Monday, 12 August 2019

கணபதி ராயன்

கணபதி ராயன்
தனியே அமர்ந்திருக்கிறான்
தனியே என்ன தனியே
தனித்திருப்பதால் தானே கடவுள்
காவிரிக்கரை அரசமரம்
காகங்கள் குருவிகள்
கிரமமாக இல்லையென்றாலும்
ஓடும் போது நிரம்பத்தான் ஓடுகிறது
காவேரி
ராயன்
எங்கும் நகர்வதில்லை
இருந்தாலும்
விசுவாசமாகவும் பக்தியாகவும்
இருக்கிறது
மூஷிக வாகனம்
தோப்புக் கரணம் போடுகிறார்கள்
விழுந்து கும்பிடுகிறார்கள்
புதிதாக ஏதாவது செய்தால்
முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்
பயின்றால் உடைவது தடைகள்
விக்னேஸ்வரன் அறிவான்
அம்மையப்பனிடம் அவன் பிராத்தனை ஒன்று
மனிதர்கள் பயில விரும்புவது
நல்லதாகவே இருக்கட்டும்
அம்மை அப்பனிடம் சொல்கிறாள்
அப்புறம் இவனுக்கு பூலோகத்தில் என்ன வேலை
அப்பன்
ஏதும் சொல்லாமல்
மோனித்திருக்கிறான்