. தகனமும் ஆயிடுச்சு’’

ராஜன் தலை சுற்றி மயங்கி விழுந்து விட்டான். மயக்கம் தெளிந்து விழித்ததும் அவன் மனம் ராணி இறந்து போன யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டது. அவள் விதி அவ்வளவு தான் என்ற துக்கத்தோடு சோகமாக அரண்மனைக்குப் புறப்பட்டான். 

சினத்துடனும் வஞ்சத்துடனும் வந்து தங்களை ராஜன் கழுவேற்றப் போகிறார் என எண்ணிய அரண்மனை ஊழியர்கள் ராஜன் அவ்விதம் செய்யாததைக் கண்டு வியப்படைந்தனர். நடந்த விஷயத்தை விசாரித்து அறிந்து ‘’எந்தத் திறனும் இல்லாதவன்’’ எனக் கூறப்பட்டவன் கொண்டிருந்த திறமையை வியந்தனர். அவனுக்கு அரசாங்க வேலை கொடுத்த மந்திரியின் சமயோஜித தன்மையைத் தங்களுக்குள் பாராட்டிக் கொண்டனர்.   

Friday, 13 March 2026

பாகம் 2 -ஆட் மேன் அவுட் (இன்னொரு நகைச்சுவைக் கட்டுரை)

 பொதுவாக தமிழக மக்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி சற்றே குறைவு. அண்டை மாநிலமான கேரளம் நகைச்சுவை உணர்ச்சிக்கு பேர் போனது. அங்கே நம்பூதிரி, நாயர் ஜோக்கள் மிகவும் பிரபலம். வட இந்தியாவில் சர்தார்ஜி ஜோக் மிக பிரபலம். நகைச்சுவையை நகைச்சுவையாகக் காணும் தன்மை என்பது சிறப்பானது. எனக்கு சிறு வயதிலிருந்தே முல்லா நஸ்ருதீன் ஜோக் மிகவும் விருப்பத்துக்குரியது. தெனாலி ராமன், பீர்பால் நகைச்சுவையும் மிகவும் பிடிக்கும். இங்கே எதையுமே சீரியசாக எடுத்துக் கொள்பவ்ர்கள் அதிகம் என்பதால் நகைச்சுவையாய் எழுதப்படும் விஷயங்களை (நகைச்சுவைக் கட்டுரை) எனக் குறிப்பிட்டு எழுதி விடுகிறேன். சமீபத்தில் எழுதும் கணிசமான கட்டுரைகள் நகைச்சுவைக் கட்டுரைகளாக இருப்பதைக் கண்டு எனக்கு வியப்பும் ஆச்சர்யமும் ! எனது நகைச்சுவை உணர்ச்சி மிகவும் மிகுந்து விட்டதா அல்லது அன்றாடத்தில் மிக அதிக நகைச்சுவை அம்சங்கள் என் கண்ணில் பட ஆரம்பித்து விட்டதா என!

இன்று பிற்பகலில் ‘’ஆட் மேன் அவுட்’’ என ஒரு நகைச்சுவைக் கட்டுரை எழுதினேன். எழுதிய விஷயம் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. மாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு சென்றேன். பெட்ரோல் பங்கின் அருகில் ஒரு கல்யாண மண்டபம். அதில் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனர் என்ன என்று பார்த்தேன். கட்டிடப் பொறியாளரான எனது நண்பரின் குழந்தைக்கு முதல் பிறந்தநாள். நண்பரின் படமும் குழந்தையின் படமும் பேனரில் இருந்தது.நண்பரின் அலுவலகத்துக்கு தினமும் செல்வேன் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு தடவையாவது செல்வேன். ஊரின் கட்டிடப் பொறியாளர்கள் அனைவரும் சந்திக்கும் இடம் அது. அங்கே காலை மாலை ஒரு மணி நேரமாவது உட்கார்ந்திருப்போம். விழா எப்போது எனப் பார்த்தேன். மார்ச் 12 என இருந்தது. எனக்கு ‘’ஆ! விழா முடிந்து விட்டதா’’ என அதிர்ச்சி. நண்பர் அலுவலகத்தில் பணி புரியும் ஊழியருக்கு ஃபோன் செய்தேன். அவர் மிக சாவகாசமாக ஃபோனை எடுத்து , ‘’சார் ! சொல்லுங்க சார்’’ என்றார். ’’தம்பி நேத்து குழந்தை ஃபர்ஸ்ட் பர்த் டேஆ. கல்யாண மண்டபத்துல இருக்கற பேனர் பாத்து தான் தெரிஞ்சுகிட்டன். என்னப்பா எனக்கு சொல்லவே இல்லை!’’ ‘’என்ன சார் சொல்றீங்க உங்களுக்குத் தெரியாதா அண்ணன் சொல்லலையா?’’ ‘’இல்லப்பா . என்ன தினமும் வரேன். எப்படி விடுபட்டுது?’’ ‘’சார் ! மன்னிச்சிடுங்க சார். எப்படியோ விடுபட்டுடுச்சு’’ என சற்று தயங்கியவர் ‘’சார் ! இன்விடேஷன் எல்லாருக்கும் வாட்ஸ் அப் ல அனுப்பினோம். நீங்க வாட்ஸ் அப் ல இல்லாததால விடுபட்டு போயிடுச்சு.’’

நான் ஊழியரிடம் பேசிக் கொண்டிருந்த போது எனது நண்பரான கட்டிடப் பொறியாளர் அவர் வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு தன் இரு சக்கர வாகனத்தில் கடந்து சென்றார். நான் நின்றிருந்த இடம் என் எதிரில் இருந்த அவரது பேனர் ஆகியவற்றைப் பார்த்த அவருக்கு நான் அவரது அலுவலக ஊழியரிடம் நேற்றைய ஃபங்ஷன் குறித்து பேசுகிறேன் என்பது மூட்டமாகத் தெரிந்து விட்டது. ஒரு கணம் திகைத்தவர் பின்னர் என்னைப் பார்த்துப் புன்சிரிப்புடன் கையசைத்தார். நானும் கையசைத்தேன். ஆஃபிஸ் போகிறேன் என சைகை மொழியில் கூறி விட்டு  சென்று விட்டார். 

ஆட் மேன் அவுட் (நகைச்சுவைக் க்ட்டுரை)

பள்ளிப் பாடங்களில் ஆங்கிலப் பாடத்தில் ‘’ஆட் மேன் அவுட்’’ என்ற பகுதி இருக்கும். ஆங்கிலம் இரண்டாம் தாள் என்று ஞாபகம். ஐந்து கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பெண். கேள்வி என எதுவும் கேட்கப்படாது. நான்கு பொருட்களோ அல்லது பெயர்களோ அல்லது வஸ்துக்களோ தரப்படும். அதில் மாறுபாடாக இருக்கும் ஒன்றைக் கண்டடைய வேண்டும். 

மா பலா வாழை முள்ளங்கி 

என இருந்தால் இதில் ‘’முள்ளங்கி’’ ஆட் மேன் அவுட். 

டிவிஎஸ் என்ஃபீல்டு பஜாஜ் பிஎம்டபுள்யூ

என இருந்தால் பிஎம்டபுள்யூ ‘’ஆட் மேன் அவுட்’’ முதல் மூன்றும் இரு சக்கர வாகனம். நான்காவது நான்கு சக்கர வாகனம்.

தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி, இங்கிலீஷ் 

என இருந்தால் ‘’இங்கிலீஷ்’’ ஆட் மேன் அவுட். முதல் மூன்றும் நம் நாட்டில் தோன்றிய மொழிகள் இங்கிலீஷ் வெளிநாட்டில் தோன்றிய மொழி.

எந்த இடத்திலும் எந்த குழுவிலும் நான் ‘’ஆட் மேன் அவுட்’’ ஆகி விடுகிறேனோ என்ற ஐயம் எனக்கு பல நாட்களாக இருக்கிறது. அதற்காக நான் வருந்துவதில்லை. இருந்தாலும் எனக்கு ஒரு ஆச்சர்யம் எப்படி இந்த வழக்கம் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக விதிவிலக்கு என சொல்லத்தக்க குழுவோ இடமோ இல்லாமல் தொடர்ந்து கொண்டேயிருப்பது. அந்த ஆச்சர்யத்தையே ஒரு சுவாரசியமாக ஆக்கிக் கொண்டேன். அதில் எனக்கு எந்த புகாரும் இல்லை. இதனை நான் ஹாஸ்யமாகவே பார்க்கிறேன். 

ரியல் எஸ்டேட்டில் சக மீடியேட்டர்கள் என்னை ஒரு மீடியேட்டராகப் பார்ப்பதும் இல்லை. நினைப்பதும் இல்லை. கணிசமான இடங்களை ‘’வாங்குபவர்’’ ‘’விற்பவருக்கு’’ நடுவில் இருந்து முடித்துக் கொடுத்திருக்கிறேன். என்றாலும் என்னை மீடியேட்டராக மீடியேட்டர்கள் நினைப்பது இல்லை. ‘’ஆட் மேன் அவுட்’’ என்றே நினைப்பார்கள்.  

முறைமை மற்றும் முறைமைகளின் மீது நம்பிக்கை கொண்டவன் என்பது ‘’ஆட் மேன் அவுட்’’ ஆவதற்கு காரணமாக இருக்கக் கூடும். எத்தனை காலம் எத்தனை வருடங்கள் ஆனாலும் முறைமை மீதான நம்பிக்கை எனக்கு கூடிக் கொண்டே போகிறது தவிர இம்மியளவும் குறையவில்லை.  

Thursday, 12 March 2026

அதிகார அரசியல் (நகைச்சுவைக் கட்டுரை)

நம் நாட்டில் 788 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.  4000 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20,000 பேர் இருக்கக் கூடும். முன்னாள் இன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 25,000 என இருக்கக் கூடும். மத்திய மாநில அரசு ஊழியர்கள் 2 கோடி பேர் இருக்கிறார்கள். முன்னாள் இன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை மத்திய மாநில அரசு ஊழியர்கள் எண்ணிக்கையுடன் சேர்த்து கணக்கிட்டாலும் அந்த கணக்கீடு உகந்ததே. எல்லாம் சேர்த்து மொத்தமாக 2 கோடி.

நமது நாட்டின் மக்கள் தொகை 120 கோடி. குறைந்தது 30 கோடி குடும்பங்கள் நம் நாட்டில் இருப்பார்கள். அதில் குறைந்தபட்சம் 20 கோடி குடும்பங்கள் விவசாயிகளாகவும் விவசாயத் தொழிலாளர்களாகவும் இருப்பார்கள். மண்ணையும் விண்ணையும் நம்பி வாழ்பவர்கள். அவர்களே நம் நாட்டின் பண்பாட்டினை உயிர்க்கச் செய்திருக்கின்றனர். அனாதி காலமாக இந்த விவசாயிகளே நாட்டின் பண்பாட்டை முன்னெடுத்திருக்கின்றனர். இன்றும் நம் கிராமங்கள் அமைதியான வாழ்க்கைமுறைக்கு வாய்ப்பு அளிக்கின்றன. இந்த கிராமங்கள் தான் இஸ்லாமியர் தாக்குதலுக்கு ஆளாயின. பிரிட்டிஷார் சுரண்டலுக்கு ஆளாயின. எனினும் அவை முழுக்க அழிந்து விடவில்லை. ஒவ்வொரு அழிவிலிருந்தும் மீண்டு வந்தன. 

ஜனநாயக அரசியல் செய்திகளும் நிலவரங்களும் இன்று நாட்டின் சகல குடிகளையும் சென்று சேர்ந்திருக்கிறது. எனினும் நமது சர்க்கார் இயங்குமுறை பிரிட்டிஷ் மனோபாவங்களால் ஆக்கப்பட்டது. அரசியலால் சர்க்காரால் கோடானுகோடி மக்களுக்கு நலம் பயத்து விட முடியுமா என்பது மிகப் பெரிய கேள்வி. இருப்பினும் நாட்டின் உயர் அதிகாரப் பொறுப்பில் இருந்த பலர் கோடானுகோடி மக்களின் வாழ்வைத் தொடும் விதமாக வாழ்வில் நன்மையை உருவாக்கும் விதமாக பொருட்படுத்தத்தக்க விஷயங்களை செய்திருக்கின்றனர். 

நான் ஜனநாயக அரசை மதிப்பவன். ஜனநாயக அரசமைப்பின் மீது மதிப்பு கொண்டவன். எனினும் அரசை விட சமூக அமைப்புகள் மீது எனக்கு நம்பிக்கை அதிகம். சாமானிய மக்கள் சாமானிய குடும்பங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த சமூக அமைப்புகள் பணி புரிய வேண்டும் என்னும் விருப்பமும் எதிர்பார்ப்பும் கொண்டவன்.  எதிர்காலத்தில் நம் நாட்டில் ஒட்டு மொத்த உலகிலும் கூட அரசியல் அமைப்புகளை விட சமூக அமைப்புகள் அதிக அளவில் உருவாகி மானுட இனத்தின் முன்னேற்றத்துக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். 

14 ஆண்டுகள்? 100 ஆண்டுகள்? (நகைச்சுவைக் கட்டுரை)

நமது நாட்டில் 14 ஆண்டுகளை ஒரு தலைமுறை என்று கூறுவதுண்டு. 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை 14 ஆண்டுகளை ஒரு தலைமுறை எனக் கருதும் வழக்கம் உண்டு. இப்போதும் 14 ஆண்டுகள் என்பது ஒரு தலைமுறைதான். இருப்பினும் சில சமூக அரசியல் பொருளியல் கூறுகளால் இந்த காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இராமாயணத்தில் கைகேயி இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என விரும்பி தசரதனிடம் வரம் கேட்டார். 14 ஆண்டுகளில் அடுத்த தலைமுறை உருவாகி அவர்கள் பொறுப்பேற்கும் சூழல் உருவாகும் என்பதே அந்தக் கால நிர்ணயத்துக்கான காரணம்.

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி தாங்க அருந் தவம் மேற்கொண்டு
பூழி வெங் கானம் நண்ணி புண்ணியத் துறைகள் ஆடி
ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள்.
 
என்பது கம்பன். 

எனினும் கைகேயின் வரத்தை பரதன் தன் தூய அன்பாலும் தியாகத்தாலும் செயலற்றதாக்கினான். அண்ணன் பாதுகையை தன் தலைமையாக ஏற்று அதன் பிரதிநிதியாக அண்ணன் 14 ஆண்டு நிறைவு செய்து திரும்பி வரும் வரை காத்திருந்து அரசாட்சியை ஒப்படைத்தான் என்பது இதிகாசம். 

மகாபாரதத்திலும் பாண்டவர்களின் வனவாசம் என்பது 12 ஆண்டுகள். மேலும் ஒரு வருடம் அக்ஞாதவாசம். அக்ஞாதவாசத்தில் அவர்கள் அடையாளம் வெளிப்பட்டால் மேலும் 12 ஆண்டுகள் வனவாசம். 14 ஆண்டுகள் ஒரு தலைமுறைக் காலம் என்பதை ஓராண்டு குறைப்பது போல் காட்டி இரண்டு தலைமுறை வனவாசத்துக்குக் கொண்டு செல்ல செய்யப்பட்ட முயற்சி. மதிசூழ்கையில் தேர்ச்சி கொண்டவரான சகுனி உருவாக்கிய நிபந்தனை. அக்ஞாதவாசத்தின் கடைசி தினத்தன்று பாண்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர் என்பதே பாதி ராஜ்யம் தர மறுத்ததற்கு கௌரவர் சொன்ன காரணம். பாஞ்சால தேசத்தின் தலைமைப் புரோகிதர் பாண்டவர் சார்பில் தூதுச் செய்தி உரைக்க வருவார். யுதிர்ஷ்ட்ரன் 13 ஆண்டு காலத்தைக் கணக்கிட்டு மேலும் கூடுதலாக ஒருநாள் அக்ஞாதவாசத்தில் இருந்த பின்னரே தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள். கௌரவர் அவையில் பீஷ்மரோ, துரோணரோ கிருபரோ விதுரரோ இவர்களில் எவர் ஒருவர் அக்ஞாதவாசத்தில்  பாண்டவர்கள் அடையாளம் காணப்பட்டதாக எண்ணினால் யுதிர்ஷ்ட்ரர் எந்த சொல்லும் இன்றி வனவாசம் செல்ல சித்தமாக இருக்கிறார் ; பாஞ்சாலத்தின் தலைமைப் புரோகிதிரான எனது சொல்லும் வாக்குறுதியும் இது என்று அவையில் கூறுவார். நாள் பொழுதை துல்லியமாகக் கணக்கிடுவதில் தேர்ந்த தேர்ச்சி பெற்றவர்கள் புரோகிதர்கள். எனவே பாஞ்சாலத்தின் தலைமைப் புரோகிதர் தூதுக்கு அனுப்பப்பட்டிருப்பார். பீஷ்மர் துரோணர் கிருபர் விதுரர் நால்வரும் எந்த சொல்லும் கூறாமல் அமைதி காப்பார்கள். தலைமைப் புரோகிதர் அவர்கள் காக்கும் அமைதி பாண்டவர்களின் கணக்கீடு சரியானதே என்பதைக் காட்டுகிறது ; எனவே அவர்களுக்கு உரிய பாதி ராஜ்யம் தரப்பட வேண்டும் என்பதே எனது தூதின் செய்தி எனக் கூறுவார். 

60 ஆண்டுகளுக்கு முன்பு வரை 18 வயதில் ஒருவர் குடும்பப் பொறுப்பை ஏற்பது நடக்கும். விவசாயமாக இருந்தாலும் தொழிலாக இருந்தாலும் ஒருவர் 18 வயதில் பொறுப்பை ஏற்பார். நம் நாடு சுதந்திரம் அடைந்த போது வாக்களிக்கும் உரிமை குடிமக்களுக்கு 21 வயதில் தரப்பட்டது. அதன் பின் 35 ஆண்டுகளுக்குப் பின்னரே வாக்காளர் வயது 18 என ஆனது. இன்றைய காலகட்டத்தில் ஒருவர் பட்டப்படிப்பு படிக்கவே 21 வயது ஆகி விடுகிறது. அதன் பின் மேல்படிப்பு மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் படித்தால் 23 வயதாகி விடும். அதன் பின் ஒரு வேலையில் அமர மேலும் 4 ஆண்டுகள் ஆகிறது. திருமணங்களே 27 வயதை ஒட்டி நிகழ்கிறது. இதனால் 60 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த 14 ஆண்டுகள் என்னும் காலம் இப்போது மேலும் 14 ஆண்டுகள் நீண்டு விட்டது. 

ரியல் எஸ்டேட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை - 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட வங்கிக் கடனுக்கான வில்லங்கச் சான்றிதழ் 14 ஆண்டுகளுக்கு பெறச் சொல்வார்கள். வருவாய்த்துறை ஒரு சொத்து ஒருவரிடம் 14 ஆண்டுகளுக்கு மேல் அவரது அனுபோகத்தில் இருந்தால் அவருக்கு ’’பட்டா’’ என்னும் நில உரிமை ஆவணத்தை வழங்கும். இடத்தின் பட்டா உடையவர் இடத்தின் உரிமையாளர் என்பது தமிழக நடைமுறை. பிரிட்டிஷ் ஆட்சி நம் நாட்டில் முதன் முதலில் ஏற்பட்டது தமிழகத்திலும் வங்காளத்திலும். அப்போதிருந்து அதுவே வழக்கம். இப்போது அந்த நடைமுறை ஐயத்திற்கிடமில்லாததாக இல்லை. சில உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ‘’பட்டா’’வின் ஆவண மதிப்பை நூறு சதவீதம் ஏற்பதை ஐயத்திற்கிடமாக்கியுள்ளன. இப்போது வங்கிகள் 14 ஆண்டுகள் வில்லங்கச் சான்றிதழ் மட்டும் கோருவதில்லை ; 100 ஆண்டுகளுக்கு வில்லங்கச் சான்றிதழ் வழங்கக் கோருகிறார்கள். 

இராமாயண காலத்திலிருந்து இன்று வரை நிலம் நில உரிமை இவற்றுடன் சர்ச்சையும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. 

மனித சமூகம் உருவான முதல் நாளிலிருந்து இந்த நிலம் நில உரிமை சர்ச்சைகள் இருந்திருக்கும் என்று படுகிறது.