Sunday 16 June 2019

ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்

இச்சம்பவம் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்தது. நிகழ்ந்த தினம் ஆகஸ்ட்-15. எனது அண்டை வீட்டுக்காரர் ஒருவர் வீட்டுக்கு வெளியூரிலிருந்து உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களுடைய கார் எனது வீட்டுக்கு எதிரில் நின்று கொண்டிருந்தது. மாலை 4 மணி அளவில் அவர்களுடைய கார் புறப்படும் எஞ்சின் சத்தம் என் வீட்டில் முதல் தளத்தில் அமைந்திருக்கும் என் அறையில் கேட்டது. அன்று மதியம் அவர்கள் அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் செல்வதற்கான சாலை மார்க்கங்களை என்னிடம் கேட்டறிந்திருந்தனர். மாலை 4.10க்கு என்னுடைய அலைபேசிக்கு ஒரு அழைப்பு. அண்டைவீட்டுக்காரர் அழைத்தார்.  அவர் பயணப்பாதை குறித்து ஏதேனும் ஐயம் கேட்கக்கூடும் என நினைத்தேன். அவர் பதட்டத்துடன் பேசினார். மயிலாடுதுறை மணிக்கூண்டு அருகே அவர்கள் காரும் காரில் பயணித்தவர்களும் இரு குடிகார நடைபாதை வியாபாரிகளால் மிக மோசமாகத் தாக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். பயணித்தவர்களில் மூன்று பேர் பெண்கள். நான் உடனடியாக என்னுடைய டூ-வீலரில் சம்பவ இடத்துக்குச் சென்றேன். அது நகரின் கடைத்தெருவின் மையப்பகுதி. நிமிடந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் இடம். நகரின் இதயப்பகுதி. அங்கே கண்ணாடித் துண்டுகள் உடைந்து சில்லுகளாக சிதறிக் கிடந்தன. அண்டை வீட்டுக்காரர் அங்கே இல்லை. நான் உடனடியாக காவல் நிலையம் சென்றேன். குடிகாரர்களால் தாக்கப்பட்ட  அவர்கள் அங்கிருந்தனர். தாக்கப்பட்ட அவர்கள் வாகனமும் அங்கிருந்தது. பெண்களுக்கு முகத்திலும் கழுத்திலும் நகக்கீறல். ரத்தக்காயம். வாகனத்தை ஓட்டியவர் தலையில் ரத்தக்காயம்.

நடைபாதை வியாபாரிகளான இரு குடிகாரர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்கள் வாகனம் அந்த பகுதியில் சென்றிருக்கிறது. திடீரென இரு குடிகாரர்களும் சேர்ந்து குடிபோதையில் வாகனக் கண்ணாடியை எடைக்கல்லால் உடைத்து வாகனத்தின் உள்ளே இருந்தவர்களை வெளியே இழுத்து அடித்திருக்கின்றனர். இவர்கள் சுதாரிப்பதற்குள் அடி மூர்க்கமாக விழுந்திருக்கிறது. அவர்கள் இவ்வாறான வன்முறையை பார்த்துக் கூட அறியாதவர்கள். அவர்கள் மேல் நிகழ்ந்த தாக்குதலில் அவர்கள் அனைவரும் நிலைகுலைந்து போயினர். பிற நடைபாதை வியாபாரிகள், குடிகாரர்களான தாக்குதல் நடத்திய இரு நடைபாதை வியாபாரிகளையும் ஒரு ஆட்டோவில் ஏற்றி அந்த இடத்தை விட்டு தலைமறைவாகும்படி சொல்லி அனுப்பி விட்டனர். கடைக்காரர் ஒருவர் காவல் நிலையத்துக்கு ஃபோன் செய்திருக்கிறார். காவல்துறையினர் ஜீப்பில் வந்து தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை காவல் நிலையம் அனுப்பி வைத்திருக்கின்றனர். 

நான் காவல் நிலையம் சென்ற போது இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் ஏதும் வேண்டாம்; குடிபோதையில் நடந்த பிழை என்றனர். நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். பாதிக்கப்பட்ட பெண்கள் நாங்கள் செய்த தவறு என்ன என்று கேட்டனர். நான் அதிர்ச்சியிலிருந்து சற்று மீண்டு அவர்களிடம் வீட்டுக்குச் செல்லலாம் என்று சொல்லி வீட்டுக்கு அழைத்து வந்தேன். வரும் வழியில் அவர்கள் காயங்களுக்கான மருந்தை வாங்கி வந்தேன். வீட்டில் அவர்கள் காயங்களுக்கு மருந்திட்டோம். பருத்தியில் மருந்திட்டு காயங்களில் ஒட்ட வைத்தேன். அனைவரும் சற்று ஆசுவாசமானார்கள். எங்களைத் தாக்கிய குடிகாரர்களுக்குத் தண்டனையே கிடையாதா என அரற்றிக் கொண்டிருந்தனர். நான் அதில் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணியை அவர்கள் கைப்பட நடந்ததை விவரித்து ஒரு புகார் எழுதச் சொன்னேன். எழுதித் தந்தார்கள். நானும் அண்டைவீட்டுக்காரரும் அதை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று புகார் அளித்தோம். காவல் உதவி ஆய்வாளர் மாலை ஆறு மணிக்கு மேல் எவரையும் கைது செய்ய முடியாது; நாளை காலை வாருங்கள் என்றார். நீங்கள் ஒரு கொலைகாரனைத் துரத்திக் கொண்டு ஓடுகிறீர்கள். மாலை ஆறு மணியானதும் துரத்துவதை நிறுத்தி விடுவீர்களா என்று கேட்டேன். நடுத்தர வர்க்கத்துடன் இதுதான் பிரச்சனை என்றார். உங்கள் பிரச்சனையே இதுதானா அல்லது நடுத்தர வர்க்கம் என ஒன்று இருப்பதே உங்கள் பிரச்சனையா என்றேன். இந்த விவகாரத்தில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள் எனக் கேட்டனர். இன்று ஆகஸ்டு-15. இந்த நாடு விடுதலை பெற எத்தனையோ பேர் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் வாங்கித் தந்த சுதந்திரத்துக்கு மரியாதை கொடுக்க என்று சொன்னேன். புகாரை வாங்கி வைத்துக் கொண்டு ஒரு மணி நேரம் கழித்து வாருங்கள் என்றனர். வீட்டுக்கு வந்து விட்டு ஒரு மணி நேரம் கழித்துச் சென்றோம். எங்கள் புகாரின் வலுவான பகுதிகளை பேனாவால் அடித்து திருத்தி எழுதியிருந்தனர். நாங்கள் கொடுத்த புகாரை நீங்கள் எப்படி திருத்தலாம்; அதற்கு உங்களுக்கு உரிமை கொடுத்தது யார் என்று குரலை உயர்த்தினேன். நாங்கள் புதிய புகார்தான் தருவோம் அல்லது நாளை காலை கோர்ட்டுக்குச் செல்வோம் என்றோம். அவர்கள் திருத்தி மாற்றி எழுதிய புகாரை கிழித்துப் போட்டோம். சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்து அந்த இரு குடிகாரர்களின் பெயர், தந்தை பெயர் விலாசம் ஆகியவற்றைக் கேட்டறிந்து நடந்த சம்பவத்தை சித்தரித்து மீண்டும் ஒரு புகாரை எழுதிக் கொடுத்தோம். ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் அந்த குடிகாரர்கள் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை நகல் வழங்கப்பட்டது.

எங்கள் பகுதியில் வசிப்பவர்கள், அண்டை வீட்டுக்காரரின் நண்பர்கள், அலுவலகத்தில் பணி புரிபவர்கள், வெளியூரிலிருந்து அலைபேசியில் தொடர்பு கொண்டவர்கள் அனைவருமே குடிகாரர்கள் குடிபோதையில் செய்திருக்கிறார்கள்; இதை இத்தோடு விட்டு விடுங்கள் என பாதிக்கப்பட்டவர்களிடம் அறிவுரை கூறினர். ஏன் காவல்துறையுடன் மோதுகிறீர்கள் என்று கேட்டனர். அவர்களில் ஒருவர் கூட காவல்துறை குடிகாரர்களுக்கு ஆதரவாக செயல்படுவதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பது எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

குடிகாரர்கள் எவ்விதமான செயலும் ஆற்ற உரிமை வழங்கப்பட்டவர்கள் என நினைக்கும் சமூகத்தின் பிரக்ஞை எவ்விதமானது?