Thursday 30 January 2020

நுண் மாற்றங்கள்


சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. எனது நண்பர் ஒருவர் அமெரிக்காவில் மென்பொறியாளராக இருக்கிறார். அவர் இங்கே மயிலாடுதுறைக்கு அருகே ஒரு கிராமத்தில் விவசாய நிலம் வாங்க விரும்பினார். அவர் இங்கு வருவதற்கு உடனடியாக வாய்ப்பின்றி சில ஆண்டுகளுக்கு அமெரிக்காவிலேயே இருந்தாக வேண்டும் என்ற நிலை. எனவே நான் முன்னின்று அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பெயரில் நிலம் வாங்கித் தந்தேன். நிலத்தைக் கிரயம் பேசியது முதல் பத்திரப்பதிவு செய்து பட்டா மாற்றம் செய்தது வரை என்னுடைய பணி. வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களுக்கு நான் இது போல உதவிகள் செய்வதுண்டு. நான் எந்த பணியையும் ஒரே மூச்சாகச் செய்யக் கூடியவன். எனது இந்த இயல்பு சொத்து வாங்குவதிலும் விற்பதிலும் உதவும்.

நல்ல மேட்டுப்பாங்கான வடிகால் வசதியுள்ள தண்ணீர் மேல்மட்டத்தில் இருக்கும் நிலத்தை நண்பருக்கு வாங்கிக் கொடுத்தேன். அதாவது நண்பர் குடும்ப உறுப்பினர்களுக்கு. விலை கிரயம் பேசி கிரயத் தொகை முழுவதும் கொடுக்கப்பட்டது. பத்திரப்பதிவு செய்யும் நாள் வந்தது.

நான் பத்திரம் எதுவும் வாங்கவில்லை. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புக்கு பத்திரம் வாங்கினால் சில ஆயிரம் ரூபாய் பத்திரம் வாங்குவதற்கான கமிஷனாகத் தர வேண்டும். அது எனக்கு அனாவசியம் என்று பட்டது. நான் பத்திர மதிப்புக்கு வங்கி வரைவோலையாக எடுத்துக் கொடுத்தேன். பத்திரத்துக்கான கமிஷன் தொகையில் கால்பங்கு கூட அதற்காக ஆகவில்லை. பத்திரப்பதிவுக்கு தாக்கல் செய்தோம். அச்சிடப்பட்ட சாதாரண காகிதத்தில் பத்திர வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன. அந்த அலுவலகத்தில் அவ்வாறு பதிவு செய்யப்படுவது அநேகமாக முதல் முறை என்றார்கள்.

அங்கே இருந்த அலுவலக ஊழியர் ஒருவர், ‘’தம்பி! இங்கே ஒரு பொது வழிமுறை என்ற ஒன்று காலகாலமாக உருவாகியிருக்கிறது. அதை ஏன் மாற்றுகிறீர்கள்?’’ என்றார்.

‘’நான் எதையும் மாற்றவில்லை. அரசாங்கம் அனுமதிக்கும் வழிமுறைகளில் ஒன்றை எங்களுக்கு லாபம் அளிப்பது என்பதால் செய்திருக்கிறேன்’’ என்றேன்.

‘’இதனால் எங்கள் வேலைப்பளு கூடும்’’ என்றார்.

‘’சில ஆண்டுகளுக்கு முன்னால் போலி முத்திரைத் தாள்கள் சந்தையில் நுழைந்தன. அதைத் தடுக்க நான் பின்பற்றியது நல்ல முறை’’ என்றேன்.
‘’சில விஷயங்களை மாற்ற முடியாது தம்பி’’ என்றார்.

பின்னர் பட்டா மாற்றம் செய்ய வருவாய்த்துறையில் விண்ணப்பங்களைத் தந்தேன். அதனைப் பார்த்து விட்டு அங்கிருந்த ஒருவர், ‘’நான் 21 வயதில் வேலைக்குச் சேர்ந்தேன். இப்போது 57 வயது. அடுத்த வருடம் ரிடையர் ஆகிறேன். இந்த 36 வருடத்தில் வெறும் தாளில் அச்சிடப்பட்ட இந்த மாதிரியான பத்திரத்தை முதல்முறையாக இப்போது தான் பார்க்கிறேன்’’ என்றார்.

அரசாங்கம் இப்போது பத்திரப்பதிவுத் துறையை முற்றிலும் கணிணிமயமாக்கியுள்ளது. முத்திரைத் தாளுக்குரிய தொகையை பத்திரமாக வாங்க வேண்டிய அவசியமில்லை; டெபிட் கார்டு மூலம் இணையம் வழியாகச் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது. பத்திரப்பதிவுத் துறையின் இணையதளம் முத்திரைத் தாள் பயன்படுத்துவதை கட்டாயமில்லை என்கிறது.

மாற்றம் நிகழாமல் இல்லை; மெல்ல நிகழ்கிறது. அவ்வளவே.