Thursday 16 January 2020

மகர சங்கராந்தி

இந்தியா ஒரு விவசாய நாடு. பள்ளிப்பாடங்களில் பலமுறை இதனைப் படித்து தேர்வுகளில் பதிலாக எழுதியிருப்போம். எனினும் நாம் - நமது எல்லா செயல்கள் - நமது பழக்கவழக்கங்கள் - நமது பண்பாடு என அனைத்தையுமே இந்த ஒரு வரியிலிருந்தே துவங்கி நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நம்மைப் புரிந்து கொள்ள நமது மண்ணின் விவசாயத்திலிருந்தே நாம் எதையும் துவங்க வேண்டும். நமது நாட்டுக்கு மட்டுமல்ல எந்த ஒரு நாட்டின் வரலாறும் பண்பாடும் அந்த நாட்டின் விவசாயத்திலிருந்தே துவங்குகிறது. துவக்கம் ஒரே புள்ளியிலிருந்து என்றாலும் மானுடப் பண்பாட்டுக்கு நாம் அளித்திருக்கும் பங்களிப்பில் நம் நாடு உலகின் எந்த நாட்டை விடவும் பல படிகள் முன்னால் இருக்கிறது. 

இன்றும் இந்திய நிலத்தில் பயணிக்கும் போது நாம் ஒன்றை உணரலாம். மாநகரங்கள், நகரங்கள், சிறுநகரங்கள் ஆங்காங்கும் அவற்றுக்கு இடையே வான் போன்று விரிந்த பெரும் நிலப்பரப்பு எங்கும் பரவியும் இருப்பதைக் காண முடியும். இங்கே பெரும் பண்ணைகள் மிக மிகக் குறைவே. இரண்டு ஏக்கரிலிருந்து ஐந்து ஏக்கர் வரையிலான நிலத்தை உரிமையாகக் கொண்ட லட்சக்கணக்கான விவசாயிகளே இன்றும் நாடெங்கும் இருக்கிறார்கள். இந்திய வரலாறு குறித்த ஆரம்பகால தகவல்கள் ஐயாயிரம் ஆண்டுகளாகக் கிடைக்கின்றன எனக் கொண்டால் அன்றிலிருந்து இன்று வரை சிறு ஏற்ற இறக்கங்களுடன் ஏறக்குறைய இதே நிலையே நீடிக்கிறது. இந்த அடித்தளத்திலிருந்தே இந்தியப் பண்பாட்டின் எல்லா சாதனைகளும் எழுந்து வந்துள்ளன.

இந்தியப் பண்பாடு ஏன் நதிகளை அன்னையராகக் கருதுகிறது? இந்த கேள்விக்கான பதிலை எளிமையாகக் கூற முடியும். எங்கே நதிகள் பாய்கின்றனவோ அந்த மண் விளைச்சலை அமோகமாய்த் தருகின்றது. விளைச்சல் நல்ல முறையில் இருக்கும் பிரதேசத்தில் இரும்புக் கருவிகள், கலை நுட்பம் வாய்ந்த பொருட்கள், தறி நெசவு, தச்சு வேலை மற்றும் கட்டிடத் தொழில் ஆகியவை சிறப்பாக அமைகின்றன. அங்கே மனிதர்கள் குழுமுகிறார்கள். அவர்களை நெறிப்படுத்தி ஓர் அரசை உருவாக்க பொது நியதிகள் உருவாக்கப்படுகின்றன. அந்த அரசும் நிர்வாகமும் மக்களுக்குப் பாதுகாப்பைத் தருகிறது. அதனால் வளர்ச்சி சாத்தியமாகிறது. வளர்ச்சியை அடிப்படையாய்க் கொண்ட அரசுகள் நீடித்து நிற்கின்றன.

இந்தியாவில் நீர், மண், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவை இறை வடிவமாகக் கருதப்படுவதற்கு காரணம் அவை விவசாயத்துடன் - விவசாயியின் மனநிலையுடன் நேரடியான தொடர்புடையவை என்பதே. இந்தியாவில் சூரியன் கடவுளாக வழிபடப்படுவது இந்திய வரலாறு குறித்த துவக்க கால குறிப்புகளிலிருந்தே தெரிய வருகிறது. இராமாயணத்தில் இராமனுக்கு அகத்தியர் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை உபதேசிக்கிறார். மகாபாரதத்தில் கர்ணன் சூர்யபுத்திரனாகக் கருதப்படுகிறான். ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஷண்மதங்களில் சௌரம் ஒன்று. 

இந்தியாவின் பாரம்பர்யமான நாட்காட்டிகள் விவசாயத்துக்காக உருவாக்கப்பட்டவை என்பது நாம் அறிய வேண்டிய ஒன்று. புவியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்பது நிரூபணவாத அறிவியல் படி நிறுவப்பட்டதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஓர் ஆண்டு என்பது 365 நாட்கள் என எல்லா இந்திய நாட்காட்டிகளிலும் கணக்கிடப்பட்டுள்ளன. உலகின் மற்ற பகுதிகளிலும் நாட்காட்டிகள் சற்றேறக்குறைய 365 நாட்கள் எனக் கணக்கிட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பஞ்சாங்கம் என்பதை மதத்துடன் தொடர்புபடுத்தும் ஒரு பிரச்சாரம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் அதன் அடிப்படை விவசாயத்துக்கானது. எந்த மாதம் எப்போது மழைப்பொழிவு இருக்கும் என்பதைக் கணித்து அதன்படி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட கணக்கீடே பஞ்சாங்கம் என்பது.

இந்தியாவில் நாம் இன்றும் நினைவில் கொள்ளும் பேரரசுகள் எவை என்று யோசித்துப் பார்த்தால் அவற்றுக்கு சில பொதுத் தன்மைகள் இருப்பதை உணர முடியும்.  அவை பாசன வசதிகளைப் பெருக்கிய அரசுகளாக இருக்கும் அல்லது சாலைகள் மூலம் நகரங்களை இணைத்த அரசுகளாய் இருக்கும். 

இன்றும் சென்னை மக்கள் அருந்தும் பயன்படுத்தும் ஒவ்வொரு துளி நீரும் சோழ மன்னர்கள் தம் மக்களைக் கொண்டு தம் மக்களுக்காக உருவாக்கிய வீர நாராயண ஏரியில் சேகரமாகும் மழை நீரும் ஆற்று நீருமே. தெலங்கானாவின் பல ஏரிகள் காகதீயர்களால் வெட்டப்பட்டவை. கர்நாடகாவின் குளங்களை ஹொய்சாளர்கள் ஊருக்கு ஊர் வெட்டினர். தென் தமிழ்நாட்டின் ஊருணிகளும் சாலைகளும் மதுரை நாயக்கர்களால் உருவாக்கப்பட்டவை. திருவிதாங்கூர் அரசர்கள் பல பாசனக் கால்வாய்களை வெட்டினர்.

இந்திய மனநிலையை கடந்த இருநூறு ஆண்டுகளின் பலவிதமான நிகழ்வுகள் பற்பல எதிர்மறையான இடத்துக்குக் கொண்டு சென்று விட்டன. பஞ்ச சாவுகள் குறித்த தரவுகள் பெரும்பாலான இந்தியர்கள் அறியாதவை என்றாலும் அந்த பஞ்சங்கள் சக மனிதனை நம்பாதே; சக மனிதனுடன் இணையாதே என்ற சமூகவியலை இந்தியப் பொதுப்புத்தியில் உருவாக்கி விட்டது. இருநூறு ஆண்டுகளில் நிலைபெறவும் செய்து விட்டது.

மகாத்மா காந்தி இந்திய சுதந்திரத்துக்குச் சமமாகவே கதர் இயக்கத்தை முன்னெடுத்தார். கதர் ஆடை மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கைமுறை; அது ஒரு பிரகடனம்; இந்தியர்கள் கதர் வாங்குவதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு சக இந்திய விவசாயியின் ஒரு சக இந்திய நெசவாளியின் முகத்தில் புன்னகையைக் கொண்டு வருகிறார்கள். நம்மை ஆட்சி செய்த பிரிட்டிஷார் 73 ஆண்டுகளுக்கு முன்னால் நம் நாட்டை விட்டு நீங்கி விட்டனர். நாம் இன்று நமது நாட்டை நமது விவசாயத்தை நமது பண்பாட்டைக் குறித்து எந்த அளவு புரிந்து வைத்திருக்கிறோம் அதற்காக நாம் எவ்விதமான பங்களிப்பை ஆற்றுகிறோம் என வினா எழுப்பிக் கொள்வதற்கான தருணம் இது.