Wednesday 13 November 2019

தேவையும் அவசியமும்

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். மிகவும் நெருங்கிய நண்பர். சமீபத்தில் என்னிடம் மிகவும் கோபித்துக் கொண்டார்.

‘’எட்டாயிரம் ரூபாய்க்கு நல்ல ஸ்மார்ட் ஃபோன் கிடைக்கிறது. அதில் ஏன் உங்களுக்கு அவ்வளவு கஞ்சத்தனம். வாங்கி வைத்துக் கொள்ளலாம் தானே?’’

அவர் என்னை - எனது இயல்பை  பல  வருடங்களாக  அறிந்தவர். அவர்  நான் செலவு செய்ய மனமின்றி வாங்காமல் இருப்பதாக நினைக்கிறாரே எப்படிப் புரியவைப்பது என்று யோசித்தேன்.

‘’நீங்கள் நினைப்பது போல இல்லை. ஸ்மார்ட் ஃபோன் தொலைத்தொடர்பு, இணையம், பணப்பரிமாற்றம் மற்றும் பல செயல்பாடுகளை ஒன்றாய் வழங்குகிறது. நான் இணையத்துக்கு லேப்டாப்பைப் பயன்படுத்துகிறேன். பணப்பரிமாற்றத்தையும் நான் அதிலேயே செய்ய முடியும். எனக்கு பெரிய அளவில் ஸ்மார்ட்ஃபோன் பயன்படாது  என்பதால்தான் வாங்காமல் இருக்கிறேன்’’  என்று  சொன்னேன்.

‘’நீங்கள் இவ்வளவு பேசுவதற்கு  ஸ்மார்ட்ஃபோன்  வாங்கி  விடலாம் பிரபு’’

நாங்கள் ரயிலில்  பயணிக்க  ஒரு  ரயில் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். பயணச்சீட்டு  சாளரம் முன்னே முப்பது பேர் நின்று கொண்டிருந்தார்கள். நண்பரும்  அதில் இணைந்து கொண்டார்.

நான்  அவரிடம், ‘’ஏன் வரிசையில் நிற்கிறீர்கள்’’ என்று கேட்டேன்.

‘’டிக்கெட் எடுக்க’’

‘’உங்களிடம் தான் ஸ்மார்ட்ஃபோன் இருக்கிறதே. பின் ஏன் வரிசையில்  நிற்கிறீர்கள்?’’

‘’அதற்கும்  இதற்கும் என்ன?’’

''இந்திய ரயில்வேயின் செயலியை உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் டவுன்லோடு செய்து கொண்டால் நாம் ஸ்மார்ட்ஃபோன் மூலமே டிக்கெட் எடுத்து  விடலாம்’’

‘’அதெல்லாம்  எனக்குத் தெரியாது’’

அவரிடமிருந்து ஸ்மார்ட்ஃபோனை வாங்கினேன். ரயில்வேயின்  செயலியைத்   தரவிரக்கம்  செய்தேன்.  கியூ ஆர் கோட்  ஸ்கேன் செய்து டிக்கெட்  எடுத்து விட்டேன். அவர்  ஃபோனில் ஓலா  ஆப் இருந்தது. ரெட்பஸ் ஆப் இருந்தது. அமேசான் பிரைமில் உறுப்பினராக  இருந்தார். 

ஸ்மார்ட்ஃபோன்  இருப்பவர்கள் அதன் மூலம் ரயில் டிக்கெட் எடுத்தால் என்னைப்  போன்று  ஸ்மார்ட்ஃபோன் இல்லாதவர்கள் டிக்கெட்  சாளரத்தின் முன் அதிக கூட்டமின்றி விரைவில் டிக்கெட் எடுத்திட  முடியும்.