Thursday 14 November 2019

நாம்

எனது தந்தை என்னைச் சிறுவயதில் எங்கு சென்றாலும் உடன் அழைத்துச் செல்வார். பைக்கில் பயணிக்கலாம் என்பதால் நான் உடனே கிளம்பி விடுவேன். சைக்கிள் கற்றுக் கொண்டவுடன் அது சற்று குறைந்தது. ஆயினும் வாரம் இரண்டு நாட்களாவது நானும் அப்பாவும் சேர்ந்து பயணிப்போம். கட்டிடக் கட்டுமானம் நடைபெறும் இடங்கள், அலுவலகங்கள், திருமண விழாக்கள், கொல்லுப் பட்டறைகள் மற்றும் இயந்திர உற்பத்தி தலங்கள் ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்வார். இப்போது யோசித்துப் பார்த்தால் எனக்கு பலவிதமான விஷயங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கிருந்திருக்கிறது என்பதை யூகிக்கிறேன். தொழில்நுட்பம் மீது வலுவான நம்பிக்கை கொண்டிருந்தார். கடின உழைப்பாளி. எச்செயலையும் செம்மையாகச் செய்ய வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பவர். தனது கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைய அன்றைய முதலமைச்சர்  காமராஜ் அவர்களே காரணம் என்பதால் இன்றும்  தீவிர காமராஜ் ஆதரவாளர்.

அப்பா அழைத்துச் செல்லும் இடங்களில் பெரும்பாலும் எனக்கு எந்த அலுவலும் இருக்காது. சென்று கொஞ்ச நேரம் ஆனதும் வீட்டுக்குப் போகலாமா என்பேன். அப்பா அவ்வாறு கேட்கக் கூடாது என்பார். சிரமப்பட்டு அமர்ந்திருப்பேன். அப்போது என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கவனிப்பேன். எனக்கு ஒன்றும் புரியாது. ஆனாலும் பார்த்துக் கொண்டிருப்பேன். ஏன் இந்த கான்கிரீட் மெஷின் சுற்றுகிறது? ஏன் கட்டிடம் முழுக்க முட்டு கொடுத்து வைத்திருக்கிறார்கள்? திருமண வீட்டில் அமர்வதற்கு ஏன் ஜமுக்காளம் விரிக்கிறார்கள்? அது ஏன் அவ்வளவு அழுக்காக இருக்கிறது? திருமண வீட்டில் மங்கல இசை வாசிப்பவருக்கு ஏன பல பேர் சைகாயால் இசை எழுப்பு இசையை நிறுத்து என்கிறார்கள்? நாலு பேர் குறிப்பு கொடுத்தால் அவர் யார் சொல்வதைக் கேட்பார்? யார் சொல்வதைக் கேட்காமல் இருப்பார்? ஏதேதோ எண்ணங்கள் ஓடும். நான் அதை யாரிடமும் சொல்லவும் மாட்டேன். இந்த உலகில் இத்தனை கேள்விகள் உள்ளனவே? இதன் எல்லா விடைகளும் தெரிந்தவர் யார்? கடவுளுக்கு எல்லா கேள்விகளுக்கும் விடை தெரியுமா? என்றெல்லாம் யோசிப்பேன்.

பின்னாட்களில், எங்கும் புறப்பட்டுச் செல்வதற்கு நான் தயங்கியதே இல்லை. அத்தயக்கமின்மையே எனது ஆளுமையின் முக்கிய அம்சமாக ஆனது. ஒரு ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டால், ஓர் ஆலயம் குறித்து அறிய நேர்ந்தால், ஒரு இடம் குறித்த செய்தி ஆர்வமூட்டினால் உடனே அங்கே கிளம்பி சென்று விடுவேன். இப்போதும் நான் செல்வதற்காக எண்ணிக் கொண்டிருக்கும் இடங்கள் ஒரு சிறு பட்டியல் அளவுக்கு உண்டு. 

எனது வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் உள்ள குழந்தை. ஒன்பது வயது குழந்தை. ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தது. விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்தது. பைக்கில் பயணம் செய்யும் ஆர்வத்தால் என்னுடன் வந்தது. நான் ஏதாவது கேள்வி கேட்டு அக்குழந்தையிடமிருந்து பதில் பெற்றுக் கொண்டிருந்தேன். எளிய பதில்களுக்குப் பின்னால் இருக்கும் அடர்த்தியான விஷயங்களின் சிக்கலை கூறிக் கொண்டிருந்தேன். 

நாங்கள் கடக்கும் சாலையில் ஆங்காங்கே ஆடுகள் பாதையில் நின்று கொண்டிருந்தன. ஹாரன் அடித்தாலும் விலகாது. சாலைகள் தமக்கேச் சொந்தம் என்பது போல இருக்கும். 

அந்த குழந்தை சொன்னது,’’அங்கிள்! இந்த ஊரை மயிலாடுதுறை என்று சொல்வதை விட ஆடுதுறை என்று சொல்லலாம். அவ்வளவு ஆடுகள் இருக்கின்றன.’’

எனக்கு குழந்தையின் அந்த அவதானம் மகிழ்ச்சியைத் தந்தது. 

அப்போது ஒரு மைதானத்தில் வாத்து மேய்ப்பவர்கள் தற்காலிகமாக கூடாரம் கட்டி அங்கே இருந்தனர். எங்கள் பகுதிகளில் வெளியூர்களிலிருந்து நடவுக்கு முன்னால் வாத்து மேய்ப்பவர்கள் வருவார்கள். வயலில் வாத்துக்கள் மேயும். வாத்தின் கழிவு வயலுக்கு நல்ல உரம். சில நாட்கள் இருந்து விட்டு அடுத்த ஊருக்குச் சென்று விடுவார்கள். செங்கற்களை வைத்து ஃ போன்ற உருவம் உருவாக்கி அதில் அடுப்பு எரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய குழந்தைகள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தன. நான் அழைத்துச் சென்ற குழந்தையை அங்கே இருந்த குழந்தைகளுடன் சேர்ந்து கொஞ்ச நேரம் விளையாடச் சொன்னேன். அவை விளையாடின. பரஸ்பரம் பேசிக் கொண்டன. நாங்கள் விடைபெற்றுக் கிளம்பினோம்.

நான் பைக்கில் வரும் போது கேட்டேன். 

‘’நாம வசதியான வீட்ல இருக்கோம். நிறைய டிரஸ் வைச்சிருக்கோம். ஸ்கூலுக்குப் போறோம். காலேஜ் போறோம். வெளிநாடு போறோம். வேலைக்குப் போறோம்.  அவங்க எந்த வசதியும் இல்லாம இருக்காங்க. நீ அவங்களைப் பாக்கும் போது என்ன நினைப்ப?’’

‘’நாம இருக்கோம். அவங்களும் இருக்காங்கன்னு நினைப்பன்’’

‘’அப்படி நினைக்கக் கூடாது. அவங்களும் நம்மைப் போல உள்ளவங்கன்னு நினைக்கணும். நாம செய்ற காரியங்கள் நம்மோட யோசனைகள் எல்லாமும் அவங்களுக்கு பயன்படறா மாதிரி இருக்கணும்.’’

‘’அப்படியா’’

‘’அந்த குழந்தைகள் படிக்கணும். அவங்களுக்கு நல்ல வீடு கிடைக்கணும். தினமும் சாப்பாடு கிடைக்கணும். அதுக்காகல்லாமும் நீ யோசிக்கணும்’’

‘’நான் யோசிச்சா இதெல்லாம் எப்படி நடக்கும்?’’

’’உன்னோட படிப்பு அவங்களோட வறுமையை நீக்கறதா இருக்கணும். உன்னோட உத்யோகத்தால அவங்களுக்கு நல்லது நடக்கணும்.’’

‘’என்னால முடிஞ்சதை நான் கண்டிப்பா செய்வன் அங்கிள்’’