Tuesday 13 August 2019

கல்லும் சொல்லும்

தமிழ்நாட்டில் மிகப் பெரும் எண்ணிக்கையில் ஆலயங்கள் கட்டப்பட்டது சோழர்கள் காலகட்டத்தில். ஆலயங்கள் சமயங்களை ஒருங்கிணைக்கும் இடங்களாகவும் மக்களை ஒருங்கிணைக்கும் மையங்களாகவும் ஆவது சோழர் காலத்தில் மிக விரைவாய் நடக்கிறது. அதன் பின்னர் அப்பணி, விஜயநகர சாம்ராஜ்ய காலகட்டத்திலும் நிகழ்கிறது. ஆலயங்களில் சிற்பங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. அந்த சிற்பங்கள் சமயங்களின் தொன்மங்கள் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. இந்திய சிற்பவியலைக் குறித்து ஒருவர் ஆர்வம் கொண்டாரென்றால் அவர் இந்தியத் தொன்மங்களையே முதல் பாடமாக பயில வேண்டும். இந்திய நிலமெங்கும் சமயங்களின் சொல் மாருதமென ஓயாமல் நகர்ந்து கொண்டேயிருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் சமயத்துக்கு எதிரான உணர்வு அரசியல் தளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறது. அந்த தரப்புக்கு அதிகாரத்தைத் தவிர வேறெதிலும் ஆர்வமில்லை. இந்திய நிலத்தில் தமிழ்நாடே பேராலயங்களைக் கொண்டு திகழ்கிறது. சிற்பங்களைக் குறித்த அறிமுகத்தைக் தமிழ் நாட்டின் குழந்தைகள் பெறுவது அவர்களது உரிமை. மானுடத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்றை பேணிக் காக்க வேண்டிய கடமை தமிழ்ச் சமூகத்துக்கு இருக்கிறது.