தமிழ்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக திராவிட இயக்கம் மக்களின் பொதுப்புத்தியில் சில விஷயங்களை பரவச் செய்துள்ளனர். அதில் ஒன்று மரபான பழக்கங்கள் மீதான தாக்குதல். அவர்களுடைய கண்மூடித்தனமான பரப்புரையில் பல நல்ல விஷயங்கள் காணாமல் போயின. நாம் நிலப்பிரபுத்துவ சமூகமாயிருந்து முதலாளித்துவ சமூக நிலைக்கு கடந்த ஐம்பது ஆண்டுகளில் வந்திருக்கிறோம். நிலப்பிரபுத்துவ சமூகத்தில் விவசாய உற்பத்தியும் விவசாய விளைபொருளின் பகிர்வுமே சமூகத்தின் பொருளியல் அடிப்படைக்கான காரணிகள். அம்முறை ஒரு கிராமத்தையே அடிப்படை அலகாய்க் கொண்டது. கிராமம் அடிப்படை அலகு என்ற முறையில் கிராமச் சுயசார்புக்கான பல விஷயங்கள் அதில் உள்ளடங்கியே இருந்தது. கிராமத்து மக்கள் இணைந்து மேற்கொள்ளும் குடிமராமத்து, உள்ளூர் நீர்நிலைகளைக் காப்பதிலும் பராமரிப்பதிலும் சிறந்த முறை. கோயில் திருவிழாக்கள் கிராம அளவில் ஒருங்கிணைக்கப்படுவதும் மற்றொரு சிறந்த முறை. இன்றும் கிராமக் கோயில்களைச் சமயக் கல்விக்கான மையங்களாக மாற்ற முடியும். கிராமத்துப் பெண்கள் அதற்கான பொறுப்பை எடுத்துக் கொள்ள முடியும். தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகியவற்றில் உள்ள பாடல்களை கிராமத்தின் குழந்தைகளுக்குச் சொல்லித் தர முடியும். மொழி பயிலப்பட்டால் மட்டுமே மரபு பேணப்படும். மரபை அப்படியே ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. எது நம் மரபு எதனால் அவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற புரிதல் இருந்தால் மட்டுமே அதனைப் பரிசீலித்து ஏற்க வேண்டியதை தக்கவைத்துக் கொண்டு மற்றவற்றைப் புறக்கணித்து முன்னகர முடியும். சமயமும் சமயச் சடங்குகளும் பெரும்பாலானோர் வாழ்க்கையில் முக்கிய இடம் வகிக்கின்றன. சாதி சமயத்தின் தொடர்ச்சியாகவே தமிழ்ச் சமூகத்தில் உள்ளது. சமயக் கல்வி இல்லாததன் விளைவுகளில் ஒன்றே நம் சமகாலத்தில் பெருகியிருக்கும் வன்முறை மனோபாவம். எப்போதெல்லாம் சமயம் பரவியிருக்கிறதோ அப்போதெல்லாம் வன்முறை கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதே தமிழ்நாட்டின் வரலாறு. கிராமங்களில் சமயக் கல்வியை அளிக்க ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
இன்று தமிழ்நாட்டில் நடுத்தர வர்க்கம் எண்ணிக்கையில் பெரிதாக இருக்கிறது. தீபாவளி போன்ற பண்டிகை தினத்தில் நாம் அறிந்திராத யாரோ ஒரு வறியவருக்கு ஓர் எளிய புத்தாடையை வழங்கலாம். அது அன்பின் அடையாளம். பெற்றுக் கொள்பவர் அடையும் மகிழ்ச்சி என்பது ஆடையின் பொருள் மதிப்பு சார்ந்தது அல்ல. பெற்றுக் கொள்பவர் அடையும் அளவற்ற நம்பிக்கையைச் சார்ந்தது.
நம் மரபில் அதை ‘’வஸ்திர தானம்’’ என்கிறார்கள்.