Sunday 10 November 2019

மறு நுழைவு


வெள்ளியன்று ஆம்னி வாகனம் பணிமனையிலிருந்து திரும்பி வந்தது. சில நாட்கள் வாகனம் கையில் இல்லாமல் இருந்தது ஓர் இழப்புணர்வை உண்டாக்கியிருந்தது. இப்போது மீண்டும் மகிழ்ச்சி. பிரியமான உறவினர் வீட்டுக்கு வந்திருப்பதைப் போல. துணையிருக்கும் நண்பன் ஊர் திரும்பியிருப்பதைப் போல. இங்கே பணிமனைகள் குறைவு. முக்கிய சிக்கல்களுக்கே முன்னுரிமை தருவர். நுட்பமான விஷயங்களைச் சரி செய்ய அதிக ஆர்வம் காட்டுவதில்லை. சமீபத்தில் என் வாகன சைலன்ஸரில் ஒரு சிக்கல். புகை வெளியாகும் சத்தம் மிகப் பெரிதாய் கேட்டது. புதிதாக மாற்றி விடுங்கள் என்று சொன்னேன். மாற்றவில்லை. வெல்டிங் வைத்து சரி செய்தார்கள். சில நாட்களில் மீண்டும் அதே சிக்கல். கடைசியாக மாற்றப்பட்டது. கியர் பாக்ஸில் சிறு சமன் குலைவு. சரிசெய்ததும் வண்டி வித்தை காட்டுகிறது. நான் இரு சக்கர வாகனத்திலும் சரி காரிலும் சரி நிதானமாகவே பயணிப்பேன். கார் வேகத்தைச் சற்று கூட்டலாம் என்று தோன்றுகிறது. சில விஷயங்களில் மாற்றம் ஏற்படுத்த ஆளுமையிலேயே மாற்றம் கொண்டு வர வேண்டும். வாகனத்தில் இப்போது அனைத்தும் இலகுவாக இருப்பதால் முயற்சி செய்து பார்க்கலாம்.

காலைப் பொழுதில் படைப்பூக்கமான செயல் எதையும் செய்வதே மனதுக்கு உகந்ததாக இருக்கிறது. நடைப்பயிற்சி சென்று வந்த பின் ஏதாவது எழுதுவேன். யோகா செய்வேன். கட்டுமானப் பணி தொடங்க இருப்பதால் காலை 9 மணியிலிருந்து 2 மணி வரை அது தொடர்பான பணிகள். வண்டியை தினமும் துடைத்து வைக்க வேண்டும் என்று விரும்புவேன். காலையிலும் மாலையிலும் நேரம் இருக்காது. மதியம் அல்லது இரவு தான் செய்ய வேண்டும். வாழ்க்கையை அழகாக்கிக் கொள்ள இன்னும் மாற்றங்கள் தேவைப்படுகின்றது. அந்த மாற்றம் நம்மிடமிருந்தே துவங்க வேண்டியுள்ளது.

வாகனம் கையில் இருந்தால் எங்காவது பயணம் கிளம்ப எண்ணுவது எனது வழக்கம். தஞ்சை பயணச்சுற்று எழுதிய கையோடு ஒரு சுற்று கிளம்பினால் நன்றாகத்தான் இருக்கும். லடாக் அழைத்துக் கொண்டிருக்கிறது. பார்க்கலாம்.