Wednesday 6 November 2019

அடித்தளமும் கட்டிடமும்


இன்று காலை நடைப்பயிற்சிக்குச் சென்ற போது எனது தெருவாசியான நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். நல்ல மனிதர். பெரும்பாலும் பொழுது புலரும் முன் நான் நடக்கக் கிளம்பி விடுவேன். இன்று தாமதமாக எழுந்தேன்  என்பதால்  வழக்கமாக  பயிற்சியை முடிக்கும் நேரத்தில் துவங்கினேன். எனவே சந்திக்க நேரிட்டது. ஒன்றாக நடந்தோம். இன்றைய பயிற்சி வாக்கிங் ஆக இருக்காது; டாக்கிங் ஆக மாறும் என நினைத்தேன். அவ்வாறே ஆனது.

காவல்துறை டி.ஜி.பி ஆக இருந்த விஜயகுமார் குறித்து பேச்சு வந்தது. அதன் நீட்சியாக வீரப்பனைப் பற்றி. விஜயகுமாரைக் கடுமையாக வசை பாடினார். நான் மெதுவாக ஆரம்பித்தேன்.

‘’அரசாங்கம் என்பது மிகப் பெரிய அமைப்பு. இந்திய அரசாங்கம் உலகின் சிக்கலான அமைப்புகளில் ஒன்று. அரசின் இயங்குமுறையே இந்திய மாநிலங்களில் வேறுபடும். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு பழக்கம்  உடையது. அரசாங்க அதிகாரிகள் அவர்கள் எல்லைக்குள் அவர்களுக்குத் தரப்படும் வேலையைச் செய்பவர்கள். உங்களுக்கு அவர் மேல் ஏன் தனிப்பட்ட வெறுப்பு?’’

‘’அவர் மலையாளி’’ என்றார் நண்பர்.

‘’அவரை வெறுக்க இந்த காரணம் மட்டும் போதுமா?’’

‘’வீரப்பனை அவர் கொன்றார்”

’’வீரப்பனைக் கொன்றார் என்பதற்காக விஜயகுமாரை வெறுக்கும் நீங்கள் தனது கைக்குழந்தையான சொந்த மகளைக் கொன்ற வீரப்பன் மீது எவ்வாறு மதிப்பு வைத்துள்ளீர்கள்?’’

நண்பர் மௌனமானார். சில வினாடிகள் அமைதியாக நடந்தோம்.

நான் நேரடியாகக் கேட்டேன். ‘’சாதிதானே உங்களுக்கும் வீரப்பனுக்கும் பொதுவானது?’’

நண்பர் ஆமாம் என ஒத்துக் கொண்டார்.

எனக்குச் சோர்வாக இருந்தது. தமிழ்நாட்டில் இந்த சோர்வு அடிக்கடி ஏற்படும். தமிழர்கள் இந்த சோர்வை அடிக்கடி உருவாக்குவார்கள்.

லட்சக்கணக்கான தமிழ் மக்களுக்கு தான் வசிக்கும் இடத்தைத் தூய்மையாக வைத்திருப்பது போல பொது இடத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது தெரியவில்லை. இந்திய விடுதலை என்பது ஒரு மாமனிதர் மேல் சாதி, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து அவர் சொற்கள் மேல் நம்பிக்கை வைத்த லட்சோப லட்சம் மக்கள் அவர் தலைமையை ஏற்றதால் – அவர் முன்வைத்த மேலான மதிப்பீடுகளின்  மேல் வைத்த நம்பிக்கையால் –சாத்தியமானது என்பது தெரியவில்லை.

அந்த நம்பிக்கையின் விளைவாக உருவாக்கப்பட்ட ஜனநாயகத்தின் மீது அமர்ந்தவாறு சாதிக்காக எதையும் நியாயப்படுத்தலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

அந்த மாமனிதர்
1. இந்திய நுகர்வின் பயன் இந்தியாவின் பெரும் உற்பத்தியாளனான பருத்தி விவசாயிக்குச் செல்ல  வேண்டும் என்பதற்காக கதர்த்துணிகளை உடுத்த வேண்டும் என்று ஓயாமல் கேட்டார்.

2. நமது சுகாதாரப் பண்புகளே நம்மைக் காக்கும்; நம்மை உலகம் உயர்வாய் மதிப்பிட வைக்கும் என்பதால் தூய்மையை நாளும் வலியுறுத்துவதை தனது அரசியலாகக் கொண்டார்.

3. மானுட குலம் அடையச் சாத்தியமான மேலான வழிமுறைகளை சமூக வாழ்வியலுக்கு முன்வைத்தார்.

4. எக்காரணம் கொண்டும் வெறுப்பு பொது வாழ்வில் இருக்கக் கூடாது என நினைத்தார்.

அவர் உருவாக்கிய அடித்தளத்தில் நாம் எழுப்பும் கட்டிடம் எவ்விதமானது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.