Thursday 20 June 2019

சமத்துவம்

நான் வசிக்கும் பகுதியில் ஓர் இளைஞர் இருக்கிறார். எனது நண்பர். பொறியாளர். மும்பையில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தார். பின்னர் சில வருடம் வளைகுடா நாடுகளில் பணி புரிந்தார். இப்போது சிங்கப்பூரில். அவ்வப்போது இங்கு வந்து செல்வார். ஒவ்வொரு முறை வரும் போதும் என்னைச் சந்திப்பார். ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருப்பார். 

என்னிடம் ஒருமுறை மும்பையில் தான் கலந்து கொண்ட திருமண விழாக்களைப் பற்றியும் அதன் விருந்துகளைப் பற்றியும் சொன்னார். அவ்விழாக்களின் ஒவ்வொரு கூறுகளையும் ஆர்வத்துடன் விரித்துரைத்தார். விழாவில் கலந்து கொள்பவர்கள் ஒவ்வொருவரையும் தனிக் கவனம் கொடுத்து வரவேற்பார்கள். விருந்து பரிமாறுபவர்கள் அவ்வளவு பொறுமையையும் நிதானமும் ஒழுங்கும் கடைப்பிடிப்பார்கள். எங்கும் மகிழ்ச்சி நிலவும். நான் கேட்டேன்: ஏன் நம் ஊரில் கூடத்தான் பெரும் செலவில் திருமணங்கள் நடக்கின்றன. அவற்றில் பெரும் விருந்துகளை ஏற்பாடு செய்கிறார்கள். எதை வேறுபாடு என்று கூறுகிறீர்கள் என்று கேட்டேன். அவருக்குத் தொகுத்துச் சொல்லத் தெரியவில்லை. அவர் சுட்டிக்காட்டியவற்றை நான் தொகுத்துக் கொண்டு அது குறித்து மேலும் விரிவாக யோசித்தேன்.

இங்கே இன்னும் நிலப்பிரபுத்துவ மனநிலை நீடிக்கிறது. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் நில உரிமையாளன் தான் நில உரிமையாளனாக இருப்பதாலேயே எல்லா சிறப்புகளும் தனக்கே உரியவை தான் மட்டுமே அதிகாரத்துக்கான எல்லா தகுதியும் கொண்டவன் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பான். அவனது சமூகத் தொடர்புகளில் எப்போதுமே தான் மட்டுமே குறிப்புகள்  கூறும் இடத்தில் இருப்பவனாக தன்னை அமைத்துக் கொள்வான். அந்நிலையில் அவனுடன் தொடர்பு கொள்பவர்கள் அவன் நிலத்துடன் விவசாயத்தில் தொடர்பு கொண்டவர்களாக இருப்பார்கள். அவனிடம் உரையாடவோ விவாதிக்கவோ மாட்டார்கள். அவன் அளிக்கும் ஊதியத்தைப் பெற்றுக்  கொண்டு அவனுடன் மிகக்  குறைவான சொற்களில் உரையாடுவார்கள். எனவே நிலப்பிரபுத்துவ சமூகம் தேங்கிப் போனதாக இருக்கும்.  ஆழமான சாதி நம்பிக்கை, மாற்றத்தின் மீது நம்பிக்கையில்லாமல் இருத்தல், எப்போதும் அடுத்தவரை கீழாக எண்ணும் குணம் ஆகியவை ஃபியூடல்களின் ஆளுமையாகவே உருவாகி  விடும். இவர்களால் இவற்றின் சுமைகளை என்றுமே இறக்கிவைக்க  முடியாது. இவர்களுடன்  தொடர்பில் இருப்பவர்களும் மறைமுகமாக இம்மனநிலையின் சுமைகளை சுமக்கத் துவங்கி விடுவார்கள்.

வணிகர்களான பிரிட்டிஷார் உலகின்  பெரும்பகுதியை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். ஜப்பானியர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை உலகெங்கும் கொண்டு சென்று எலெக்ட்ரானிக் உலகை ஆண்டார்கள். இன்று கொரியர்கள் உலகெங்கும் தங்கள் வணிகங்களைக் கொண்டு சென்றிருக்கின்றனர். வணிகம் எப்போதுமே சில மேலான மதிப்பீடுகளைக் கோரியவாறு இருக்கும். ஆதலால் அவர்களுடைய சமூகப் புரிதலும் சமூக மதிப்பீடுகளும் எவரையும் விட மேலானதாக  இருக்கும். சமூகவியலிலும் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் நிகழும் மாறுதல்களை முதலில்  ஏற்றுக் கொள்பவையாக ஒப்புநோக்கில் வணிகச் சமூகங்கள் இருக்கின்றன.

மானுட சமத்துவத்தின் மேல் நம்பிக்கையில்லாத ஒருவரால் தன் விருந்தினரை முழு மனத்துடன் வரவேற்க முடியாது என்பதே நடைமுறை உண்மை. பின்னர்  அங்கே நிகழ்வது தந்திரங்களாகவே இருக்கும். தந்திரமான மனிதர் அவர் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் பிறரால் ஏற்கப்படவே மாட்டார். காலாவதியான மின்கலங்கள் போல உபயோகமற்றுப் போவார்கள்.

மும்பையில் குடும்ப விழாக்களில் மட்டுமாவது சமத்துவத்தை ஏற்கின்றனர் என்றார் நண்பர்.