Friday 10 January 2020

ஆயிரம் புத்தகங்கள்


எங்கள் இல்லம் விசாலமானது; பெரியது. கூடம், அறைகள், வாகன நிறுத்தம் ஆகியன ஒவ்வொன்றுமே பெரியவை. தரைத்தளம், முதல் தளம் என இரண்டு மாடிகள் கொண்டது. முதல் தளத்தில் இரண்டு பெரிய அறைகள். அங்கேயிருந்து தரைத்தளத்தில் உணவுக்கூடத்தைக் காண முடியுமாறு வடிவமைக்கப்பட்டவை. தரைத்தளத்தில் ஒரு அறை உண்டு. வீட்டில் இரண்டு தென்னை மரங்கள் இருக்கின்றன. வீட்டின் முன் ஒரு வேப்ப மரம் இருக்கிறது. கொல்லைப் பக்கத்தில் கருவேப்பிலை மரமும் வாழை மரமும் உண்டு. அப்பா மாடித்தோட்டம் போட்டிருக்கிறார். அதில் ஒரு செம்பருத்திச் செடி மரமாக வளர்ந்து அவ்வப்போது பூக்கிறது. காலை வீட்டு வாசலில் அம்மா கோலமிடும் நேரத்தில் அம்மா வாசலுக்கு வருவதைப் பார்த்ததும் முப்பது பறவைகள் கிரீச் கிரீச் என்று கீச்சிட்டுக் கொண்டு சூழ்ந்து கொள்ளும். தவிட்டுக் குருவி, மைனா, வால் காகம். காகம் ஆகியவை வந்து விடும். பறவைகளுடன் சில அணில்களும் வந்து விடுகின்றன. அம்மா கோலமிட சிறிது தாமதமானால் வீட்டினுள் மெல்ல அடி எடுத்து வைத்து கூடத்தினுள் நுழையும்.

கடந்த வாரம் எனது அறையிலும் தந்தையின் அறையிலும் Cup boardக்கு கதவு போடும் வேலை நடந்தது. ரொம்ப நாளாக செய்ய நினைத்த வேலை. தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. அம்மா அதனை உடன் செய்ய வேண்டும் என்று பிரியப்பட்டார்கள். வேலை துவக்கப்பட்டது. நான்கு ஆசாரிகள் ஒரு வாரம் வேலை செய்தார்கள். வீடெங்கும் மரத்தூள் பரவியிருந்தது. டிரில்லிங் மெஷின் இயங்கிக் கொண்டிருக்கும் சத்தம். வீடு பல வருடமாகப் பழகியிருந்த இயங்குமுறையில் இந்த ஒரு வாரம் சற்று மாற்றம் கண்டது. 

என்னுடைய அறை முழுதும் புத்தகங்களே நிரம்பியிருக்கும். என்னுடைய மேஜையிலும் புத்தகங்களே. அவற்றை அடுக்கி விட முடியுமா என்பது எனக்கு ஓர் ஐயமாகவே இருந்தது. எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன என்பதையும் நான் கணக்கிட்டிருக்கவில்லை. என்னுடைய அறையின் ஷெல்ஃப்கள் பெரியவை. புத்தகங்களை அவற்றில் அடுக்கி வைத்தால் முன்னால் உள்ள புத்தகங்கள் பின்னால் உள்ள புத்தகங்களை மறைத்து விடும். எல்லாப் புத்தகமும் கண்ணில் படுமாறு ஷெல்ஃபை மூன்று அடுக்காகப் பிரித்து புத்தகங்கள் வைக்க ஏற்பாடு செய்யுமாறு கூறினேன். அதே போல அமைக்கப்பட்டது. என்னுடைய ஷெல்ஃபில் எல்லா புத்தகங்களையும் அடுக்கியுள்ளேன். ஒரு முறையான அடுக்கில் அமைக்கப்பட்டுள்ளதால் எத்தனைப் புத்தகங்கள் இருக்கின்றன என்று கணக்கிட்டேன். ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் இருந்தன. மலைப்பாக இருந்தது. மனதில் ஒரு மெல்லிய கலக்கம் ஏற்பட்டது.

ஐந்து வயதிலிருந்து புத்தகங்கள் வாசிக்கிறேன். கவிதை, நாவல், சிறுகதை, வரலாறு, சமூகவியல், அறிவியல், அரசியல், பொருளாதாரம், மொழி, தமிழின் மரபிலக்கியங்கள், சமய இலக்கியங்கள் என நூல்களின் வகைப்பாடு விரிவடைந்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு புத்தகத்தையும் கையில் எடுத்து அடுக்கும் போது அது வாங்கப்பட்ட சூழல் அதன் வாசிப்பு அனுபவம் ஆகியவை நினைவில் எழுகின்றன. புத்தகங்கள் எனக்கு எத்தனையோ வாழ்க்கைகளைக் குறித்து எடுத்துச் சொல்லியிருக்கிறது. எத்தனையோ மனிதர்களைப் புரிந்து கொள்ள உதவியிருக்கிறது. சுயமாகச் சிந்திக்க சுயமாக முடிவெடுக்க துணை புரிந்திருக்கிறது.

தமிழ்க் கவி ஔவை ‘’கற்றது கைம்மண் அளவு’’ என்கிறாள்.

வாணி கலைத்தெய்வம் மணிவாக்கு உதவிடுவாள்
ஆணிமுத்தைப் போல அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெல்லாம் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.

என்கிறான் பாரதி.